ரஜினியுடனான சந்திப்பு: நெகிழ்ச்சியில் லட்சுமி மற்றும் முத்து கணேசன்

ரஜினியுடனான சந்திப்பு குறித்து பெரும் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள் முத்து கணேசன் மற்றும் லட்சுமி.

ரஜினிகாந்த் இன்று சென்னையில் 4-வது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்றைய நிகழ்வின் போது ரசிகர்களிடம் மனம் திறந்து எதுவும் பேசவில்லை. ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சரியாக 9 மணிக்கு மண்டபத்துக்குள் வந்துவிட்டாலும், சுமார் 10 நிமிடங்கள் கழித்து தான் புகைப்படம் எடுக்கும் இடத்துக்கு வந்தார். பல ரசிகர்கள் இன்று அவருடைய காலில் விழுந்தனர். சுற்றியிருந்தவர்கள் காலில் விழக்கூடாது என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

இன்று வந்திருந்தவர்களில் பலர் கையில் செயின், மோதிரம் ஆகியவற்றை எடுத்து வந்து ரஜினியின் கையில் கொடுத்து, அதை அவருடைய கையால் போட்டுவிடச் சொன்னார்கள். ரஜினியும் கேட்டவர்கள் அனைவருக்குமே மறுப்பு ஏதும் சொல்லாமல் அணிவித்துவிட்டார்.

ரசிகர்களுடன் வந்திருந்த குழந்தைகள் அனைவரையும் தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனால் பல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ரசிகர் கொடுத்த ருத்ராட்சை மாலை

முத்துகணேசன் என்ற ரசிகர், பெரிய ருத்ராட்சை மாலை ஒன்றை ரஜினியின் கையில் கொடுத்தார். அதை அவருடைய கழுத்தில் போட ரஜினி முற்பட்ட போது "இது உங்களுக்குத் தான் தலைவா" என்று பதிலளித்தார். எங்கே வாங்கியது உள்ளிட்ட விவரத்தை கூறவே, இருவருக்குமான உரையாடல் சில விநாடிகள் நீடித்தது.

ரஜினி என்ன கூறினார் என்பது குறித்து முத்துகணேசனிடம் கேட்ட போது, "இமயமலையில் உள்ள கைலாஷ் சென்றிருந்த போது வாங்கிய ருத்ராட்சை என்றேன். எனக்கு அணிவிக்க முற்பட்ட போது, உங்களுக்குத் தான் என்று தெரிவித்தேன். "எனக்கா.. சந்தோஷம் மகிழ்ச்சி" என்று தலைவர் கூறினார். நல்ல தரிசனம் செய்தீர்களா என்று கேட்டார். அதற்கு, மலையைச் சுற்றிவந்து பரிக்காரமம் செய்தேன் என்றேன். ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது" என்று தெரிவித்தார்.

போராடி புகைப்படம் எடுத்த லட்சுமி

ரசிகர்கள் அனைவரும் வரிசையில் நின்று புகைப்படம் எடுத்த போது, வயதான பெண்மணி ஒருவர் மண்டபத்துக்குள் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். ஆனால், எந்த மாவட்டம், கையில் கார்டு இருக்கிறதா என்று சுற்றியிருப்பவர்கள் விசாரித்தனர். இறுதியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படம் எடுக்கும் போது தனது கையிலிருந்த சில பேப்பர்களை ரஜினியிடம் கொடுத்து பேசினார். பின்னால் இருந்த பவுன்சர் தடுக்கவே, ரஜினி கையசைத்து விடுங்கள் என்று கூறிவிட்டு, அப்பெண்மணி கொடுத்தவற்றை படித்து பார்த்தார். இறுதியில் கண்டிப்பாக என கூறவே, பெண்மணி சென்றுவிட்டார்.

இறுதியில் மண்டபத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தவரிடம் பேசிய போது, "என் பெயர் லட்சுமி. மதுரையிலிருந்து வந்திருக்கேன். மகன் மிகப்பெரிய ரஜினி ரசிகன்.அவனுக்கு இப்போது புத்தி சரியில்லை. ஆகையால், உதவிகள் செய்தால் மகிழ்வேன் என்று ரஜினியிடம் ரேஷன் கார்டு, லெட்டர் உள்ளிட்டவற்றைக் கொடுத்தேன். கண்டிப்பாக செய்கிறேன் என தெரிவித்தார் தம்பி" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE