திரையில் போதை : தீதும் நஞ்சும்

இருபதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்த புதிதில் சில அறிவுபூர்வமான நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் அனைவருமே ‘அறிவுஜீவி’ என்னும் பிரிவைச் சேர்ந்தவர் கள் என்பதை சில சந்திப்புக்களில் அறிந்துகொண்டேன். நடைபாதைக் கடைகளில் கிடைக்கும் உலகசினிமா டிவிடிக்கள் அப்போதில்லை. தீவிரத் திரைப்பட ஆர்வலர்கள் நடத்துகிற ஒரு சில திரைப்பட விழாக்களில் மட்டுமே உலகின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க முடியும். ‘அறிவுஜீவி’ நண்பர்களுடன் திரைப்பட விழாக்களுக்குச் செல்லத் துவங்கினேன்.

படம் முடிந்ததும் பார்த்த படங்கள் குறித்த விவாதம் திரையரங்கின் வாயிலிலேயே துவங்கும். அண்டோனியோனிக்கும் லா.ச. ராமாமிர்தத்துக்கும் முடிச்சு போட்டுச் சில கருத்துகளை முன்வைப்பார் ஒருவர். கீஸ்லோவ்ஸ்கியை நகுலனுடன் ஒப்பிடுவார் மற்றொருவர். இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலேயே வாழ்வின் எத்தனைப் பொன்னான தருணங்களை வீணடித் திருக்கிறோம் என்று மனதுக்குள் குமைவேன்.

ரகளையில் முடிந்த விவாதம்

“நாளைக்கு மிக முக்கியமான விவாதம் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க பிரதர். புதுமைப்பித்தனும், ரித்விக் கட்டக்கும்தான் டாப்பிக்” என்று நண்பர் சொன்னதன் பேரில் ஆவலுடன் சென்றேன். தாம்பரம் அருகே ஏதோ ஒரு பகுதியின் ஒரு மொட்டை மாடி. தரையில் ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்தோம். பச்சையும், பழுப்புமாகக் காட்சியளித்த ஒரு பெரிய பாட்டிலை நடுநாயகமாகக் கொண்டு வைத்து, அதற்குத் துணையாகச் சில கண்ணாடி, மற்றும் எவர்சில்வர் தம்ளர்கள். “டேய் தம்பி. இது உனக்குடா”. ஒரு பொட்டலம் நிறையக் காராபூந்தி எனக்கு வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் அத்தனை பிரியமும், வாஞ்சையுமாக மதித்து, வியந்து அவரவர் கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதம் தொடங்கியது.

புதுமைப்பித்தன் ஒரு எழுத்தாளரே அல்ல என்றார் ஒரு அண்ணன். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. புதுமைப்பித்தனை அவர் சிறுமைப்படுத்துகிறாரே என்கிற அதிர்ச்சியை விட, தீவிரப் புதுமைப்பித்தனின் வாசகரான இன்னொரு அண்ணன் இப்போது என்ன சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் பொறுமையாக மற்றவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம், “அவரோட கருத்த அவர் சொல்றாரு. அவரோட பார்வைல புதுமைப்பித்தன் அவருக்கு ஒண்ணுமில்லாம இருக்கலாம் இல்லியா! அது மூலமா நமக்குத் தெரியாத கோணங்கள் கெடைக்க வாய்ப்பிருக்கு. கவனி” என்றார். மாற்று அபிப்ராயம் சொல்கிறவர்களை மதித்துச் செவிசாய்க்கும் அடிப்படை நாகரிகமெல்லாம் எனது சிற்றறிவுக்கு அப்போதுதான் தெரியவந்தது. எத்தனை உயர்ந்த மனிதர்களின் தொடர்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியில் மனதும், தொடர்ந்து தின்ற காராபூந்தியால் வயிறும் நிறைந்தது.

ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே புதுமைப்பித்தனின் ஆதரவாளர், புதுமைப்பித்தனை ஒத்துக்கொள்ளாத நண்பரின் தாயார் குறித்துச் சொன்ன ஒரு தகாத வார்த்தையில் துவங்கியது ஆரோக்கியமான விவாதத்தின் அடுத்த கட்டம். பதிலுக்கு அவர், இவரது சகோதரியின் கற்பு குறித்த தனது சந்தேகத்தை அந்தச் சபையில் முன்வைத்தார். விவாதத்தின் அடுத்த நிலையில் ஒரு வேட்டியும், சில சட்டைகளும் கிழிந்தன. ஒரு நண்பரின் பல் உடைந்து லேசாக ரத்தம் வந்தது. அவர்தான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்தவர். அடுத்துச் சாப்பிடலாம் என்று நான் ஆசையுடன் பார்த்து வைத்திருந்த மசாலாக் கடலைகள் தரையில் சிதறி உருண்டன. உச்சக்கட்டமாகப் பாட்டிலை உடைத்து ஒருவரின் இருதயத்தைக் குறி வைத்து ஒரு சஹிருதயர் குத்த முயன்றபோது நான் அந்த இடத்தை விட்டுக் காணாமல் போயிருந்தேன். அதற்குப் பிறகு அந்தக் கும்பலில் இருந்த ஒரு மனிதரைப் பல வருடங்களுக்குப் பிறகு, நரைத்த தாடியும், அழுக்கு உடையுமாக வடபழனியில் இருபத்து நான்கு மணிநேர மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது.

நாகு அண்ணனின் கதை

நான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்த, குடிக்கிற மனிதர் யார் என்பதை யோசித்துப் பார்த்தால் நாகு அண்ணன்தான் நினைவுக்கு வருகிறார். ஒரு விற்பனை நிறுவனத்தின் வேன் ஓட்டுனரான நாகு அண்ணன் சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டபடி தனது மைனர் செயின் வெளியே தெரிய வேன் ஒட்டுவார். யாரிடமும் அதிர்ந்தோ, இரைந்தோ பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைக்கிற முகம். சாலையில் நடக்கச் சிரமப்படுகிற வயோதிகர்கள், பள்ளிக்கூடப் பை சுமந்து செல்லும் சிறுவர் சிறுமிகள் போன்றவர்கள் கண்ணில் பட்டால் வேனை நிறுத்தி ஏற்றிச் செல்வார். என்னையும் அப்படி ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டதுண்டு. அதே நாகு அண்ணன் ஒரு மங்கிய மாலைப் பொழுதில் தந்திக் கம்பத்துக்குக் கீழே வேட்டி இல்லாமல் எச்சில் ஒழுக விழுந்து கிடந்தார். தெரு விளக்கில் அவரது மைனர் செயின் டாலடித்தது. மறுநாள் போதை தெளிந்து அவர் வீடு திரும்பிய பிறகுதான் தனது தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்த விவரம் அவருக்குத் தெரியவந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள்.

திரையும் குடியும்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்கிறார். “திரும்பத் திரும்பச் சொல்லவருவது மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது, தனிநபர் விருப்பம் சார்ந்தது என்பதும் அஃதோர் அறச்சார்பு பற்றியதல்ல என்பதுவும், மேலும் எனது கட்டுப்பாடில் இருக்கும் சகல மூலப் பலத்தோடும் சொல்ல விழைவது, குற்ற உணர்வுடன் செய்ய வேண்டிய காரியம் அல்ல அதுவென்பது”. ஆனால் குடிப்பது குறித்த கூச்சத்தை, அதை ஒரு குற்றமாகக் கருதி, வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்த முந்தைய தலைமுறையினரைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உறவினரான மாமா ஒருவருக்குக் குடிப்பழக்கம் உண்டு என்பது அவர் மறைந்த பிறகு எனக்குத் தெரியவந்த, நம்பவே முடியாத செவிவழிச் செய்தி. ஒரு நாளும் அவர் தள்ளாடியோ, வேட்டி விலகியோ, வார்த்தை தவறியோ பார்த்ததில்லை.

ஆனால் இப்போது அதை எதிர் பார்க்கவே முடியாது. கலைஞர்கள், குறிப்பாகத் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே குடிப் பழக்கம் உடையவர்கள் என்பதாக ஆணித்தரமாக நம்புகிறவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. அது குறித்து வருத்தமடைந்ததில்லை. சில வாரங்களுக்கு முன்பு சாலி கிராமத்துத் தெரு ஒன்றில் பள்ளிச் சீருடையிலிருந்த ஒரு சிறுவன், தூரத் தில் நின்றுகொண்டிருந்த அவனது நண்பரொருவனைப் பார்த்து உரத்த குரலில், ‘மச்சி, ஒரு குவாட்டர் சொல் லேன்’ என்று புகழ் பெற்ற ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லிக் கத்தினான். எனது மகனைவிட ஓரிரு வயதே அதிகமாக உள்ள அந்தச் சிறுவன் தான், கடந்த இருபதாண்டுகளில் முதன் முறையாக நான் திரைப்படத் துறையில் இருப்பவன் என்பதை நினைத்து என்னை வெட்கித் தலைகுனியச் செய்தவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்