தனி நபரின் தணியாத பணத்தாசையும், அதனால் வரும் சிக்கல்களும், அதற்கான விளைவுகளுமே 'போகன்'.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரவிந்த்சாமி எப்போதும் அரசனைப் போல ஆடம்பரமாக வாழவே ஆசைப்படுகிறார். அதற்காக பணத்தைக் கொள்ளையடிக்கிறார். அப்படி ஒரு கொள்ளை சம்பவத்தின்போது போலீஸ் அதிகாரி ஜெயம்ரவியின் அப்பா நரேன் கைதாகிறார். இதிலிருந்து தந்தையை ஜெயம்ரவி எப்படிக் காப்பாற்றுகிறார், குற்றவாளியை கண்டுபிடித்தாரா, அவருக்கு சரியான பாடம் புகட்டினாரா என்று வேகம் எடுக்கிறது திரைக்கதை.
'ரோமியோ ஜூலியட்' படத்துக்குப் பிறகு கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்கிய விதத்தில் இயக்குநர் லட்சுமண் கவனம் ஈர்க்கிறார்.
அரவிந்த்சாமியும், ஜெயம் ரவியும் படத்தை மொத்தமாக தங்கள் தோள்களில் தாங்கி நிறுத்துகிறார்கள். அரவிந்த்சாமியின் குரல், உடல்மொழி, சொடுக்கு போடும் ஸ்டைல், கூர்மையான பார்வை, போகிற போக்கில் எளிய மக்களின் மொழியில் பேசுவது என எந்த அலட்டலும் இல்லாமல் ஸ்கோர் செய்கிறார். காருக்குள் அமர்ந்துகொண்டு தமிழ்ப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதாக கைகளை அசைக்கும்போது அரவிந்தசாமிக்கு அப்ளாஸ் அள்ளுகிறது
ஜெயம் ரவி பொறுப்பான போலீஸ் அதிகாரியாகவும், சிக்கல் மிகுந்த சூழலைக் கையாளும் வேறு நபராகவும் இருவித பரிமாணங்களை சிறப்பாக செய்திருக்கிறார். ரொமான்ஸ், பாசம், கோபம், ஆதங்கம், சமயோசிதம் எல எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதிக்கிறார். அரவிந்த்சாமிக்கு ஈடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலும், திரையில் ஆக்கிரமிப்பு செய்வதிலும் ஜெயம் ரவி கம்பீரம்.
ஹன்சிகாவின் நடிப்பு துருத்தாமல், உறுத்தாமல் ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன நுட்பமான அசைவுகளிலும் அவரின் மெனக்கெடல் தெரிகிறது. பின்னணிக் குரலும் சரியாகப் பொருந்துகிறது.
பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், நாசர், அக்ஷரா, நாகேந்திர பிரசாத், வருண் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
சவுந்தர்ராஜனின் கேமரா படத்தின் செழுமைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. இமான் இசையில் வாராய் நீ வாராய், கூடுவிட்டு கூடு பாயும், செந்தூரா பாடல்கள் ரசனை. டமாலு பாடலைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணியிலும் இமான் இன்னிசை அளித்திருக்கிறார்.
அரவிந்த்சாமி கொள்ளை அடிக்கும் விதம், கனவுப் பாடல் முடிந்ததும் அதற்கு அரவிந்த்சாமி அளிக்கும் கமென்ட், ஒரு கட்டத்தில் இப்படியே இருந்துவிடுவதாக அரவிந்த்சாமியிடம் ஜெயம்ரவி சொல்வது என இயக்குநரின் புத்திசாலித்தனம் படத்தில் தெரிகிறது.
பொன்வண்ணன், நாசர், அக்ஷரா என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதை போலீஸ் கண்டுபிடிக்காதா? டெல்லியில் இருந்த நரேன் சென்னை வந்து சிக்குவது எப்படி? ஹன்சிகா கமிஷனர் அலுவலகத்துக்குள் திடீரென எப்படி வந்தார்? எல்லோரிடமும் நடந்ததைச் சொல்லி தன்னை நிரூபிக்க முயற்சி செய்யும் ஜெயம் ரவி, ஹன்சிகாவிடம் மட்டும் அப்படிச் செய்யாமல் வெறுமனே பேசிக் கொண்டிருப்பது ஏன்? அந்த ஆன்மா வித்தை எப்படி தொலைதூரத்திலிருந்தும் செயல்பட முடிகிறது போன்ற சில கேள்விகள் எழுகின்றன.
இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'போகன்' படம் அரவிந்த்சாமி, ஜெயம்ரவியின் இணைந்த கைகளால் மேஜிக் நிகழ்த்துகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago