முதல் நாள் அனுபவம் : இரண்டாம் உலகம்

By ஸ்கிரீனன்

ஆர்யா, அனுஷ்கா நடிக்க செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி.சினிமாஸ் தயாரித்திருக்கிறது.

முதல் உலகம் : ஆர்யாவை காதலிக்கிறார் டாக்டர் அனுஷ்கா. ஆர்யா காதலுக்கு மறுப்புச் சொல்ல, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அனுஷ்காவின் காதலை புரிந்துக் கொள்ளும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக அனுஷ்கா இறந்து விடுகிறார். அதற்கு பிறகு ஆர்யா, என்னவாகிறார் என்பது இங்கு நடக்கும் கதை.

இரண்டாம் உலகம் : காதல் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு உலகம். அங்கு அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திரிகிறார் ஆர்யா. அனுஷ்காவை அடைய நினைக்கும் ராஜாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார். தான் ஆணுக்கு அடிமையில்லை என்பதால் ஆர்யாவை வெறுக்கிறார். அவர்களுக்குள் காதல் எப்படி மலர்கிறது என்பது இங்கு நடக்கும் கதை.

ஒருவன் உண்மையாக காதலித்தால், காதலிக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பான் என்று கூறியிருக்கிறார்கள். முதல் உலகத்திற்கும், இரண்டாம் உலகத்திற்கும் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசங்களை பாராட்டலாம். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ராம்ஜியின் ஒளிப்பதிவு தான். இரண்டு உலகத்தையும் வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இரண்டு உலகத்திலும் வெவ்வேறு நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக இப்படத்தில் ஆர்யாவை விட, அனுஷ்காவிற்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கலக்கல். அனுஷ்காவை காப்பாற்ற சிங்கத்துடன் ஆர்யா மோதும் காட்சிகள் எல்லாம் குழந்தைகளின் உலகத்தில் ஹிட்டாகும். காட்சிப்படுத்திருக்கும் விதத்தோடு பாடல்களைப் பார்த்தால் நன்றாக இருக்கிறது. அதற்காக ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டலாம்.

2:40 மணி நேரம் படம் 'இரண்டாம் உலகம்'. மிகவும் பொறுமையாக கதையை நகர்த்தியிருக்கிறார் செல்வராகவன். அதனால் பார்ப்பவர்களுக்கு, படம் எப்போது முடியும் என்ற சலிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி, ’பின்னணி இசை அனிருத்தா?’ என்று கேட்க வைக்கிறது. அந்தளவிற்கு பின்னணி இசையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. நிறைய காட்சிகளில், அடுத்து என்ன காட்சி வைக்கலாம் என்று செல்வராகவன் குழம்பியிருப்பது தெரிகிறது. பின்பாதியில், வசனங்களே இல்லாமல் நிறைய காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசமான உலகம், கிராபிக்ஸ் மிரட்டல் என்பதற்காக இரண்டாம் உலகத்திற்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE