சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த நடிகை ரம்பா தம்பதிக்கு நீதிபதிகள் பாராட்டு

By செய்திப்பிரிவு

‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச் சலம்’, ‘காதலா காதலா’ உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அவர், தென்னிந்திய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் கனடா தொழிலதிபரும் இலங்கைத் தமிழருமான இந்திரகுமாருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லாவண்யா, சாஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இடையில் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் பிரகாரம், தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மாதம் ரூ. 2.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தரக்கோரியும் சென்னை மாவட்ட 2-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரம்பாவின் கணவர் இந்திரகுமார், ரம்பாவிடம் உள்ள தனது குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் இந்திரகுமாருக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை சமரச தீர்வு மையம் மூலமாக பேசி தீர்த்துக் கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தி யிருந்தனர். அதன்படி இருவரிடமும் சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர் களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று இதே அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள் முன்பாக ஒன்றாக ஆஜராகிய ரம்பா வும், அவரது கணவர் இந்திரகுமாரும், தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தனர். இதை யடுத்து இருவரையும் வெகுவாக பாராட்டிய நீதிபதிகள் அவர்களை வாழ்த்தி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE