'விசாரணை' படத்துக்குப் பிறகு தினேஷ் நடிப்பில் வெளியாகும் படம், பெண்களை மையப்படுத்திய மற்றொரு படம், படத்தின் ட்ரெய்லர் தந்த நம்பிக்கை, ஆரம்பத்திலிருந்து படத்துக்குக் கிடைத்த முன்னோட்டங்கள் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் கூத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
அந்த எதிர்பார்ப்புகளை 'ஒரு நாள் கூத்து' நிறைவேற்றும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தோம்.
கதை: மூன்று பெண்கள் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த காத்திருப்பில் சங்கடம், பிரச்சினை, குழப்பம், தயக்கம், தாமதம் என்ற பல்வேறு சூழல்கள் எட்டிப்பார்க்கின்றன. அதற்குப் பிறகு அந்த மூவரும் என்ன ஆகிறார்கள்? திருமணம் ஆகிறதா? யாருக்கு எப்படி ஆகிறது? என்பது மீதிக் கதை.
திருமணம் என்பது 'ஒரு நாள் கூத்து' என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அந்த ஒரு நாள் கூத்துக்கு முன்னதாக நடைபெறும் பரபரப்புகள்,நடைமுறை சிக்கல்கள், அதனால் ஏற்படும் அழுத்தங்களை, வலிகளை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனை தமிழ் சினிமா வாழ்த்தி வரவேற்கிறது.
கூச்ச சுபாவத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட குணம் படைத்த கதாபாத்திரத்துக்கு தினேஷ் சரியாகப் பொருந்துகிறார். 'கோவணம் கூட கட்டத் தெரியாத என் அப்பாவை உன் அப்பா, மாமா முன்னாடி நிற்க வெச்சு அசிங்கப்பட சொல்றியா? நான் பேசுனாலும், பேசலைன்னாலும் அதோட அர்த்தம் உனக்கு தெரியாதா?' என காதலியிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கும் போது தினேஷின் நடிப்பு கிளாஸ். முக பாவனைகளில் இன்னும் நடிப்பைக் கொண்டு வாங்க நண்பா! இன்னமும் முந்தைய படங்களின் பாதிப்பில் இருந்து வெளியே வராமல் இருந்தால் எப்படி?
காதல், அழுகை, ஏமாற்றம், துயரம் என எல்லா உணர்வுகளையும் சரியாக பிரதிபலிக்கிறார் அறிமுக நடிகை நிவேதா பெத்துராஜ். இயல்பான நடிப்பில் ஈர்க்கும் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரிசை கட்டலாம்.
மைக் முன்னாடி பேசும் ரித்விகா, அதற்குப் பிறகு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் கெஞ்சும் தொனியில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். தொண்டையை அடைக்கும் துயரத்திலும், தத்துவம் சொல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரித்விகாவின் நடிப்பு மெச்சத்தக்கது.
வசனங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், பார்வையால் தன் பிரச்சினையை, சோகத்தை வெளிப்படுத்தும் மியா ஜார்ஜின் நடிப்பு கவனிக்கத்தக்கது. அவரின் கதாபாத்திரம் சில உண்மைகளை இடித்துச் சொல்கிறது.
ஆர்.ஜே.வாக ரமேஷ் திலக்கும், பொறுப்பான அண்ணனாக கருணாகரனும், திருமணம் ஆகாத பேச்சுலர் கதாபாத்திரத்தில் சார்லியும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். இனி கருணாகரனை காமெடி நடிகராக மட்டும் பார்க்காமல் தொடர்ச்சியாக உறுதுணை நடிகராகவும் பார்க்கும் அளவுக்கு நிறைவான நடிப்பை நல்கியிருக்கிறார்.
பாலசரவணனின் நகைச்சுவைக்கு சில இடங்களில் ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.
கோகுல் பினோய் தன் கேமராவால் எல்லா அழகையும் அள்ளி வந்திருக்கிறார். ஐடி உலகம், பண்பலை அலுவலக சூழல், கிராமத்துப் பின்புலம், நகர்ப்புற வாழ்க்கை என எல்லாவற்றையும் அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு கூடுதல் பலம். அடியே அழகே, எப்போ வருவாரோ பாடல்களில் மனதை அள்ளுகிறார். பின்னணி இசையில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பாட்ட போடுங்க ஜி பாடலை மட்டும் தூக்கி தூர போட்டிருக்கலாம். திரைக்கதை ஓட்டத்தில் அந்தப் பாடல் துருத்தி நிற்கிறது.
எல்லோருடைய வாழ்வும் திருமணத்தை நோக்கியே நகர்கிறது என்ற ஒற்றைப் புள்ளியை வைத்துக்கொண்டு இயக்குநர் வடிவமைத்த திரைக்கதை புத்திசாலித்தனமாக பின்னப்பட்டுள்ளது. அதில் இருக்கும் சிக்கல்கள், கேள்விகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் அடுக்கடுக்காக அலசியும் இருக்கிறார். அதில் தான் சில முன் பின் நகர்த்தல்கள் தேவையாக உள்ளது.
தினேஷ் ஏன் தன் குடும்ப சூழல் விவரம் உள்ளிட்ட தன்னிலை விளக்கத்தை மிக மிக தாமதமாக காதலியிடம் தெரிவிக்க வேண்டும்? அந்த மழை நாளை ஏன் கண்ணியமாகக் காட்டாமல், இச்சையைக் கூட்டுவது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? 'இதுக்குதானே இவ்வளவு' என அசால்ட்டாகப் பேசும் ரித்விகா ஏன் மீண்டும் மனம் வெதும்பி, 'நாம எடுக்கிற முடிவு எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது' என தத்துவம் பேசி தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள வேண்டும்? சம்பந்தமே இல்லாமல் ஏன் அந்த திருமண ட்விஸ்ட்? அது இடைச் செருகலாகவே தெரிகிறதே? இப்படி சில கேள்விகள் எழுகின்றன.
இவற்றை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால், திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களின் அவஸ்தைகளை சொல்லி ஆண்களுக்கு ஆலோசனை சொல்லிய விதத்தில் 'ஒரு நாள் கூத்து' மதிப்புக்குரிய முயற்சி என்பதால் வரவேற்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago