கமல் என்றும் இளைஞர்களின் நாயகன்

By அரவிந்தன்

எழுபதுகளில் காதல் இளவரசன் என்று பெயர் பெற்ற கமல் ஹாஸன் அன்றைய இளைஞர்களிடையே புகழ் பெற்றிருந்ததில் வியப்பில்லை. ஆனால் எத்தனையோ இளம் நாயகர்கள் வெற்றிகரமாக நடித்துவரும் இன்றைய காலகட்டத்திலும் கமலுக்கு இளம் ரசிகர்கள் அதிகம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் இளைஞர்களை வசீகரிக்கும் திறமைகளும் குணங்களும் கமலிடம் இருப்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பது தெரியும்.

அவரது படங்கள் எல்லாமே வசூலுக்கு உத்தரவாதம் தருபவை அல்ல. ஆனால் அவர் படங்களைப் பார்க்கவும் அவற்றைப் பற்றி அறியவும் இன்றைய இளம் தலைமுறையினர் மிகவும் ஆர்வமாக இருப்பதை முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் அவர் படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கில் கூடும் கூட்டத்திலும் கண்கூடாகக் காணலாம்.

இளம் தலைமுறையினர் திறமையை ஆராதிப்பவர்கள். புதிய தேடல்களையும் பரிசோதனையையும் அவற்றின் வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் விரும்புபவர்கள். எதிலும் இன்றைய போக்கைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கமல் ஹாசன் பல கலைகளில் வித்தகர். தொடர்ந்து தன் திறமைகளைப் புதுப்பித்துக்கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியவர். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவற்றின் வரையறைகளை மாற்றி எழுதியவர்.

காதல் காட்சிகளில் கமல் அச்சு அசலாக ஒரு காதலனின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதைக் காதலில் ஒரு முறையேனும் தன்னை இழந்தவர்களால் உணர முடியும். கமல் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லப்படும் நாயக பிம்பத்துக்குப் பொருந்திவர மாட்டார். ஆனால் குரு முதல் விஸ்வரூபம்வரை அவரது சண்டைக் காட்சிகள் எந்த ஆக்‌ஷன் ஹீரோவுக்கும் சவால் விடுபவை. சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மையையும் புதுப் புது உத்திகளையும் புகுத்துவதில் அவருக்கு நிகராக இன்னொரு நாயக நடிகரைச் சொல்ல முடியவில்லை. நாயகர்கள் ஏற்கும் நகைச்சுவைப் பாத்திரங்களுக்குத் தமிழில் வளமான மரபு இருக்கிறது. இன்றுவரை தொடரும் மரபு அது. அந்த மரபில் கமலின் இடம் தனித்து நிற்பதை அவரது நகைச்சுவைப் படங்கள் பளிச்சென்று காட்டிவிடும். நகைச்சுவை நடிகனாக மட்டுமே கமலால் திரைத்துறையில் கோலோச்ச முடியும் என்னும் அளவுக்கு அவரது நகைச்சுவை நடிப்பு நுட்பமான இழைகளும் கூர்மையும் கொண்டது.

திரைப்படம் எடுக்கப்படும் விதத்தை மாற்றியமைத்து அதன் வீச்சை அதிகரிக்கச் செய்வதிலும் கமலின் பங்கு அதிகம். படத்தைச் சந்தைப்படுத்துவதில் புதிய வழிமுறைகள், மேக்கப், எடிட்டிங் ஆகியவற்றில் அதி நவீன உத்திகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியவர். தொலைக்காட்சியையும் வீடியோ தொழில்நுட்பத்தையும் இணையத்தையும் கண்டு சினிமா உலகில் பலரும் அஞ்சியபோது அவை காலத்தின் கட்டாயம் என்று சொல்லி வரவேற்றவர் கமல். கதைக் களங்களிலும் நடிப்பின் நுட்பங்களிலும் புதிய பரிசோதனைகள் செய்துவருபவர் கமல். இத்தகைய குணங்கள் இளைஞர்களைக் கவர்வதில் ஆச்சரியம் இல்லை. கமலை இளைஞர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ளும் முயற்சியே இந்தத் தொகுப்பு.

ச. கோபாலகிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை

கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்று சொல்வதற்குப் பலர் அபூர்வ சகோதரர்கள், குணா, ஹேராம், ஆளவந்தான். தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பைச் சொல்வார்கள். ஆனால் அவர் இதுபோன்ற நடிப்புத் திறனுக்குத் தீனி போடும் படங்களில் மட்டுமதான் சிறப்பாக நடிப்பார் என்பதில்லை. வெகு சாதாரணமான, இயல்பான பாத்திரங்களிலும் அந்தப் பாத்திரமாகவே மாறி நம் பக்கத்து வீட்டு நபரைக் கண்முன் நிறுத்துவார். உதாரணமாக, மகாநதியில் தீயவர்களை நம்பி ஏமாறும் அப்பாவி நடுத்தர குடும்பஸ்தராக இரண்டு குழந்தைகளின் தந்தையாக வாழ்ந்திருப்பார். பாலியல் தொழிலாளிகள் விடுதியிலிருந்து தன் மகளை மீட்டுவரும் காட்சியில் அவர் நடித்த விதத்தைப் பலர் பாராட்டுவார்கள். ஆனால் சாதாரண காட்சிகளில அவர் வழங்கும் முகபாவங்களும் சின்னப் புன்னகைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர் ஒருவரை நம் கண்முன் நிறுத்துபவை.

நடிப்பைத் தாண்டி இயக்கம். எழுத்து, நடனம், கவிதை எனப் பல திறமைகள் அவரிடம் இருக்கின்றன. திறமைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்புகளும் கமலிடம் இருக்கின்றன. தன் சக நடிகர்களின் திறமைகளை நன்கு பரிமளிக்கச் செய்பவர் கமல். நாசர் மிகச் சிறப்பான நடிகர்தான். ஆனால் அவரது நடிப்பின் பல்வேறு பரிமாணங்கள் கமல் படங்களில் மட்டுமே வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகை பேட்டியில் கமல் படத்தைத் தவிர மற்ற படங்களில் உங்கள் நடிப்பு ஒரே மாதிரி இருக்கிறதே என்று கேட்டார்கள். கமல்தான் எனக்கு நல்ல வேடங்கள் கொடுக்கிறார் என்று பதிலளித்தார். ரோகிணி, ஜெயராம், ரமேஷ் அரவிந்த் போன்ற நடிகர்கள் கமல் படங்களில்தான் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார்கள்.

புதிய திறமைகளையும் கமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பசுபதி, ஷண்முகராஜா ஆகியோர் அதற்குச் சாட்சிகள். கொண்ட கருத்தில் நேர்மையும் அதை வெளிப்படுத்தும் துணிச்சலும் கமலின் தனி முத்திரைகள். பொதுவாக நடிகர்கள் பொதுப்புத்திக்கு விரோதமான கருத்துக்களைப் பொதுவெளியில் பேச மாட்டார்கள். கமல் ஹாசன் இதற்கு விதிவிலக்கு. பாலியல் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு இன்று ஓரளவுக்குப் பெருகியிருக்கிறது. ஆனால் 90களில் வெளியான குருதிப்புனல் படத்திலேயே ஒரு காட்சியில் அதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பார் கமல். அதுபோல் எப்போதும் மரண தண்டனையை எதிர்த்தே வந்துள்ளார். டிசம்பர் 2012இல் தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், என்று பலத்த கோஷங்கள் எழும்பிக் கொண்டிருந்தபோது “பாதிக்கப்பட்டவர் என் சகோதரி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என் சகோதரர்கள். நான் வெட்கப்படுகிறேன். மரண தண்டனை எந்தக் குற்றத்துக்கும் தீர்வாகாது” என்று சொன்னார்

இதுபோன்ற காரணங்கள்தான் கமலை என்றும் இளைஞர்களின் நாயகனாக ஆக்கியிருக்கின்றன.

சினிமாவுக்காக அர்ப்பணம்

ரோஷினி கார்த்திகேயன், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை.

சினிமாவுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் கமல் எனலாம். உலக சினிமாவுக்கான ஒரு மொழியைத் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது. இது தவிர இயக்கம், கவிதை, வாசிப்பு, திரைக்கதை அமைப்பது, நடனம், நகைச்சுவை எனப் பல துறைகளிலும் சாதிக்கும் திறமை அவரிடம் இருப்பது வியக்க வைக்கிறது.

இன்று வரை ரொமான்ஸ் ஹீரோவாக இருப்பது கமல்ஹாசனுக்கான சிறப்பு. மேலும் புதுப்புதுத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக இருக்கிறார்.

சினிமாவுக்காகவே வாழ்பவர்

ஜெய்கணேஷ், சுப்பிரமணியபுரம், மதுரை.

அபூர்வ சகோதரர்கள் படம் 1989லேயே வெளிவந்துவிட்டது. ஆனால், அதை நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் பார்த்தேன். குள்ள கமலின் சேட்டைகளை எந்தளவுக்கு ரசித்தேனோ, அதே அளவுக்குக் கடைசியில் அவர் அழும் காட்சியில் நானும் அழுதேன். தன் ரசிகர் மன்றங்களை எல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றவர் என்று நான் வளர வளர அவரைப் பற்றிய வியப்பான செய்திகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. சினிமாவை வைத்து வாழாமல், சினிமாவுக்காகவே வாழ்கிற அபூர்வ கலைஞர் எங்கள் கமல்.

என்றும் புதுமை விரும்பி

சுஜய், பிஎஸ்ஸி, முதலாம் ஆண்டு, விஸ்காம் மாணவர், சென்னை.

கமல் எப்போதுமே கதாநாயகன்தான். அவர் மாதிரி தமிழ்த் திரையில் சோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் யாருமே இல்லை. தொழில்நுட்பத்தில் பலர் அவரைப் பின்தொடர்ந்து செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழில் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத் திரைப்படம் அவருடைய மும்பை எக்ஸ்பிரஸ். அதற்குப் பின்னாலதான் மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள். உன்னைப்போல் ஒருவனில் அவர்தான் ரெட் கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்தினார். இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். விஸ்வரூபம் அவுட்டோர் போகாமல் கிரீன் மேட்டில் ஹாலிவுட் தரத்தில் செய்த படம்.

தமிழ் சினிமாவில் புதுமையைப் புகுத்துவதற்குப் படாத பாடுபடுகிறார். சோதனை முயற்சிகளை அவர் செய்துவரவில்லை என்றால் தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் இந்த அளவு வந்திருக்குமா என்பது சந்தேகமே.

என்றும் மாணவன்

பிரியங்கா தர்மராஜ், கண்டண்ட் ரைட்டர், கோவை.

இளம் நடிகர்களுக்குப் போட்டியாகப் பெரும்பாலும் அனைத்து நடிகைகளுடனும் நடித்தவர் கமல்தான். கமல் படம் என்ற அடையாளம், பாடல், படம் என அனைத்து அம்சங்களிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துவிடும். கிளாசிக்கல் டான்ஸ் முதல் அனைத்தையுமே ஒரு பள்ளி மாணவன் போலக் கற்றுக்கொள்வதும், அதைப் பெரியதாய்க் காட்டிக்கொள்ளாததும் இவரது பிளஸ்.

கேட்டவர்க்குக் கேட்டபடி

கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர், நாகர்கோவில்.

தமிழ் சினிமாவின் பிதாமகனே கமல்தான். இன்னிக்கும் என் மாதிரி இளவட்ட பசங்க பார்க்கும்படி லவ் சீன்ஸ்ல ரொமான்ஸ் பண்ணுவார்.வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகியை பார்த்த 5 நிமிடத்திலேயே லவ் புரபோஸ் பண்ணுவாரு. பார்த்த இவ்வளவு நேரத்துக்குள்ளயான்னு நாயகி கேட்கும் போது எனக்கு இதுவே லேட்ன்னு ரொமாண்டிக்கா சொல்லுவாரு.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய வேகம் இப்போதும் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. இளமை எப்போதும் அவர் முகத்தில் நிழலாடும். மேடைகளில் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசும் பண்பு, நகைச்சுவை நாயகனாக, ஆக்ன்‌ஷ ஹீரோவாக என எந்த ரோல் செய்தாலும் அதில் ரசிக்க வைப்பவர் கமல்தான். பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்பத் தன் உருவத்தை மாற்றி விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் கமல் என் கவனத்தை ஈர்க்கிறார்.

ஒப்பற்ற கலைஞன்

ஆர்.எஸ். சிந்து, கல்வித்துறை, சென்னை

இந்திய சினிமாவில் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாகப் பலதுறை வல்லவன் கமல் ஹாசன் அவர்களைத்தான் கூறுவேன். நடிப்பு, நடனம், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு ஆகிய எல்லாத் துறைகளையும் அவரால் சிறப்பாகக் கையாள முடிந்திருக்கிறது. நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தேவர் மகன். அது தந்த பிரமிப்பில், அவரது படங்களைத் தேடித் தேடிப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறேன். ஒரு பெண் ரசிகையாக அவர் காதல் இளவரசனாக ஜொலித்த தொடக்கக் கால ரொமண்டி படங்களைப் பார்த்து ரசிக்கும் அனுபவமோ அதற்குரிய வயதோ இல்லாமல் போனது. அதன் காரணமாகவே அவரது முதிர்ச்சியான, சோதனை முயற்சிகள் நிறைந்த உலகத் தரமான நடிப்பு வெளிப்பட்ட பிந்தைய படங்கள் பார்க்கும் வாய்ப்பும் சினிமா ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன. கலையின் மீதான அக்கறையும், வெறித்தனமான நேசிப்பும் கொண்ட இக்கலைஞனிடம் இருந்து மேலும் தரமான படங்களை எதிர்பார்க்கிறேன்.

கே.கே.மகேஷ், சாமிநாதன், கா.சு.வேலாயுதன் உதவியுடன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்