சங்கமித்ரா பர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இவ்விழாவிற்கு ஸ்பான்சர்களில் ஒருவராக தேனாண்டாள் பிலிம்ஸ் இடம்பெற்றுள்ளது.

இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சங்கமித்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இவ்விரண்டு போஸ்டர்களுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று இருப்பவர்களுக்காக படக்குழுவினர், படத்தைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில் 'சங்கமித்ரா' பற்றி படக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:

"சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.

தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம். இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE