முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி!

By உதிரன்

மருத்துவக் கல்லூரி முறைகேட்டை அம்பலப்படுத்தப் போராடும் சாகச நாயகனின் கதை 'பைரவா'.

வாராக் கடன்களை வசூலிக்கும் வங்கிப் பணியில் இருக்கிறார் விஜய். அடாது கடன் கேட்டாலும் அலைக்கழிக்கும் நபர்களிடம் விடாது விரட்டிப் பிடித்து பணத்தை வசூல் செய்து வங்கியில் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்குகிறார். அந்த சூழலில் தன் மேனேஜர் மகள் திருமணத்துக்காக செல்பவர் கீர்த்தி சுரேஷை சந்தித்ததும் காதல் வயப்படுகிறார். அப்போது கீர்த்திக்கு இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்கிறார். அந்த ஆபத்து என்ன? அதற்கான பின்புலம் என்ன? விஜய் என்ன செய்கிறார்? கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து மீட்டாரா? என்று விரிகிறது திரைக்கதை.

'அழகிய தமிழ் மகன்', 'அதிதி' படங்களுக்குப் பிறகு பரதன் இயக்கிய மூன்றாவது படம் 'பைரவா'. மருத்துவக் கல்லூரி முறைகேடுகள், கல்வியாளர் எப்படி உருவாகிறார் என்பதை கமர்ஷியல் சினிமாவில் சொன்ன விதத்தில் இயக்குநர் பரதன் கவனிக்க வைக்கிறார். ஆனால், அந்த கவன ஈர்ப்பு அதற்குப் பிறகு தொடரவில்லை.

விஜய் முன்பை விட மெலிதாக, இளமையாக இருக்கிறார். அவரது சுறுசுறுப்பும், உடல் மொழியும் வழக்கம்போல துருதுரு. ஆனால், வசன உச்சரிப்பில் வெரைட்டி காட்ட வேண்டுமென்று கொஞ்சம் நீட்டி முழக்கிப் பேசி இருப்பது ரசிக்கும்படி இல்லை. சதீஷ் வார்த்தையிலேயே அதை சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரி எல்லாம் பண்ணக் கூடாது. ஆக்‌ஷனில் திருப்தியாக இறங்கி அடித்த விஜய், நடனத்தில் கொஞ்சம் கடன் வைத்திருக்கிறார்.

'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது', 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குதான் அல்லு அதிகம்' என்று விஜய் பேசும் பன்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் தெறிக்கிறது.

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து மிகச் சரியாக நடித்திருக்கிறார். தான் யார் என்பதை பிளாஷ்பேக் காட்சியில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய விதத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்திருக்கிறார். கதை நகர்த்தலுக்கும், கதைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் கீர்த்தி சுரேஷ் உதவி இருக்கிறார். அந்த விதத்தில் கீர்த்தி நடிப்பில் தனித்து நிற்கிறார்.

சதீஷ், தம்பி ராமையா ஆகியோர் நகைச்சுவைப் பகுதிக்கு சில இடங்களில் மட்டுமே உத்தரவாதம் தருகிறார்கள். தமிழ் சினிமாவின் அக்கா பாத்திரத்துக்கு குறையில்லாமல் நடிக்கிறார் சிஜா ரோஸ். நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், மைம் கோபிக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

ஜெகபதி பாவு வழக்கமான நெகட்டிவ் கதாபாத்திரத்தை சரியாகக் கையாளுகிறார். சரத் லோகிதஸ்வா, ஒய்.ஜி.மகேந்திரன், அண்ணி மாளவிகா, , ஹரீஷ் உத்தமன், ஸ்ரீமன், நரேன், சண்முகராஜா, மாரிமுத்து, டேனியல் பாலாஜி ஆகியோர் பொருத்தமான தேர்வு.

சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. சந்தோஷ் நாராயணன் இசை படத்துடன் ஒட்டவில்லை. வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலைத் தவிர பட்டையக் கிளப்பு பாடல் உள்ளிட்ட மற்ற பாடல்கள் சுமாராகவே உள்ளன.

மருத்துவக் கல்லூரி முறைகேடு குறித்த ஆதாரங்களை திரட்டுவதற்காக ஒரே இரவில் அவ்வளவு பெரிய படைபலத்தை விஜய்யால் எப்படி திரட்ட முடிந்தது, ஆவணங்களை எரித்தாலும் எடுத்த வீடியோ பதிவு எங்கே போனது, பென் டிரைவ் ஆதாரமே இருந்தும் அதை ஏன் கண்டுகொள்ளவில்லை, லட்சக்கணக்கான போஸ்டர் ஒட்டும் அளவுக்கு விஜய் பின்னால் யார் இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் எமோஷனை மையப்படுத்தி கால அவகாசம் பெற முடியுமா, கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எப்படி எதையும் கண்டுபிடிக்காமல், தகவல் திரட்டாமல் திடீரென்று ஒரு வீடியோ காட்சி மூலம் வங்கிக் கணக்கு, கல்லூரி என எல்லாவற்றையும் முடக்கி கைதுப் படலத்துக்கான மிகப் பெரிய சம்பவத்தை நிகழ்த்துவதற்கான ஆணை பெற முடியும், எந்த பின்புலமும் இல்லாத விஜய் திடீரென ரைபிள் தூக்குவது என லாஜிக் கேள்விகள் நீள்கின்றன.

பரதன் வசனகர்த்தாவாக சில படங்களில் பணியாற்றியுள்ளார். அதனாலோ என்னவோ அந்த படங்களின் சாயலும் இதில் வருவதை அவரால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியவில்லை போல.

கிரிக்கெட் ஆடும் காட்சி சிரிப்பை வரவழைக்காமல் நெளிய வைப்பதுதான் மிச்சம். கட்டுப்பாடற்ற தொய்வான திரைக்கதையாலும், நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும் கல்விப் பிரச்சினையை 'பைரவா' கமர்ஷியல் புரட்சியாகவே பதிவு செய்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்