குழந்தைகள், பெண்களை விற்கும் சந்தை திரைக்கதைக்காக ஒரு திகில் வாழ்க்கை!

By ஆர்.சி.ஜெயந்தன்

ர சிகர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று குத்துப் பாடல்களையும், குடிக்காட்சிகளையும் தவறாமல் இடம்பெறச் செய்பவர்களுக்கு மத்தியில், தன்னைத் தனித்து அடையாளம் காட்ட நினைக்கிறார் ‘ஆச்சார்யா’ ரவி. இயக்குநர் பாலாவின் முதன்மை உதவியாளர். இதற்கு முன் இவர் இயக்கிய ‘ஆச்சார்யா’ பேசப்பட்ட படம். அதனாலேயே ஆச்சார்யா ரவி ஆனார். தற்போது ‘என்னதான் பேசுவதோ’ படத்தை எழுதி, இயக்கி வருகிறார். திரைக்கதை எழுதும்முன் அது நிகழும் கதைக்களத்தில் ஒரு திகில் வாழ்க்கையை வாழ்ந்து திரும்பிய அனுபவத்தை முதன்முறையாகப் பகிர்ந்துகொள்கிறார்...

கதைக்காக ஆராய்ச்சி செய்வது எல்லாத் திரைக்கதை எழுத்தாளர்களும் செய்யக் கூடியதுதான். ஆனால் நீங்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்கியதாகக் கேள்விப்பட்டோமே?

உண்மைதான்! ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக அமைய வேண்டும் என்று ஒரு நிஜமான கதைக் களத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது பீகாரில் வளர்ந்த பெண் குழந்தைகள் ஒரு சந்தையில் ஆடு மாடுகளைப்போல பேரம்பேசி விற்கப்படுகிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக விற்கப்படுகிறார்கள் யாரால் வாங்கப்படுகிறார்கள், விற்கப்பட்ட குழந்தைகள் பின்னாளில் என்னவாகிறார்கள், விற்றுவிட்டபின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை என்னவென்று பிறகு தெரிந்துகொள்ள விரும்புகிறார்களா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்தக் கதைக்களத்தை தொடமுடியாது என்று முடிவுசெய்து பீகாருக்கு போனேன்.

பீகாரில் எங்கே இந்த அவலம் நடக்கிறது?

இன்றும் பீகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தின் சில கிராமங்களில் பெண் குழந்தைகளை வறுமைக்காக விலைக்கு விற்கிறார்கள். அவர்களை வளர்த்து மீண்டும் விற்பதற்கென்றே ஒரு வாரத்திற்கு ஒரு நாள் சந்தை அங்கே கூடுகிறது. இதில் ஈடுபடும் பெரிய தரகர் கூட்டம் அங்கே இருக்கிறது. இதையே லாபமான தொழிலாகச் செய்து வருகிறார்கள். பெண் குழந்தைகளை பைக்கிலும் ஆட்டோவிலும் சைக்கிளிலும் வந்து விற்றுவிட்டுப் போவதைப் பார்த்து நொந்தே போனேன்.

வாரணாசியில் தங்கிக்கொண்டு தினசரி 80 கிலோமீட்டர் பயணித்து முஸாபர்பூர் போய்விடுவேன். பீகாரிலிருந்து சென்னை தாம்பரத்தில் வேலைசெய்யும் ஒரு பீகாரி இளைஞனை அங்கே சந்தித்தேன். அவன் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தான். நன்றாகத் தமிழ் பேசினான். அவன் உதவியுடன், திரைப்படம் எடுக்க லோக்கேஷன் பார்ப்பதுபோலக் குழந்தைகளை விற்கும் சந்தைவரை ஊடுருவிவிட்டேன். அப்போதுதான் ஒரு தரகன், குழந்தைக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா என்று கேட்டான். அவன் பொறுப்பில் விற்பனைக்கு வந்த சில குழந்தைகளையும் காட்டினான். இல்லை இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ச்சியாக வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அப்படியே சமாளித்துக்கொண்டேன். இப்படித்தான் அங்கேயே தங்கியிருந்து நடப்பவைகளை கண்காணித்தேன். இடையே நக்சலைட்டுகள் தொந்தரவு வேறு. பெயரை மாற்றி, உருவத்தை மாற்றிக்கொண்டு அவர்களோடு சுற்றித் திரிந்து நான் கண்டதையும், கேட்டதையும் வைத்துத் திரைக்கதையை எழுதினேன். அந்த பீகார் இளைஞன் செய்த உதவியால் 6 மாதக் குழந்தையாக விற்கப்பட்ட ஒரு பெண்ணை 17 வயதுப் பெண்ணாக அவளது பெற்றோர்கள் மீட்டுவிட்டதை அறிந்து அவர்களைச் சந்தித்தேன். அவளது வாழ்க்கைக் கதையையே திரைக்கதையில் முதன்மைப்படுத்துவது என்று முடிவு செய்தேன். வலியும் விறுவிறுப்பும் மிக்க திரைக்கதை கிடைத்தது.

படப்பிடிப்பை எங்கே நடத்தினீர்கள்?

சம்பந்தப்பட்ட பீகார் கிராமத்திலேயே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தேன். வெற்றிகரமாகப் பதிவும் செய்துவிட்டேன். நக்ஸல்களால் படப்பிடிப்புக்கு தடைபடலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், காவல்துறையின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டோம். என்ன கதையை எடுக்கிறோம் என்று காவல்துறைக்கும் தெரியாது. சில குழந்தைத் தரகர்களையே நடிக்க வைத்தேன். தமிழிலேயே வசனங்களைப் பேச வைத்ததால் அவர்களுக்கு நாம் என்ன கதை எடுக்கிறோம் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் 15 நாட்கள் அங்கே படப்பிடிப்பை நடத்தித் திரும்பும் வரை, அங்கே மீண்டும் ஒருமுறை திகில் வாழ்க்கையை வாழ்ந்து திரும்பினோம் என்றால் அது மிகையில்லை. ஹைதராபாத் அருகே இறுதி கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

கதை என்ன?

பீகாரில் ஒர் ஏழைப்பெற்றோரால் குழந்தையாக விற்கப்படும் கதையின் நாயகி, தனது பெற்றோர் யாரென்றே தெரியாமல், தன்னை வாங்கி வளர்க்கும் தரகரையே அப்பா என்று நினைத்து வாழ்கிறாள். எதிர்பாராமல் குற்றாலத்தில் குடியேறி வாழ வேண்டிய சூழல் அவளுக்கு உருவாகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, தான் ஒரு விற்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்து உடைந்துபோகிறாள். குற்றாலத்தில் 4 பள்ளி மாணவர்களின் தோழமை அவளுக்குக் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அவளின் கடந்த காலம் நண்பர்களுக்குத் தெரிகிறது. தற்போது கதாநாயகியை நல்ல விலைக்கு விற்க, தனது தரகர்கள் நெட் ஒர்க்கைத் தொடர்புகொள்கிறான், நாயகியின் வளர்ப்புத் தந்தையாக இருக்கும் தரகன். அவளைக் காப்பாற்றி அவள் தாய், தந்தையிடம் நண்பர்களால் சேர்க்க முடிந்ததா இல்லையா என்பதுதான் திரைக்கதை. படத்தை யதார்த்தமான த்ரில்லராக உருவாக்கியிருக்கிறேன்.

கதாநாயகி யார்?

தக்ஷா நகர்க்கர். மிஸ் ஹைதராபாதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிஸ் கேட்வாக் என்ற பட்டத்தையும் வென்றவர். அப்படிப்பட்டவர் கதையைக் கேட்டதும் கள்ளிக்காட்டில் சுள்ளி பொறுக்கும் பெண்ணாக நடிக்கச் சம்மதித்து, கதாபாத்திரமாக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். பட வெளியீட்டுக்கு முன், கதையின் நிஜ நாயகியான. விற்கப்பட்டு பின் மீட்கப்பட்ட அந்தப்பெண்ணை அவளது பெற்றோருடன் சென்னைக்கு அழைத்து வருகிறேன். அப்போது தக்ஷாவும் அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்னைக்கு ஆவலுடன் வருகிறார்.

படத்தில் வேறு முக்கியமான அம்சங்கள்?

பீகார் மொழியிலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். அவரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். முத்துக்குமார் மொத்த பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்