வழக்கமாக படத்திற்கு சென்றால் நடிகர், நடிகை, வில்லன், இசையமைப்பாளர், இயக்குநர் பேர் வரும் போது மட்டுமே ரசிகர்கள் விசில் அடிப்பதுண்டு. ஏன், ஒளிப்பதிவாளர் பெயரை கூட கண்டு கொள்வதில்லை.
ஒரு படத்திற்கு இவர்கள் அனைவரும் உழைத்தாலும், டப்பிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்தையும் ஒன்றிணைந்து அதற்கு சரியான அளவு சவுண்ட் மிக்ஸிங் செய்து உருவாக்குபவர் '4 ப்ரேம்ஸ் உதயகுமார்'. பேட்டி வேண்டும் என்றவுடன் பயங்கர பிஸியாக பணியாற்றிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
நீங்க இந்த மிக்ஸிங் பணிக்கு வந்த அனுபவத்தை சொல்லுங்க..
95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். படிப்பு முடிஞ்ச உடனே ஒரு வருஷம் மணிசர்மா ஸ்டூடியோல ஒரு வருஷம் வேலை பார்த்தேன். 2000 - 2008 வரைக்கும் தீபன் சேட்டர்ஜி அப்படினு ஒரு சவுண்ட் என்ஜினியர் லேஜண்ட் அவருகிட்ட இருந்தேன். 'ஊமை விழிகள்', 'செந்தூர பூவே' இப்படி சவுண்ட்டுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எல்லாமே அவர் பண்ணியது தான்.
அவருகிட்ட பணியாற்றிய அனுபவம் தான் இப்ப வரைக்கும் வேலை செய்ய உதவுது. அவருகூட பணியாற்றும் போது, படத்தோட கதை ஏற்றார் போல் நம்மளை மாத்திகணும் அப்படினு அடிக்கடி சொல்வார். நிறைய வித்தியாசமான படங்கள் பணியாற்றி இருக்கேன். ஆக்ஷன் படங்கள் பண்ணிட்டு இருக்கேன்னா, அதுக்கு ஏற்றார் போல என்னோட மூட் இருந்தா மட்டும் தான் சரியா வரும். 'சிறுத்தை', 'வீரம்' போன்ற படங்களுக்கான விஷயங்களை 'வாகை சூட வா', 'நந்தலாலா' படங்களுக்கு பண்ண முடியாது. ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன்னா, இன்னொரு படத்துக்கு பண்ண மாட்டேன்.
2005ல 'தாஸ்' படம் என்னோட முதல் படம். தீபன் சார் தான் எனக்கு அந்த வாய்ப்பும் வாங்கி கொடுத்தார். தீபன் சார் போய் எங்க மேனேஜர் கல்யாணம் சார்கிட்ட இந்த பையன் தனியா படம் பண்ணுவான். வாய்ப்பு வாங்கி கொடுங்க அப்படினு எனக்காக பேசினார். கல்யாணம் சார் தான் எனக்கு 'தாஸ்' வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அப்புறம் வருஷத்திற்கு ஒரு படம், ரெண்டு படம் அப்படினு தொடர்ச்சியா பண்ணிட்டே இருந்தேன். 2013ல 30 படம் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறேன்.
ஒரு படத்தின் மிக்ஸிங் பணிகளுக்கு எவ்வளவு நாளாகும்?
படத்தோட கதை தான் தீர்மானிக்கும். சில படங்கள் வந்து சின்ன படமா இருக்கும். ஆனா, கதைப்படி நிறைய உழைப்பை கொடுக்க வேண்டியதிருக்கும். சில படங்கள் பிரம்மாண்டமா எடுத்திருப்பாங்க. ஆனா அதுல என்னோட உழைப்பு கொஞ்சம் கம்மியா தான் தேவைப்படும். ஆக்ஷன், த்ரில்லர் வகை படங்கள் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஏன்னா, த்ரில்லர் படங்களுக்கு சவுண்ட் தான் முக்கியம்.
ஒரு படத்துக்கு மிக்ஸிங்னு வர்றப்போ என்ன முடிவு பண்ணுவீங்க?
முதல்ல என்கிட்ட எடிட்டர் இறுதி செய்த படம் வரும். அதுல பின்னணி இசை இருக்காது. டப்பிங் டிராக் மட்டும் வச்சு அனுப்புவாங்க. அந்த படத்தை முதல்ல பார்ப்பேன். அப்புறம் பின்னணி இசை தனியா வரும். எல்லாத்தையும் சேர்ந்து சவுண்ட் எல்லாம் சரியா மிக்ஸிங் பண்ணுவேன்.
நிறைய பேர் பேசுற அப்போ யாரு கதைக்கு ஏற்ற மாதிரி பேசுறா அப்படினு கவனிக்கணும். வடிவேலு, சந்தானம் கூட நிறைய பேர் இருப்பாங்க. ஆனா, அவங்க பேசுற வசனங்கள் ரீச்சாகும் அப்படின்னா உடனே மற்றவங்க எல்லாருக்கு சவுண்ட் குறைச்சு, வடிவேலு, சந்தானம் பேசுற இடத்துக்கு சவுண்ட் கூட்டணும்.
காடுக்குள்ள காட்சிகள் அப்படின்னா அதுக்கு வீட்டுக்குள்ள பேசுற மாதிரி சவுண்ட் டிசைன் பண்ண முடியாது இல்லயா. சவுண்ட்ஸ் எல்லாமே கொடுத்தாலும், தியேட்டர்ல அந்த சவுண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு கேட்கணும் அப்படினு டிசைன் பண்றது நாங்க தான்.
இப்படி டப்பிங் டிராக், பின்னணி இசை எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு படத்துக்கு இதெல்லாம் தேவை அப்படினு நானே ஒரு மிக்ஸிங் பண்ணுவேன். அதை இயக்குநர்கிட்ட போட்டு காட்டுவேன். அவரு வந்து ஒருசில இடங்களை மாற்ற சொல்லுவார். இப்படி இயக்குநர் நானும் பேசி முடிவு பண்ணிக்குவோம்.
இதுவரைக்கு எவ்வளவு படங்கள் பண்ணியிருக்கீங்க?
க்ரெக்டா நான் கணக்கு வைக்கல. 250 படங்கள் வேலை செய்திருப்பேன்னு நினைக்கிறேன். 'பண்ணையாரும் பத்மினியும்', 'இது கதிர்வேலன் காதல்', 'பிரம்மன்', 'நிமிர்ந்து நில்', 'மான் கராத்தே', 'என்னமோ ஏதோ', 'காளி' இப்படி வரிசையாக இருக்கு.
நீங்க அதிகமாக உழைச்ச படம் எது? ஏன்?
நிறைய படங்களுக்கு கஷ்டப்பட்டு இருக்கேன். ஒரு படத்தை மட்டும் சொல்ல முடியாது. 'அஞ்சாதே', 'பொல்லாதவன்', 'நந்தலாலா','ஆடுகளம்', 'நாடோடிகள்', 'பண்ணையாரும் பத்மினியும்', 'சிறுத்தை' படங்களுக்கு எல்லாம் நிறைய உழைச்சுருக்கேன்.
'நந்தலாலா' ரொம்ப நாள் வேலை செஞ்சேன். அந்த படம் நான் பண்ணும் போது கடைசி 40 நிமிடங்கள் வெறும் இசை தான் இருந்தது. அந்த 40 நிமிஷம் காட்சிக்கு மட்டும் மிக்ஸிங் ஒரு மாசம் பண்ணினேன். எல்லாருமே படம் நீளம் அப்படினு சொன்ன உடனே, அந்த சீனை கட் பண்ணிட்டார். கடைசி மிக்ஸிங்னு திருப்பியும் வந்தாங்க. பார்த்தவுடனே அழுகை தான் வந்தது.
மிஷ்கினுக்கு போன் பண்ணி அழுதுட்டேன். அழாதடா.. அடுத்த படத்துல இன்னும் பெஸ்ட் பண்ணலாம்னு சொன்னார். அவ்வளவு உழைச்சது போய் சேரலையே நினைக்கிற அப்போ கஷ்டமா தான் இருந்தது. 'நந்தலாலா' படத்துல நான் வேலை செய்த விதம் வேறு. உலக சினிமா அளவிற்கு தமிழ் சினிமால சவுண்ட்ல பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை கொடுத்த படம் 'நந்தலாலா'.
பணியாற்றிய படங்களில் அதிகம் பேர் பாராட்டிய படம் எது?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படம் தான். கீ-போர்டு இசையை மட்டும் வைச்சு கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இல்லாம ஒரு மிக்ஸிங் பண்ணினேன். அப்போ வந்து சேவல் சண்டை எல்லாம் பொம்மலாட்ட காட்சிகள் மாதிரி இருந்தது. மிக்ஸிங் முடிஞ்ச உடனே பாத்துட்டு இன்னும் இந்த காட்சிகள் எல்லாம் சவுண்ட்ஸ் விஷயத்தில் நல்ல பண்ணனும் முடிவு பண்ணினேன்.
அது முடிச்சேன். அப்புறமா ஜி.வி.பிரகாஷ் லைஃவ் சவுண்ட்ஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி, வேறொரு பின்னணி இசை வந்துச்சு. அப்புறமா அதை வச்சு ஒரு மிக்ஸிங் பண்ணினேன். இதுல சவுண்ட் வேணும், இதுல வேண்டாம் இப்படி நிறைய விஷயங்கள் பண்ணினோம். எல்லாம் முடிஞ்ச உடனே கிராபிக்ஸ் காட்சிகள் வந்துச்சு. அதுல தான் சேவல் சண்டை காட்சிகள் எல்லாம் இருந்துச்சு. திருப்பி அதுக்கு ஏத்த மாதிரி ஒரு மிக்ஸிங் பண்ணினேன். 'ஆடுகளம்' படத்துக்கூட ஒரு மூணு மாசம் டிராவல் பண்ணியிருப்பேன். இடையில கொஞ்சம் கேப் விட்டு விட்டு வேலை செஞ்சேன்.
நிறைய பேர் படம் பாத்துட்டு சேவல் சண்டை எல்லாம் நேர்ல பாக்குற மாதிரி மிக்ஸிங் பண்ணியிருந்தீங்க அப்படினு பாராட்டினாங்க.
நீங்க வேலை செஞ்ச படம் பயங்கர ஹிட்டாச்சுன்னா... யாராவது உங்களுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லுவாங்களா?
எனக்கு தெரிஞ்ச நண்பர்கள், இயக்குநர்கள் போன் பண்ணி பாராட்டுவாங்க. சக்சஸ் ஆனா தான் எல்லாருமே அதைப்பத்தி பேசுவாங்க. ஒரு படத்துக்கு நிறைய உழைச்சேன். ஆனால் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சாலும், படம் மக்கள் கிட்ட ரீச்சாகல. இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு.
படத்தை விமர்சனம் பண்ற எல்லாருமே சவுண்ட்டை பத்தி ஒருவரும் விமர்சனம் பண்ண மாட்டாங்க. ஒரு வரி கூட இருக்காது. ரொம்ப சத்தமா இருந்துச்சுன்னா, சத்தமா இருக்கு. இல்லன்னா ரொம்ப கம்மியா இருந்துச்சு இப்படி எதுவுமே எழுதமாட்டாங்க. நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், இசை, சண்டைக்காட்சிகள் இதை மட்டும் தான் எழுதுறாங்க. நாங்க எல்லாம் அடுத்த கட்ட கலைஞர்கள் எங்களை பத்தி அவங்களுக்கு தெரியல. சவுண்ட்ஸ் பற்றி வர்ற விமர்சனம் ரொம்ப கம்மி.
என்னை வைச்சு படங்கள் பிசினஸ் ஆகிறது கிடையாதே. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் இவங்க தான் முக்கியம்.
உங்க குடும்பத்தை பத்திச் சொல்லுங்க. அவங்களோட நேரம் செலவழிக்க முடியுதா?
ரொம்ப கம்மியா தான் நேரம் கிடைக்கும். எல்லாருமே கொஞ்ச நேரம் கிடைச்சா வெளியே போகணும்னு நினைப்பாங்க. ஆனா, நான் கொஞ்சம் நேரம் கிடைச்சா வீட்டுல இருக்கணும்னு தான் நினைப்பேன். இந்த மாசம் வேலை அதிகம். அதனால காலை 6 மணிக்கு வீட்டுக்கு போயிட்டு 8 மணிக்கு திரும்பி வந்து மிக்ஸிங் ஆரம்பிச்சிருவேன். அதிகாலை 3 மணிக்கு வரைக்கு வேலையிருக்கும். ஆபிஸ்லயே படுத்து தூங்கிருவேன். மன உளைச்சல் அதிகம் இருக்குற பணிகளோட லிஸ்ட் இருக்கும் பாருங்க. அதுல சவுண்ட் என்ஜினியர் வேலை 4வது இடத்துல இருக்கும்.
என்னோட வாழ்க்கைல 3 பேருக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். அப்பா, குரு தீபன் சட்டர்ஜி, மேனேஜர் கல்யாணம். எங்கப்பா இதை படிக்க போறேன் சொன்னவுடனே, நீ படிடா அப்படினு சொன்னார். நான் இருக்கேன்னு சொன்னார். தீபன் சார்கிட்ட மட்டும் நான் சேரலைன்னா ஒரு ரெக்காடிங் என்ஜினியார் தான் இருந்திருப்பேன். நிறைய பேர் வெளியே தெரியாம இருக்காங்க. அவங்கள ஒருத்தனா இருந்திருப்பேன். ஒரு சில படங்கள் எல்லாம் நம்மாளல பண்ண முடியுமானு யோசிச்ச நேரத்துல எல்லாம் உன்னால முடியும் பண்ணுனு சொன்ன எங்க மேனேஜர் கல்யாணம். அது எல்லாம் சின்ன விஷயம்பானு சொல்லுவார்.
பையன் பேரு சாய் கிருஷ்ணா, 8ம் வகுப்பு படிக்கிறான். மனைவி லாவண்யா தான் பையனா பாத்துகிறாங்க. வீட்டில இருக்குற நேரம் ரொம்ப கம்மி. சொந்தக்கார பொண்ணை திருமணம் பண்ணிகிட்டதுனால அவங்களுக்கு என்னைப் பற்றி நல்ல தெரியும். என்னோட மனைவி என்னை அனுசரிச்சு நடந்துக்குவாங்க. என் பையனோட வளர்ச்சில நான் கூட இல்லாதது வருத்தமா தான் இருக்கு.
ஒரு படம் பார்க்கும் போது நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மட்டும் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் கண்டு கொள்ள வேண்டியது இந்த தொழில்நுட்ப கலைஞரையும் தான்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago