சைக்கிள் என்பதற்கு சந்தோஷம் என்று மறுபெயர் வைத்து வாழ்ந்த நாட்கள் அவை. ஒரு வீட்டில் அப்போது சைக்கிள் இருக்கிறதென்றால், இப்போதைய காருக்கு சமம். அவ்வளவு மரியாதை. ஆனால் இன்றோ ஒரு ரூபாய் கொடுத்தால் காரை கொண்டு வந்து நம் வீட்டு வாசலில் நிறுத்தி காருக்கு ஓனராக ஆக்குகிறேன் என்று கடன்காரன் ஆக்கிவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால், அன்றைக்கு சைக்கிள் வாங்குவது அவ்வளவு எளிது அல்ல.
பாண்டியன் சைக்கிள் வித்தை குழு எங்கள் ஊருக்கு வருவதே ஒரு திருவிழாதான். தொடர்ந்து மூன்று நாள் இறங்காமல் சைக்கிள் ஓட்டியபின் 3வது நாள் வெட்டிய குழிக்குள் பாண்டியனையும், சைக்கிளையும் இறக்கி ஒரு மணி நேரம் புதைத்து, பிறகு குழியைத் தோண்டி வெளியே எடுப்பார்கள். ஊரே பதறும் அவ்வளவு ஆச்சரியங்களை கொடுத்த அவர்தான் அப்போது எங்கள் ஜேம்ஸ் பாண்ட். அவர் சைக்கிள் ஓட்டும் லாவகமே அவ்வளவு அழகாக இருக்கும்.
சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, குரங்கு பெடல் போட ஆரம்பித்தால், திரும்பக் கொண்டுவந்து சைக்கிளை விடும் முன் கண்டிப்பாய் நெஞ்சில் ஒரு வீரத்தழும்பு இருக்கும். ஏனென்றால், எவ்வளவு நேக்காக பிரேக் பிடித்தாலும், கண்டிப்பாக நெஞ்சு சென்று ஹேண்டில்பாரில் குத்தாமல் சைக்கிளை நிறுத்தவே வராது.
குரங்கு பெடல் போட்டு ஓட்டிகொண்டிருந்த எனக்கு, என் அண்ணன் வெள்ளைச்சாமிதான் பெரிய சைக்கிளில் நடுக்கம்பி மேல், காலை தூக்கிபோட்டு ஓட்டக் கற்றுக்கொடுத்தது. கொஞ்ச தூரம் பின்னாலேயே ஓடி வந்துவிட்டு, திடீரென ஹேண்டில்பாரை விட்டுவிடும். அடுத்த நொடியே, சாதாரண சைக்கிள் சர்க்கஸ் சைக்கிளாகி வளைந்து நெளிந்து, வாய்க்காலில் கவிழ்ந்து, முட்டியில் சிராய்த்து என, நினைவுகள் முழுக்க சந்தோஷ காயங்களின் சுவடுகள் நிறைந்திருக்கின்றன. என்னுடைய செட் பசங்கள் பலரும், பெரிய சைக்கிளை வாடகைக்கு எடுப்பதை பார்த்த ஆர்.ஆர். சைக்கிள் கடைக்காரர், புதிதாக மூன்று சின்ன சைக்கிள்களை தனது படையில் சேர்த்தார். நீல நிற, சிவப்பு நிற அட்லஸ் சைக்கிள்கள் அவை.
அவ்வளவுதான், கையில் ஐம்பது பைசா சேர்ந்ததும், ரெண்டு, மூன்று பேர் சேர்ந்து வாடகைக்கு எடுத்து ஓட்டுவோம். அரைமணி நேரம் முடியும்போதே இன்னும் எவ்வளவு நிமிஷம் பாக்கி இருக்கிறது என்று மனசுக்குள் கணக்கு ஓட ஆரம்பித்துவிடும். சைக்கிள் கடையையே சுற்றிச் சுற்றி ரவுண்ட் அடிப்போம். “டேய்.. இன்னும் இருபது நிமிஷம் இருக்கு, தம்பி இன்னும் எட்டு நிமிஷம் தான் இருக்கு” என்று லைவ் கமெண்ட்ரி கொடுக்கத் தொடங்குவார் சைக்கிள் கடைக்காரர்.
எட்டாவது முடித்து ஒன்பதாவது போகும்போதுதான் சைக்கிள் வாங்கி கொடுப்பது ஒரு பொதுப் பழக்கமாக இருந்தது, ஒழுங்காக படித்தால் அண்ணன் சைக்கிள் வாங்கி தருவதாக சொன்னார். அதே போல், ஒன்பதாவதில் புது சைக்கிள் வீட்டு வாசலில் நின்றது. எழுநூறு ருபாய் தான் அண்ணனின் மாத சம்பளம். ஆனால் அந்த சைக்கிளின் விலையோ எழுநூற்று ஐம்பது ருபாய். தம்பிகளின் சந்தோஷங்களை, தனது சின்னச் சின்ன தியாகங்களால் நிறைவேற்றும் அண்ணன்களில் அவரும் ஒருவர்.
அடுத்த நொடியே சைக்கிளை எடுத்துக் கொண்டு, குலதெய்வம் கோயிலுக்கு போய் பூஜை போட்டு, எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி, சைக்கிளை சுற்றி பிழிந்து, சைக்கிள் ஸ்போக்கில் பலூனை ஊதிக்கட்டி டப, டப என புல்லட் சத்ததுடன் குளம், பள்ளிக்கூடம், கடைவீதி, நமக்கு பிடித்த பெண்கள் வீடுகள், நமது எதிர் கோஷ்டி பசங்க வீடுகளை ரவுண்ட் அடித்து வேண்டுமென்றே தொடர்ந்து பெல் அடித்து வெறுப்பேற்றுவது, பெருமித சிரிப்பை உதிர்ப்பது என்று சைக்கிள் வானில் சந்தோஷ இறகாக மிதந்த காலம் அது.
நான் வைத்திருந்த சைக்கிளுக்கு அரை செயின் கவர் தான் போட்டிருக்கும். எனக்கு போட்டியாக என் சொந்தக்காரன் செவிட்டு செந்தில், முழு செயின் கவர் போட்ட சைக்கிள் வாங்கி கடுப்பேற்றினான். அன்று தொடங்கியது பனிப்போர். நான் சைக்கிளை துடைத்தால், அவன் குளிப்பாட்டுவான். நான் எண்ணெய் போட்டால், அவன் முழுக்காட்டுவான். எனது ஹேண்ட்டில்பாரின் முனையில், பழைய கேசட்டுகளை உடைத்து டேப்புகளை நறுக்கி குஞ்சம் வைத்தால், அவன் ஜிகினா தாளில் குஞ்சம் வைப்பான். ஆயுத பூஜைக்கு அலங்காரம் பண்ணுவதைப் பார்த்து அந்த சைக்கிளே கண்டமேனிக்கு அழுதுடும்.
ஒரு நாள் திடீரென அவன் சைக்கிளில் யாரோ கோடுபோட்டு விட்டார்கள். அவனோ, நான் தான் என நினைத்து, எனது சைக்கிளில் கோடு போட்டுவிட்டான். எனக்கும் அவனுக்கும் தொடங்கிய சண்டை, குடும்ப பகையாகவே மாறி, கைகலப்பு நடக்கும் அளவிற்கு போனது. காரணம் கோடு போடப்பட்டது வெறும் சைக்கிளின் மேல் அல்ல, எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் மீது. நெல் அரைக்க, தவிட்டு மூட்டை கட்டி வர, வைக்கோல் கட்டு ஏற்றி வீட்டுக்கு தண்ணி எடுத்து வர என , ஒரு தோழன் மாதிரி கூடவே இருந்து வேலைகளை சைக்கிள் செய்யும்.
ஒரு முறை அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை. டாக்டரிடம் அழைத்து செல்ல அப்பாவிடம் பணம் இல்லை. எங்கள் உறவுக்காரரிடம் சென்று நூறு ரூபாய் கடன் வாங்கி வரசொல்லி என்னை அனுப்புகிறார். “வீட்டுலதான் ஆடு, சைக்கிளெல்லாம் கிடக்குல்ல, காசில்லைன்னா விக்க வேண்டியதுதானே. சொந்தம்னா கடன் கேட்டு வந்துடுவீங்களோ” என அவர் பேச, சோகமாக வீட்டுக்கு வந்தேன். இதை அப்பாவிடம் சொன்னதுதான் தாமதம், சைக்கிளை எடுத்துக்கொண்டு கோபமாக சென்றுவிட்டார். சரி, இன்றோடு நம்ம சைக்கிள் முடிஞ்சதுன்னு நெனச்சா, கொஞ்ச நேரத்தில், கறிக்கடை ராவுத்தரோடு வருகிறார். ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள ஒரு கிடாவை தூக்கி இருநூறுக்கு கொடுத்து விட்டார். அன்று தான், என் அப்பாவுக்கும் அந்த சைக்கிளை எவ்வளவு பிடிக்கும் என தெரிந்துகொண்டேன். எத்தனையோ தடவை என்னை உட்கார வச்சு ஓட்டுன எங்க அப்பாவை அன்னைக்கு நான் உட்கார வச்சு அந்த சைக்கிளை ஓட்டுனேன்!
ஒரு குடும்பத்திற்கு ஓடாக உழைப்பவர்கள் என்று சொல்வோமே அதுபோல், இப்படி வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருந்திருக்கும். அப்படி எங்கள் வீட்டில் இருந்த சைக்கிளை விற்றுவிட வேண்டாம், இருக்கட்டும் என்று சொல்லியிருந்தேன். என்னுடைய அப்பாவின், கடைசி காலத்தில் அவர் விற்றுவிட்டதாக கூறிவிட்டார். அந்த சைக்கிள் ஏதோ ஒரு வீட்டு மாட்டு கொட்டகையிலோ, பரணியிலோ, பழைய இரும்பு கடையில் கட்டி போடப்பட்டிருக்கும் மூட்டையிலோ கூட இருக்கலாம்.
இப்போதும் ஆசையாய் இருக்கிறது, என் பால்யகால சந்தோஷங்களை களவாடி சென்ற அந்த சைக்கிளில் ஒரே ஒரு முறை, குரங்கு பெடல் போட !!!
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago