சிறந்த ஒளிப்பதிவு எப்படியிருக்கும்? : ஒளிப்பதிவாளர் ப்ரியன்

By ஆர்.சி.ஜெயந்தன்

முன்னணி நட்சத்திரங்கள் மீது ஒளியை வழியவிட்டு, தங்கள் மீது விளம்பர வெளிச்சம் பரவாமால் பார்த்துக்கொள்பவர்கள்தான் சினிமா ஒளிப்பதிவாளர்கள்.. சிங்கம் படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இந்த வரிசையில் முன்னால் நிற்பவர். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாத குடும்பம் இவருடையது. ஆனால் இவர்தான் இன்று பாக்ஸ் ஆபீஸை கலக்கும் படங்களின் பின்புலத்தில் இருக்கிறார்... முன்னணி இயக்குனர்களோடு மட்டுமல்ல.. தெனாலியில் கமல், தொடங்கி 'வரலாறு' அஜித்,'வேலாயுதம்' விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களுடன் பணிபுரிந்திருக்கிறார். தி இந்துவுக்கான பிரத்தியேக சந்திப்பில் அவருடன் உரையாடியதிலிருந்து...

ஒரு படத்தின் காட்சிமொழியை உருவாக்குவர் ஒளிப்பதிவாளரா? இயக்குனரா?

இயக்குனர்தான் ஒரு படத்தை விஷுவலாக கற்பனை செய்து தனது மனத்திரையில் ஓட்டிப்பார்க்கிறார். இது கேமராவில் பதிவு செய்யும் முன்பே நடக்கும் செயல்முறை. ஒளிப்பதிவாளர்கள் இயக்குனரின் உணர்வுகளை எதிரொலிப்பவர்கள்தான். ஒரு படத்தின் ‘விஷுவலைசேஷன்’ எனப்படும் காட்சி உருவாக்கம் அல்லது காட்சிக் கற்பனை என்பது இயக்குனரால் உருவாக்கப்படுவது. இயக்குனரின் காட்சிக் கற்பனையை மிகச்சரியாக புரிந்து கொண்டு அதைக் காட்சி மொழியில் மிகச்சரியாக எதிரொலிப்பர்தான் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர். அப்படி இயக்குனர் நினைத்ததை காட்சியில் 100 % கொண்டுவந்துவிட்டால், அப்போது அவர் கூட்டுப்படைபாளி ஆகிறார். ஒரு ஒளிப்பதிவாளருக்கு நல்ல பெயர் கிடைக்கிறது பாராட்டுகள் குவிகின்றன என்றால் அதற்கு முதற்காரணம் இயக்குனர்தான். ஒளிப்பதிவாளர் இயக்குனரின் கண்களாக மாறிப்போகவேண்டும்.மொத்தத்தில் ஒரு ஒளிப்பதிவாளர் இயக்குனருக்கு இணையாக வாழ்வியல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

ஒளிப்பதிவு அருமை, கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது என்றெல்லாம் திறனாய்வு வரும்போது என்ன நினைப்பீர்கள்?

(சிரித்துக் கொண்டே..)ஒரு இசைவெளியீட்டுவிழாவில் கேமரா கவிஞர் பாலுமகேந்திரா பேசியதை குறிப்பிட்டுக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் பத்திரிகை உலகில் ஒரு படத்தின் ஒளிப்பதிவை விமர்சிக்கும்போது இது போன்ற சொற்களை தவிர வேறு எதைச்சொல்லியும் விமர்சிக்கத் தெரியாது என்று அவர் உரிமையாகச் சுட்டிக்காட்டினார். அது அவரது பார்வை. அதை மதிக்கிறேன். காரணம் அவர்தான் எனது குரு. ஆனால் இன்று தரமான திரை விமர்சனங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் வர தொடங்கி விட்டன. கேமரா கோணங்கள் குறித்தும், ஒளியமைப்பு குறித்தும் கூட விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். பத்திரிகை சகோதரர்கள் விரும்பினால், ஒருநாள் முகாம் அமைத்து அவர்களுக்கு ஒளிப்பதிவின் அடிப்படை நுட்பங்கள், அடிப்படை இலக்கணம் குறித்து அவர்களோடு பகிர்ந்து கொள்ள தயார். இப்படி கலந்தாய்வுகள், பகிர்வுகள் இருந்தால் திரை விமர்சனம் தமிழில் இன்னும் செழிக்கும் என்பது என் தனிப்பட்டக் கருத்து. இந்தக் கருத்தை நான் திணிக்க விரும்பவில்லை.

உங்கள் பார்வையில் எது சிறந்த ஒளிப்பதிவு?

இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிராவிட்டாலும், நான் ஏதாவது ஒரு கேள்வியில் இதை பதிலாக சொல்லியே ஆகவேண்டும். காரணம் இளையதலைமுறைக்கு நாம் அறிவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். நம் பட்டறிவில் கிடைக்கும் ஒளிப்பதிவு நுட்பங்கள் கம்ப சூத்திரம்போல் ஒளித்து வைப்பது சரியல்ல. என்னைப் பொருத்தவரை கேமரா சூப்பர் என்று சொன்னால், அந்தப் படத்தின் ஒளிப்பதிவு ஏறத்தாழ என்று பொருள். திரையரங்கில் சென்று அமர்ந்து, கதவுகள் மூடப்பட்டத்தும், அங்கே திரையில் தோன்றும் பாத்திரங்களோடு, ரசிகர்கள் தங்களை மறந்து ஒன்றிவிட வேண்டும். கதை நடக்கும் களத்திற்குள், நுழைந்துவிட்ட உணர்வும், தன்னையும் ஒரு பாத்திரமாக உணர்ந்து, திரையில் உலவும் பாத்திரங்களை அவர்களுக்குத் தெரியாமல் அருகில் இருந்து கண்காணிப்பது போன்ற உணர்வும் ஒரு படத்தைப் பார்க்கும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு வந்தால் அதுதான் தலைசிறந்த ஒளிப்பதிவு.

அண்மையில் நீங்கள் பார்த்த எந்தப் படத்திலாவது இதை உணர்ந்தீர்களா?

நிச்சயமாக. இன்று தமிழ்ச்சினிமா ஒளிப்பதிவு, ரசிகர்களை வசியம் செய்யக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. காட்சி மொழியை நேசிக்கும் ஒளிப்பதிவாளர்கள் பெருகிவிட்டார்கள். உலகசினிமாக்களின் தரத்திற்கு பல வெகுஜனசினிமாக்களில் காட்சிமொழி இருக்கிறது. கடைசியாக நான் பார்த்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தையே இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுவேன். அந்தப் படத்தில் இரவின் அச்சத்தையும், மர்மத்தையும் உணர்த்திய ஒளிப்பதிவைக் கண்டு வியந்தேன். இரண்டு இரவுகளில் நடக்கும் கதை. இரவின் எல்லா முகங்களையும் முன் வைத்த தலைசிறந்த ஒளிப்பதிவு. என்னை விருதுக் குழுவில் ஜூரியாக்கினால், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை அந்தப் படத்துக்கு பரிந்துரை செய்வேன். கதைக்குள் அழைத்துச் சென்ற ஒளியமைப்பும், ஒளிப்பதிவும் கொண்டது அந்தப் படம்.

ஒளிப்பதிவாளர்கள் ஒரு கட்டத்தில் இயக்குனர் ஆகிவிடுவதற்கு உண்மையான காரணம், அவர்களது திறமைக்கு தீனிபோட இயக்குனர்களால் இயலாமல் போவதால்தானா?

கிடுகுப் பிடியான கேள்வி. ஆனால் நான் சேரன், கே.எஸ்.ரவிகுமார், ஹரி என்று பல படங்களில் இவர்களோடு பணியாற்றி வந்திருக்கிறேன். தற்போது ஹரியோடு 12 படங்களில் பணியாற்றி முடித்திருக்கிறேன். எங்கள் கூட்டணி இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கூட்டணி. அப்படிப்பார்த்தால், ஹரிபோன்ற இயக்குனர்கள் ஆறுமாத காலத்தில் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர் ஆவதில் இருக்கும் போதை என்பது, அவர்களுக்குள் நச்சரித்துக் கொண்டே இருக்கும் இயக்குனர்களை விடுதலை செய்யும் செயல்முறை என்பது என் கருத்து. அந்த வரிசையில் எனது குரு பாலுமகேந்திரா சாரில் ஆரம்பித்து, பி.சி.ஸ்ரீராம், ராஜீவ்மேனன் ஆகியோரைத் தாண்டி, ஒரு இயக்குனராகவும் தன் ஆளுமையை அற்புதமாக பதிவு செய்தவர்கள் ஜீவாவும் சந்தோஷ்சிவனும்தான். இவர்களது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. என்னையும் நீங்கள் விரைவில் இயக்குனராக எதிர்பார்க்கலாம்.

உங்களைப்பற்றிச் சொல்லவே இல்லையே?

எனக்கு சொந்த ஊர் விருதுநகர். அப்பா கல்விமுறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சித்தப்பா கணேசன் சென்னையில் டி.எஸ்.பியாக இருந்தார். கோடை விடுமுறையில் சித்தப்பா வீட்டிற்கு வருவதுண்டு. நான் சினிமா பற்றி அதிகம் பேசிக் கொண்டிருப்பேன். என் சித்தப்பாவும் தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியும் நண்பர்கள். என் ஈடுபாட்டைப் புரிந்து கொண்ட சித்தப்பா, பாலாஜியின் கேமரா யூனிட்டில் சேர்த்துவிட்டார். அப்படித்தான் சுஜாதா இண்டர்நேஷனல் கேமரா யூனிட்டில் சேர்ந்தேன். அங்கு 5 ஆண்டுகள் இருந்தேன். கேமரா உதவியாளர் வேலை எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது.கேமரா உதவியாளனாக நான் போன முதல் படமே பாலு மகேந்திரா சாரின் “ மூன்றாம்பிறை” எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவர் பணியாற்றும் அழகே தனி அவரது ஒவ்வொரு அசைவையும் கண்களால் பருகி மனதால் உள் வாங்கிக் கொண்டிருந்தேன். அவரது அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.” சந்தியராகம் “ கோலங்கள் “ யாத்ரா “ நீங்கள் கேட்டவை “ போன்று அவரது சிறந்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த போது நான் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப் பட்டவனாக உணர்ந்தேன். சுஜாதா இன்டர்நேஷனல் யூனிட்டில் விதவிதமான பத்து கேமராக்களுக்கும் மேலிருக்கும். அதைத் தொடுவதே பேரின்பமாக இருக்கும். அங்கு இருந்த ஐந்தாண்டுகள் கல்லூரியில் படித்த அனுபவமாக இருந்தது மணிரத்தினம் சாரின் பகல் நிலவிலும் பணியாற்றினேன். இப்படி ஒரு கேமரா உதவியாளனாக பலதரப்பட்ட ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம் கிடைத்தது. அவர்களிடம் வேலை பார்க்கும் போது மானசீகமாக நானும் ஒரு உதவி கேமராமேன் போலவும் உதவி இயக்குநர் போலவும் வாழ்ந்து கொண்டிருந்தேன். பாலுமகேந்திரா சாரின் ஆறு படங்களின் படப்பிடிப்பை ஒரு நாள் கூட தவற விட்டதில்லை என்றால் பாருங்களேன்.

ஒளிப்பதிவாளராக உங்கள் முதல் பட அனுபவம்?

நான் முதலில் பணியாற்றியப்படம் “ வா வா வசந்தமே “ பழ கருப்பையா அவர்களின் படம். ஆனால் வெளியான படம் கே.எஸ். அதிய மானின் “தொட்டா சிணுங்கி” தேவயானி அறிமுகமான படமிது. சேரனிடம் “ பொற்காலம் “ முதல்படம். அதற்குப்பின் “தேசியகீதம்” வெற்றிக் கொடி கட்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். என் இயற்பெயர் நாகேந்திரன். என்னை ப்ரியனாக மாற்றியவர் அவர்தான். என் மகள் பெயர் ப்ரியதர்ஷனி. அதிலிருந்து எடுத்து ப்ரியனாக்கி விட்டார்.

ஹரியுடன் எப்படி இத்தனை படங்கள்?

ஹரி சார் நேரத்தை கவனிப்பவர். எதையும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க விரும்புகிறவர். இதில் உறுதியாக இருப்பவர்.கால எல்லை வைத்தால் வைத்ததுதான். அதற்குள் முடிக்க பல மடங்கு உழைத்தாவது முடிக்க விரும்புவார். அவரது வேகமும் பரபரப்பும் எனக்குப் பழகிவிட்டது. அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. அவரது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், பணிபுரியும் பாணி எனக்குள் குழப்பமில்லாமல் பழகிவிட்டது.அதனால் தான் அவரது படங்களில் எல்லாப் படங்களிலும் பணியாற்ற முடிந்தது.”வேலாயுதம்”படத்தில் வேலை பார்த்ததால் “வேங்கை” யில் மட்டும் நான் ஒளிப்பதிவு செய்ய முடியவில்லை”

சிங்கம் 2 மறக்க முடியாத அனுபவம்?

தென் ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் நடந்த படப்பிடிப்பு மறக்க முடியாது. அந்த நகரம் போதை மருந்திற்கு பெயர் பெற்றது. அங்கு அதன் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். வன் முறையும்தான். நாங்கள் ஒருபக்கம் படம் ஷூட் செய்து கொண்டிருந்த போது இன்னொரு புறம் துப்பாக்கி ஷூட்டிங் நடந்தது. போதைப் பொருள் கும்பல்களுக்கிடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். எங்களுக்குப் பதற்றமாகி விட்டது. ஆனால் அங்கு அது சகஜமாம். தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகர நெரிசல்,கருப்பின மக்கள் கூட்டம் எங்கள் கண்களையும் கேமராவையும் நிறைத்தது. அதேபோல ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு கப்பல் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தது மறக்க முடியாதது. இந்தப் படத்தில் ரெட் எபிக் கேமரா மட்டுமல்ல 'wise cam' எனப்படும் வினாடிக்கு 1000 பிரேம்கள் எடுக்கும் கேமராவை பயன்படுத்தியதும் மறக்க முடியாத அனுபவம்தான். அதனால் என்ன நான் இன்னமும் ஒரு சிறு மாணவன். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்