கதை கிடையாது, திரைக்கதை மட்டுமே : பார்த்திபன்

கதையே இல்லாமல், திரைக்கதையை மட்டுமே வைத்து படம் இயக்குவதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

‘வித்தகன்’ படத்திற்குப் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பார்த்திபன், மீண்டும் படம் இயக்க இருக்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்ற படத்தினை இயக்குகிறார் பார்த்திபன். ஒரு காட்சியில் கூட நடிக்காமல், வெறும் இயக்குநர் பொறுப்பை மட்டுமே கவனிக்கிறார்.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய பார்த்திபன், “என் இரண்டு படங்களைத் தவிர மீதி படங்கள் அத்தனையும் நானே தயாரித்ததுதான். ஏனென்றால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளுக்கு என் பணத்தை செலவு செய்தால்தானே சரியாக இருக்கும். அதனால்தான்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்தேன். தயாரிப்பாளர் சந்திரமோகனை பார்த்து ஒரிரு கதைகளை சொல்லியும் வைத்திருந்தேன். அந்த நேரத்தில்தான், ‘நீங்க கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு ஒரு கதை வச்சுருக்கீங்களாமே, அதை சொல்லுங்க’ என்றார்.

சார்… அந்த படத்துல கதையே கிடையாது. வெறும் திரைக்கதை மட்டும்தான்னு சொல்லி சில சீன்களை அவருக்கு சொன்னேன். ஷூட்டிங்கின்போதுதான் அடுத்த காட்சி என்ன என்பதை முடிவு செய்வேன்.இந்த படத்தையே பண்ணிடலாம்னு சொன்னார். இதில் நான் நடிக்கவில்லை. முற்றிலும் புதுமுகங்கள்தான் நடிக்கிறாங்க.

பாக்யராஜ் சார் என்றைக்கு என் கையில் கிளாப் போர்டை கொடுத்தாரோ அன்று முதல் எனக்கு இந்த கிளாப் போர்டு தான் குல தெய்வம். அதனால் தான் இந்த கிளாப் போர்டை வைத்து படத்தை ஆரம்பித்திருக்கிறேன்'’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE