2004-ல ‘வர்ஷம்’னு ஒரு தெலுங்குப் படம். அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு மாஸ்டரா வேலை பார்த்தேன். படத் தோட தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜு சார். அந்தப் படத்தில் வேலை பார்க்கிறதுக்கு 15 வருஷத்துக்கு முன்னாலேர்ந்தே அவர் எனக்கு பழக்கம். ரயில், மழை பின்னணியில் அந்தப் பாடலை ஷூட் செய்தோம். பிரபாஸ், த்ரிஷா நடிச்சாங்க. ஷூட்டிங் சமயத்தில் ஒருநாள் சாப்பிடுற நேரத்தில் தயாரிப்பாளர் ராஜு சார், ‘‘பிரபு, நீங்க என்னோட அடுத்தப் படத்தை டைரக்ட் பண்றீங்களா?’’னு கேட்டார். ‘‘ஓ.கே. சார், பண்றேன்’’ன்னு சொன்னேன். எங்க ரெண்டு பேரோட இந்தப் பேச்சுக்கு எவ்வளவு விநாடி ஆகியிருக்கும்? அந்த நேரம்தான் நான் டைரக்டர் ஆனதுக்கான நேரம்!
பொதுவா ஒருத்தர் டைரக்டர் ஆக றதுக்கான புராசஸ் ரொம்பப் பெருசு. இங்கே ஃபீல்டுல இருக்கும் பெரிய டைரக்டர்ஸ் எல்லாருமே பல போராட் டங்களைச் சந்திச்சுதான் அந்த இடத்தை அடைஞ்சிருக்காங்க. ஆனா, எனக்கு அது ‘காட் கிஃப்ட்!’. அந்த வாய்ப்பு சில விநாடி பேச்சிலேயே கிடைச்சிடுச்சு. அதுவும் தெலுங்குல ரொம்ப சக்சஸ்ஃபுல் படமான ‘வர்ஷம்’ படத்தோட தயாரிப் பாளர் மூலமா. இந்தப் படம் அங்கே 175 நாட்கள் ஓடுச்சு. அதுக்கு முன்னால வந்த அவரோட படங்களும் வெள்ளி விழா படங்கள்தான். அந்த நேரத்தில் அவர் சொன்னா, யார் வேணும்னாலும் டைரக்ட் பண்ணத் தயாரா இருந்தாங்க. ஆனா, எனக்கு அந்த வாய்ப்பு அமைஞ் சது. அதுக்கு காரணம், என்னோட உழைப்பையும் அவர் பார்த்திருக்கார்.
என் மேல நான் வெச்சிருந்த நம்பிக் கையை விட ராஜு சார் வெச்சிருந்த நம்பிக்கை பெருசு! நடனம், நடிப்புன்னு நல்லா போய்ட்டிருக்கிற நமக்கு இது தேவையா? திடீர்னு இப்படி ஜம்ப் ஆகிறோமேன்னு, அந்த நேரத்தில் இது எதையுமே நான் யோசிக்கலை. அந்தப் படத்தை முடிச்சுட்டு அடுத்து ‘பவுர்ணமி’ படம் பண்ணும்போது, ‘‘அப்போ எப்படி அந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தோம்? ஒருவேளை அந்தப் படம் சரியா போகாம இருந்திருந்தா, நம்மோட நிலை என்னவாக இருந்திருக்கும்? ’’னு அப்போதான் யோசிச்சேன்.
நான் டைரக்ட் செய்த முதல் படம் சித்தார்த், த்ரிஷா நடிச்ச ‘நுவ்வொஸ்தா வன்டே நேனொத்துன்டானா’ படம்தான். ‘வர்ஷம்’ படத்தில் நான் மாஸ்டரா வேலை பார்த்த பாட்டோட முதல் வரிதான் இந்த டைட்டில். இதுக்கு தமிழ்ல, ‘நீ வரேன்னு சொன்னா, நான் வேணாம்னா சொல்லப் போறேன்’ன்னு அர்த்தம். ‘நீ டைரக்ஷ னுக்கு வந்தா, நான் வேணாம்னா சொல்லப்போறேன்!’னு சொல்ற மாதிரி எனக்கு அந்தத் தலைப்பு ரொம்பவும் பாசிடிவ்வா தெரிஞ்சுது.
படத்தோட முதல் நாள் ஷூட்டிங். காலையில 7 மணி கால்ஷீட்டுன்னு நினைக்கிறேன். விடியற்காலை 4 மணிக் கெல்லாம் எனக்கு முழிப்பு வந்துடுச்சு. போய் குளிச்சேன், சாமி கும்பிட்டேன். அப்பவும் விடியலை. எப்படா இந்த சூரியன் வரும்னு இருந்துச்சு. அப்படி ஓர் ஆர்வம். அடிக்கடி கதவைத் திறந்து திறந்து பார்த்துக்கிட்டேன். ஷூட்டிங் போக கார் வருதோ இல்லையோ, நடந்தே போறதுன்னா கூட போயிடலாம்கிற அளவுக்கு ஜாலியா இருந்தேன். காரணம், அந்தத் தயாரிப்பாளரோட நம்பிக்கைதான் எனக்கு அவ்வளவு சுறுசுறுப்பையும், அந்த ஜாலியையும் கொடுத்துச்சு. அந்த முதல்நாள் ஷூட்டிங் போறப்போ நான் எப்படி இருந்தேனோ, அதே மனநிலையில்தான் இன்னைக்கும் இருக்கேன். டைரக்ஷன் பண்ணும்போது மட்டும்னு இல்லை. ஒரு பாட்டு பண்ணும்போதும், படத்தில் நடிக்கப் போகும்போதும் அதே மனநிலையோடத்தான் இருக்கேன்.
ஒருமுறை, ஒரு ஷுட்டிங்ல பெரிய டைரக்டர் ஒருத்தரோட ரூம்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டிருந்தேன். கேமராமேனும் கூட இருந்தார். அந்த நேரத்தில் டி.வி-யில் நான் கொரியோகிராஃப் பண்ணின ஒரு பாட்டு ஓடுச்சு. அதைப் பார்த்ததும் அந்த டைரக்டர் என்னைப் பாராட்டிட்டு, ‘‘இதே ஆர்வம் உங்களுக்கு எப்பவுமே இருக் குமா?’’ன்னு கேட்டார். எதிர்காலத்தில் நடக்கப்போறதற்கு, அந்த நேரத்தில் பதில் சொன்னா அது நல்லா இருக்கு மான்னு, எதுவும் பேசத் தோணலை. ‘‘இன் னும் ரெண்டு தோசையும், ஐஸ்கிரீமும், குலோப் ஜாமும் ஆர்டர் பண்ணிக்கட் டுமா?’’ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டேன். என்மேல இருந்த நல்ல அபிப்ராயத்தில் தான் அவர் அப்படி கேட்டார். இப்போ இதை எழுதும்போதுகூட நான் ஒரு பாட்டோட ரிகர்சல் வேலையிலதான் இருக்கேன். அதே ஆர்வத்துடன்தான் போய்க்கிட்டிருக்கேன். அதனாலதான் இதை எழுத முடியுது.
நான் டைரக்ஷன் செய்த முதல் படம் மியூசிக் பீஸ்லதான் ஷூட் பண்ண ஆரம் பிச்சேன். ரெண்டாவது படமும் அப்படித் தான். மூணாவது படம் பண்ணும்போது திரும்பவும் பாட்டுல பண்ணினா, இதே சென்டிமென்ட் ஆகிடும் போலிருக் கேன்னு நினைச்சு ‘போக்கிரி’ படத்தை சீன்ல ஆரம்பிச்சுட்டோம். வொர்க் அவுட் ஆச்சு.
முதல் தெலுங்குப் படத்தை எந்த டயலாக்கும், இல்லாமல் மியூசிக்கும் இல்லாம சின்னதா ஒரு பிட் சாங் மாதிரி ஆரம்பிச்சப்போ, அங்கே இருந்தவங் களுக்கு எதுவுமே புரியலை. நான் எடுத் துக்கிட்டே இருந்தேன். ஷூட் முடிஞ்சு என் மைண்ட்ல இருந்த மியூசிக்கை, படத்தோட இசையமைப்பாளர் தேவி பிரசாத்திடம் சொன்னேன். பிரமாதமா பண்ணினார். அதை கட் பண்ணி பார்த் தோம். ‘ஓ.கே, நான் தேறிடுவேன்!’னு என்னைவிட என் தயாரிப்பாளருக்கு தெரிஞ்சுது.
சாதாரணமா நான் படம் பண்ணும் போது ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன்னு எல்லாருக்குமே நடிச்சு காட்டு வேன். ‘நுவ்வொஸ்தாவன்டே நேனொத் துன்டானா’ பட ஷூட்டிங்கிலும் அப்படித் தான். ‘உங்களோட முகம் த்ரிஷாகிட்டே யும், உங்களோட பாடி லாங்குவேஜ் சித்தார்த்கிட்டயும் இருக்கு’ன்னு படம் பார்த்தவங்க சொன்னாங்க. அந்தப் படத்துக்கு வேணு சார் கேமராமேன்... சூப்பர்! படத்தோட செகண்ட் ஆஃப் முழுக்க க்ரீன் அண்ட் பிரவுன்ல இருக்கும். அதுக்காகவே முதல் பாதி நிறைய கலர்ஸ் வெச்சி ஷூட் செய்தோம். அந்த நேரத்தில் ஆந்திராவுல பயங்கர புயல். அதுக்கு இடையில ஷூட் செய்தோம். திரில்லா இருந்துச்சு. நிறைய ஆக்டர்ஸ் கூட நான் பழகியிருந்தாலும் டைரக்டரா பழகுறது ரொம்ப புதுசா இருந்துச்சு. டைரக்டர் ஆனதுக்கு அப்புறம் நான் அனு பவித்த இன்னொரு விஷயம், என் னன்னா? வாழ்க்கையில நம்மை கொஞ் சம் சீரியஸான ஆளா எடுத்துக்கிட் டாங்கன்னு எனக்குத் தோணியது.
ஒரு படத்துக்கு டைரக்டர்தான் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’னு சொல்வாங்க. அதே டைரக்டர் தன் கூட இருக்குற எல்லாரையும் மேனேஜ் பண்ணவும் தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன். மேனேஜிங் டைரக்டராவும் இருக்கணும். ஒரு படம் ஓடிச்சுன்னா அதுக்கு நிறையப் பேர் காரணம். அதுவே, அந்தப் படம் ஓடலைன்னா அதுக்கு டைரக்டர் மட்டும்தான் காரணம்கிற சூழல் இங்கே இருக்கு. ஒரு படத்தோட ஹீரோவா, ஒரு பாட்டுக்கு கொரியோகிராஃபரா இருந்து கத்துக்கிட்டதைப் போல டைரக்ஷன்ல யும் நான் நிறைய கத்துக்கிட்டேன். அதில் ரொம்ப முக்கியமான விஷயமா சொல்றதுக்கும் ஒண்ணு இருக்கு. அதை அடுத்து சொல்றேன்.
- இன்னும் சொல்வேன்..
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago