கோச்சடையான் தாமதம் : ரஜினி ரசிகர்கள் அதிருப்தி!

பொங்கல் ரேஸில் இருந்து 'கோச்சடையான்' விலக இருப்பது, ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

'வீரம்', 'ஜில்லா', 'கோச்சடையான்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், 'கோச்சடையான்' பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்குவது உறுதியாகிவிட்டது.

இதனால் 'வீரம்' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்கள் நேரடி போட்டியில் இறங்கியிருக்கிறது. 'கோச்சடையான்' எப்போது வெளியாகும் என்பது குறித்து விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்தன்.

'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டிற்கு, நேரு உள்விளையாட்டு அரங்கினை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், தற்போது அதனை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தேதியில் வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். அநேகமாக டிசம்பர் 25ம் தேதி வெளியிடப்படலாம்.

டிசம்பர் 25ம் தேதி 'கோச்சடையான்' இசை வெளியானால், பொங்கல் வெளியீடு என்பது சாத்தியமில்லை. ஆனால், ரஜினி “கண்டிப்பாக, ஜனவரியில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவு போட்டிருக்கிறாராம். ஆகையால், 'கோச்சடையான்' படம் ஜனவரி 26ம் தேதி வெளியாவதற்கு உண்டான பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது இயக்குநர் செளந்தர்யா அஸ்வின், சீனாவில் 'கோச்சடையான்' படத்தின் இறுதிகட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார். டிசம்பர் 10ம் தேதி தான் சென்னைக்கு வருவார், அதுவும் உறுதியாகத் தெரியாது என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே, ஒரு முறை அக்டோபரில் இசை வெளியீடு, ரஜினி பிறந்த நாளில் படம் வெளியீடு என்று அறிவித்தார்கள். அதுவும் தள்ளிப் போனது. தற்போது ரஜினி பிறந்த நாளில் இசை வெளியீடு, பொங்கலுக்கு படம் வெளியீடு என்பதும் தள்ளிப் போய் இருக்கிறது.

இவ்வாறு 'கோச்சடையான்' படம் சரியான திட்டமிடல் இல்லாதது, ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE