ஒரு வாரத் திரைப்படங்கள்

1937களில் தொடங்கி 2007 வரை ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை ஒடிய திரைப்படங்களை (சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டா, வள்ளி, ஹரிதாஸ், கிழக்கே போகும் ரயில், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கரகாட்டக்காரன், சந்திரமுகி, பருத்தி வீரன்...) தமிழ்த் திரையுலகம் கண்டுள்ளது. அவைகளுடன் 200 நாட்கள், 175 நாட்கள், 100 நாட்கள் என நூற்றுக்கணக்கான படங்களையும் சந்தித்துள்ளது.

2010 முதல் இந்த நிலை ஒரேடியாக மாறி ஒரு படம் 4 வாரங்கள் சரிவர ஒடினாலேயே வெற்றிப் படமாகக் கருதும் நிலை வந்துவிட்டது. தற்போது எண்ணற்ற திரையரங்குகளில் ஒரு திரைப்படத்தை வெளியிடும் முன்னேற்றத்தினால் அதிக நாட்கள் ஒடுவது தடைபட்டாலும் அது மட்டுமே முக்கியக் காரணம் அல்ல.

படங்கள் Vs திரையரங்குகளின் எண்ணிக்கை

வருடத்திற்கு 60 முதல் 80 வரை புதிய படங்கள் தமிழில் வெளியாகும் என்ற நிலைமை மாறி, தமிழில் மட்டுமே 160 திரைப்படங்களுக்கு மேலாக வெளியாகின்றன. அதனுடன் 50 முதல் 60 வரை இந்தி திரைப்படங்களும் மற்றும் 50 ஹாலிவுட் திரைப்படங்களும், இவை மட்டுமில்லாமல் குறைந்தது 50 முதல் 60 வரை ஏனைய மொழிப் படங்களும் தமிழ்நாட்டில் வெளியாகின்றன.

ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 300 முதல் 330 திரைப்படங்கள்வரை புதிய படங்கள் வெளியாகின்றன. அதாவது, அனைத்து மொழிகளும் சேர்த்து வாரத்திற்கு ஆறு திரைப்படங்கள். இதில் கவலைப்பட வேண்டிய நிலைமை என்னவென்றால், வருடத்திற்கு 60 முதல் 80 வரை திரைப்படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் 1200க்கும் மேலிருந்த திரையரங்குகள், இன்று 3000க்கும் மேலான தமிழ் மற்றும் அனைத்து மொழித் திரைப்படங்கள் வெளிவரும் நிலையில், 1000க்கும் குறைவான திரையரங்குகள் மட்டுமே செயல்படுவது! இந்த நிலைமை, ஒரு திரைப்படம் அதிக நாட்கள் ஒடும் வாய்ப்பைப் பெருமளவில் குறைத்துவிட்டது.

வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளிவரும்போது திரையரங்கில் ஏற்கனவே ஒடி கொண்டிருக்கும் திரைப்படங்களை எடுத்துவிடும் நிலை ஏற்பட்டது. ஆகவேதான் இன்று மிகப் பெரிய நடிகர்களின் படங்கள்கூட நான்கு அல்லது ஐந்து வாரங்கள் மட்டுமே நிறைய திரையரங்குகளில் ஒடும் நிலைமை உள்ளது. பெரிய படங்களுக்கே இந்த நிலைமை என்றால், சிறிய படங்களின் நிலை என்ன?

உரிமை மீறல்

திரைப்படங்களின் எண்ணிக்கை பெரிதானது போலத் திரையரங்குகளின் எண்ணிக்கையும் பெருகாத வரை இதேநிலைதான் நீடிக்கும்.ஆங்கிலப் படங்களின் உரிமை பெறாமல் அவைகளின் சாராம்சத்தை எடுத்துத் திரைப்படங்களாக உருவாக்குவது 1940 முதலே தமிழ் திரைப்படத்தில் தொடர்ந்துவருகிறது. ஹாலிவுட் திரைப்படமான ‘தி மேன் இன் தி மாஸ்க்’ உத்தமபுத்திரனாக வெளிவந்து வெற்றி கண்டது. அதன் பின் எண்ணற்ற படங்கள் இப்பாணியைப் பின்பற்றின. 1990களுக்குப் பிறகு, தொழில்நுட்ப உலகமயமாக்களினால், இத்தகைய உரிமை மீறல்கள் பெருமளவில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஆனால் தமிழ் சினிமா தற்போது சந்தித்துவரும் உரிமை மீறல் திருட்டு டிவிடி, திருட்டு கேபிள் ஒளிபரப்பு மற்றும் திருட்டு வலைதளம் மூலமாக திரைப்படத்தில் இணையத்தில் பதிவிடுவது. படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தரத்தில் இந்த மூன்று ஊடகங்கள் வழியாக வெளிவந்து திரைப்படத் தொழிலை பாதித்துவருகிறது. ஒரு திரைப்படத்தை வெள்ளிதிரையில் தான் முதலில் காண முடியும் என்ற நிலைமை மாறி வெளிவந்த அடுத்த நாளே சட்டத்தை மீறிய ஊடகங்கள் மூலம் பார்க்க முடியும் என்பது மிகப் பெரிய உரிமை மீறல் ஆகும். இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை மெல்ல மெல்ல அழித்துவருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் பூதாகாரமாக வளர்ந்துள்ள இந்த பிரச்சினையை தொழில்நுட்பம் மூலமாகவே அரசு மனம் வைத்தால் ஒடுக்கி விட முடியும். இவை ஒடுக்கப்படாதவரை, ஒரு திரைப்படம் ஒரு வாரம் வெற்றிகரமாக வெள்ளித்திரையில் ஒடுவதே மிகப் பெரிய சாதனையாகி விடும்.

தொடர்புக்கு : dhananjayang@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE