ஊரில் வாங்கியிருக்கும் கடனை அடைக்க முயற்சிக்கும் இளைஞன் சந்திக்கும் சோதனைகளே 'ஆண்டவன் கட்டளை'.
வெளிநாடு போய் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் விஜய் சேதுபதி. அதற்காக நண்பர் யோகி பாபுவுடன் சென்னை வந்து பாஸ்போர்ட் எடுக்க தீவிரம் காட்டுகிறார். இடையில் இடைத் தரகர்களை சந்திக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கான பதில் திரைக்கதையாக விரிகிறது.
கடன் பிரச்சினையில் கெஞ்சுவது, வாடகை வீட்டுக்காக அலைந்து சோர்வை வெளிப்படுத்துவது, நேர்மையால் மிகப் பெரிய வாய்ப்பை இழந்த வருத்தம், பொய் சொல்லி சமாளிக்கும் நம்பிக்கை, நண்பன் சொன்ன திறனாளியாக மெயின்டெய்ன் செய்வது, நீதிமன்ற கவுன்சிலிங் அறையில் மௌன மொழியால் கொந்தளிப்பது, வேதனை, இழப்பு, ஏமாற்றம், நெகிழ்ச்சி என ஒவ்வொரு உணர்விலும் உடல்மொழியில், குரலசைவில் விஜய் சேதுபதியின் நடிப்பு கவர்கிறது.
நிருபர் கதாபாத்திரத்தில் வரும் ரித்திகா சிங் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அதுவும் செய்யாத திருமணத்துக்காக அவர் படும் அவஸ்தைகளை கோபமாகவும், பொறுமை இல்லாமலும் கடுப்பாக வெளிப்படுத்தும் விதமும், விஜய் சேதுபதியிடம் சம்மதம் சொன்ன பிறகு வெட்கமும், மகிழ்ச்சியும், காதலும் கலந்து புன்னகைக்கும் விதமும் அட்டகாசம்.
யோகி பாபு வரும் காட்சிகள் முழுக்க அதகளம். உன் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை. 'சார் பவுடர் போட்டிருக்கேன்', ' ஐ யம் லண்டன் சிட்டிசன். அடிக்கிற வேலை எல்லாம் வேணாம்', 'ஜெயிச்சவனை தோத்தவன் ஏன் அடிக்கிறான்', 'எவ்ளோ பெரிய மூக்கு', 'இப்போ கோபமா டீயை கீழே ஊத்துவான் பாரேன்' என கவுன்டர் கொடுத்து காமெடி சரவெடி கொளுத்துகிறார். இரண்டாம் பாதியில் குணச்சித்ர நடிகனுக்கான அம்சங்களை அள்ளித் தருகிறார். இன்னும் சொல்லப் போனால் யோகி பாபுவுக்கு இது திருப்புமுனை திரைப்படம். இனி அதிக படங்களில் பாபுவைப் பார்க்கலாம்.
நேசன் கதாபாத்திரத்தில் அரவிந்தன் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சீனியர் வழக்கறிஞராக வரும் ஜார்ஜ் நடந்துக்கிட்டே பேசலாமா என்று கேட்டு, நிலைமை உணர்ந்து நின்று கொண்டு பேசும் விதம் ரசிக்க வைக்கிறது. திறனாளிதான். மாற்றுத் திறனாளி என ரைமிங் பேசும் ஜார்ஜின் நடிப்புக்கும், நீதிபதி முன் நின்று ஜார்ஜின் சமாளிப்பு ரியாக்ஷன்களுக்கு ரசிகர்கள் கைதட்ட தவறவில்லை. ஜார்ஜுடன் ஒத்திசைவான நடிப்பில் வினோதினியின் நடிப்பும் நிறைவாக உள்ளது.
நாடக நடிகராக வரும் சாந்தகுமார், நீதிபதியாக வரும் சுசீலா, குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரியாக வரும் ஹரிஷ், போலி கையெழுத்து போடும் சேஷு, குமார் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.எஸ்.ஸ்டேன்லி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, முத்துராமன், சீனு மோகன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரமேஷ் திலக் நமோ நாராயணா ஆகியோருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை.
பாஸ்போர்ட் அலுவலகம், நாடக அரங்கம், சென்னை வாடகை வீடுகள், நீதிமன்றம் என முக்கிய அம்சங்களை சண்முக சுந்தரம் இயல்பு மீறாமல் தன் கேமரா மூலம் கடத்தி இருக்கிறார். கேவின் இசையும், பின்னணியும் படத்துக்கு மிகப் பெரிய பலம். அனுசரண் இரண்டாம் பாதியில் சில இடங்களில் சின்ன சின்னதாய் கொஞ்சம் தொய்வைக் குறைத்திருக்கலாம்.
''படிச்சா டாக்டர்தான் ஆகமுடியும். படிக்கலைன்னா மெடிக்கல் காலேஜ் கட்டி கல்வித்தந்தையே ஆகலாம்'', ''சம்பாதிக்கிறது லண்டன்லயும், சவுதிலயும். ஆனா கிறிஸ்டீனுக்கும், முஸ்லிமுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா?'', '' ஆக மொத்தம் தமிழ்நாட்ல தமிழ்ல பேசுனா பிரச்சினை. அதான் நானும் காந்தியும் லண்டன் போறோம்'',''வேலைக்கு விசுவாசமா இருப்பதா.. வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருப்பதா?'' என்ற மணிகண்டனின் வசனங்கள் கூர்மை.
அருள் செழியனின் கதையைப் படமாக்கிய விதத்திலும், மணிகண்டன், அருள் செழியன், அனுசரன் என மூவரின் திரைக்கதை அமைப்பும் சிறப்பு. இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் நாயகனின் நிலையை இயல்பாக, அதே சமயம் அழுத்தமாக சொன்ன விதத்தில் இயக்குநர் மணிகண்டன் முத்திரை பதிக்கிறார். நிறைய காட்சிகளில் கதாபாத்திரங்கள் செயல்பாடுகளில் இயக்குநரின் புத்திசாலித்தனமும் பளிச்சிடுகிறது.
இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வையும், விஜய் சேதுபதி வாடகை வீட்டின் உரிமையாளரிடம் கிராமத்து ராஜா வசனம் பேசுவதையும் குறைத்திருக்கலாம். இதுபோன்று ஆங்காங்கே சின்னச் சின்ன குறைகள் மட்டுமே தென்படுகின்றன.
இதை தவிர்த்துப் பார்த்தால் காலத்துக்குத் தேவையான கருத்தை சொன்ன விதத்தில் 'ஆண்டவன் கட்டளை' அர்த்தமுள்ள சினிமா.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
10 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago