முதல் பார்வை: மரகத நாணயம்- ஜொலிக்கிறது!

By உதிரன்

ஒரு வட்ட வடிவமான நாணயம் போன்ற மரகதக் கல்லை கைப்பற்ற நினைக்கும் மனிதர்களின் கதையும், அவர்களின் பயணமுமே 'மரகத நாணயம்'.

40 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக நண்பன் டேனியல் சொன்னதின் பேரில் ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார் ஆதி. சின்ன சின்ன கடத்தல் வேலைகளால் கடனை அடைக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர் பெரிதாய் ஏதாவது செய்யலாம் என்கிறார். ராமதாஸ் அதற்கு உடன்படவில்லை. ஆனால், அதற்கான வாய்ப்பு வேறு வழியில் வருகிறது. மரகத நாணயத்தைக் கண்டுபிடித்து கைப்பற்றி ஒப்படைத்தால் ரூ.10 கோடி பணம் தருவதாக டீல் பேசப்படுகிறது. ஆனால், மரகத நாணயத்தை தொட்டாலே இறந்துவிடுவார்கள் என்பது தெரிந்தும் துணிந்து மரகத நாணயத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அதில் என்ன நடந்தது, முயற்சி பயனளித்ததா, பாதிப்புகள் என்ன என்பதே 'மரகத நாணயம்' திரைக்கதை.

ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு லாஜிக், அசாதாரணமான காமெடி, உணர்வுபூர்வமான நெகிழ்ச்சி என முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்.

படத்தின் மிகப் பெரிய பலம் கதாபாத்திரங்களின் தேர்வுதான். காதலிக்காக கலங்குவது, கடன் பிரச்சினையில் இருந்து மீண்டெழ நினைப்பது, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகிய உணர்வுகளை கையாள்வதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆதி. நண்பர்களுடனான பிரிவின் போது இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

நிக்கி கல்ரானிக்கு சவாலான கதாபாத்திரம். அதை மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். குரலுக்கேற்ற தோரணையை அளித்த விதத்திலும் கவனம் ஈர்க்கிறார். இனி நிக்கி கல்ரானிக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையக் கூடும்.

ராமதாஸ் இரு வேறு விதமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். நகைச்சுவை, குணச்சித்திரம் கலந்த பக்குவமான நடிப்பால் தனித்துத் தெரிகிறார். டேனியல் தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நியாயமான நடிப்பை அளித்திருக்கிறார்.

நகைச்சுவை கலந்த தாதா பாத்திரத்தில் வரும் ஆனந்த்ராஜ் அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது அடியாளாக வந்து 'ததும்ப ததும்ப டீசல் போட்டிருக்கிறோம்' என்று சொல்லும் முருகானந்தம், தமிழய்யாவாக தூய தமிழில் பேசி ஒற்றை வார்த்தையில் சிரிப்பைக் கொளுத்திப் போடும் சங்கிலி முருகன், சாதாரண சாமியார் என்ற ரேஞ்சில் அறிமுகமாகி தன் பலத்தைக் காட்டிய கோட்டா சீனிவாச ராவ், 'பருத்திவீரன்' பொணந்தின்னி குரலில் பேசியும், நடனத்தால் சிரிப்புக்கு உத்தரவாதமும் அளித்த அருண்ராஜா காமராஜ், நேர்மைக்கும், கதாபாத்திர கச்சிதத்துக்கும் உதாரணமான எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. பாடல்கள் உறுத்தாமல், படத்தின் காட்சிப் பின்னணியுடன் ஒட்டியே அமைந்திருப்பது சிறப்பு. எடிட்டர் பிரசன்னா ஜி.கே. முதல் பாதியில் மட்டும் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.

சிரிப்பு, நெகிழ்வு ஆகிய இரண்டையும் பிரதானமாக வைத்து கதை, திரைக்கதை அமைத்து அதை சுவாரஸ்யமாக நகர்த்திய விதத்தில் இயக்குநர் சரவன் நிமிர்ந்து நிற்கிறார். முதல் பாதியில் கதைக்குள் நேரடியாக வரும் முன் கொடுக்கும் சில விவரணைகளில் மட்டும் சோர்வு தென்படுகிறது.

மரகத நாணயத்தின் வரலாறு சொல்ல பயன்படுத்தப்படும் அரசன் கதை, ஆவிகளின் தனித்த உலகம் குறித்த பார்வை, பரிசுத்த தூய ஆவிகளின் உதவியும், அன்பும் என வேறு மாதிரியான சூழலைக் காட்டிய விதத்தில் 'மரகத நாணயம்' மதிப்புமிகு சினிமாவாக ஜொலிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்