தமிழ் திரையுலகம் மாறி வருகிறது: நடிகர் சந்தீப் கிஷன் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நாயகர்களில் ஒருவர் சந்தீப் கிஷன். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘மாநகரம்’ படத்தில் நாயக னாக நடித்த இவர் தற்போது ‘மாயவன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:

‘மாநகரம்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?

அப்படத்தின் கதையை ஒரு அணியாக அமர்ந்து கேட்டோம். அதை நானே தயாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். பின்னர் பிரபு தயாரிப்பதாக சொன்னபோது, சந்தோஷமாக விட்டுக் கொடுத்தேன். நாங்கள் மிகவும் நம்பிய படம், எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது என்று நினைக்கும்போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

‘மாயவன்’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?

குமரன் என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தன்னுடைய வேலையை மிகவும் சீரியஸாக எடுத்துச் செய்யக்கூடிய ஒரு நபரின் பாத்திரம் அது. அந்தக் கதாபாத்திரம் முன்கோபம் கொண்டதாக இருக்கும். ‘மாநகரம்’ படத்திலும் முன்கோபக்காரனாகத் தான் நடித்திருந்தேன். என்னைப் பார்த்தால் கோபக்கார இளைஞனாகத் தெரிவதாக நினைக்கிறேன்.

அடுத்ததாக ‘அறம் செய்து பழகு’ படத்தில் பிரச்சினையே வேண்டாம் என்று ஓடிப் போகிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனக்கு வரும் கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என நினைப்பேன்.

நீங்கள் முன்பு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தீர்களே, இப்போதும் அங்கு நடிக்கிறீர்களா?

இரு மொழிகளிலும் சரிசமமாக படங்களை செய்து கொண்டிருக்கிறேன். கிருஷ்ணவம்சி இயக்கத்தில் தெலுங்கில் ‘நட்சத்திரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். அது பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. அந்தப் படம் முடியும் வரை வேறு எந்ததொரு படத்திலும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என இருக்கிறேன்.

ஒரு கதாபாத்திரத்துக்கு உங்களை எப்படித் தயார் செய்து கொள்வீர்கள்?

முதலில் கதாபாத்திரத்தின் பின்னணி குறித்து எழுதுவேன். இந்தப் பின்னணியின் மூலமாக அக் கதாபாத்திரத்தின் முழுமையை உணர்ந்து இப்படியெல்லாம் செய்யலாம் என்று நினைப்பேன். ஒரு நடிகனாகப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதால், அந்தக் கதாபாத்திரங்களுடைய வாழ்க்கையின் புரிதலும் எங்களுக்குக் கிடைக்கிறது. அதை நான் மிகவும் சந்தோஷமாகச் செய்வேன்.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நீங்கள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததாக கூறப்படுகிறதே?

கவுதம் சாரை முதலில் நடிக்க வாய்ப்பு கேட்டுத்தான் சந்தித்தேன். அப்போது அவர், ‘சென்னையில் ஒரு மழைக் காலம்’ என்ற பெயரில் 4 புதுமுகங்களை வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்தார். அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிக்க வைப்பதாக கூறியிருந்தார். பின்னர் அந்தப் படத்தைக் கைவிட்டார். இந்த சூழலில்தான் நான் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். ரொம்ப பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். ஒரு கட்டத்தில் வெளியே நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

உதவி இயக்குநராக இருந்த நீங்கள் படங்களை இயக்குவீர்களா?

ஒரு படத்தை விமர்சிப்பது எளிது. ஆனால் இயக்குவது மிகவும் கடினம். உண்மையில் உள்ளே சென்று பார்த்தால் மட்டுமே ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் என்பது விளங்கும். படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கொஞ்சம் பணம் சம்பாதித்தவுடன் அதைச் செய்வேன்.

தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மத்தியில் சிறு படங்களும் சமீபத்தில் கவனத்தை ஈர்க்கின்றன. இதைப் பற்றி..?

ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைத்துறை மாறிக்கொண்டே இருக்கும். தமிழ் திரையுலகமும் மாறி வருகிறது. யதார்த்தமான படங்கள் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. சி.வி.குமார், எஸ்.ஆர்.பிரபு, விஜய் சேதுபதி போன்றவர்கள் எல்லாம் கதை தேர்வில் மிகவும் கவனம் ஈர்க்கிறார்கள். இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்