‘விஸ்பரூபம்’ பட ரிலீஸின்போது கமல் பயணிக்க நினைத்த புதிய பாதையை தற்போது தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்காக கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சேரன். புதிய படங்களை டி.வி.டி. மூலம் வீடுதோறும் விற்பனை செய்யும் ஒரு புதிய திட்டத்தை அவர் தொடங்கியிருக்கிறார். ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் சூட்டியுள்ள இந்த திட்டம் டி.டி.எச், இணையம், கேபிள், டி.வி.டி. உள்பட பல வழிகளில் புதுப் படங்களை வீடுதோறும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகிறது. புதிதாக தொடங்கியுள்ள ‘சினிமா டூ ஹோம்’ திட்டத்தின் வழியே ஆகஸ்டு 14ம் தேதி முதன்முதலாக ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வீட்டிலேயே பார்க்கும்வகையில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் சேரன். இதற்கான வேலைகளில் பரபரப்பாக இருக்கும் அவரை ‘தி இந்து’ வுக்காக சந்தித்தோம்.
திரையரங்கில் படம் வெளியாகும்போதே டிவிடியும் வெளியாகும் சூழல் பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே இருக்கிறது. இந்தியாவில் இந்தச் சூழல் வருவதற்கு தாமதமானது ஏன்?
தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விஷயங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் கமல் முன்னோடியாக இருப்பார். ‘மகாநதி’ படப்பிடிப்பின்போதே கண்டினியூடிக்காக ஹாண்டி கேம் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுவந்தார். நான் இப்போது எடுத்துள்ள முயற்சிக்குகூட ‘விஸ்வரூபம்’ படத்தின்போது வித்திட்டார். அப்போது அவர் அதை செய்திருந்தால் கிட்டத்தட்ட 300 படங்களின் தோல்வியை சரி செய்திருக்க முடியும். தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம். ஆன்லைன், இணையம் என்று படங்கள் வெளிவரும் சூழலில்தான் இந்த திட்டத்தை தொடங்குகிறோம். நாங்களாகவே ஒரு உரிமத்தை உருவாக்கி விற்கவில்லை. அது தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை யாரும் கேட்பதில்லை என்பதுதான் எங்கள் கவலை. அதை இப்போது நியாயமாக செய்ய வருகிறோம். இதுக்கு யாரும் தடை போட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இந்த திட்டத்தை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
எல்லா துறைகளுமே அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன. அதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. விஞ்ஞானம் வளர்ச்சி அடையும்போது அதில் வரும் மாற்றங்களையும் நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதுதான் யதார்த்தம். இன்று விவசாயிகளின் நிலை பரிதாபமாகத்தானே உள்ளது. அதைப்பற்றி நாம் யாருமே கவலைப்படுவதில்லையே! பிலிம் ரோல் என்கிற விஷயம் காணாமல் போய் விட்டதே. திரையரங்குகள் அழிந்துவிடும் என்று மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும்? இதே திரையரங்குகள் துளிர்த்தபோது நாடக மேடைகள் அழியத்தொடங்கியதையும் பார்க்கத்தானே செய்தோம்! இன்றைக்கும் இங்கு ரிலீஸ் ஆகும் ஒரு இந்திப்படம் முதல் வாரத்திலேயே கோடிகளை வசூல் செய்கிறது. ஆகவே மாற்றத்தை மக்களே உருவாக்குவார்கள். அடுத்ததாக ‘அம்மா திரையரங்கம்’வரவுள்ளது. ரூ.25 க்கு டிக்கெட் கிடைக்கப்போகிறது. எல்லோரும் அங்கு போகத்தான் போகிறோம். அப்போது மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்.
திருட்டு டிவிடிக்கள் பரவ சினிமாக்காரர்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?
அந்த ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. இங்கே யாருடைய உழைப்பும் திருட்டுத்தனமாக கையாளப்பட கூடாது. நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் கவனமாக இல்லாவிட்டால் திருட்டுத்தனமும் சுரண்டலும் இருக்கத்தான் செய்யும். பர்மா பஜாரில் விற்கப்படும் திருட்டு டிவிடியை எதிர்த்து திரையரங்கத்தினர் நிற்பதில்லை. அவர்கள் அதற்காக மெனக்கெடாமல் இருக்கும்போது, நாங்களும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்று தியேட்டர் கிடைக்காததால் 800 படங்கள் வெளியாகாமலேயே உள்ளன. கிட்டத்தட்ட 200 தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.
இனி, புதிய படங்கள் திரையரங்க விற்பனை பிரிவுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுமா?
எந்த திரையரங்கம் தற்போது தயாரிப்பாளர்களோடு படத்தின் விலையை பற்றி பேசுகிறார்கள்? ‘படத்தை கொடுங்கள் நாங்கள் ஓட்டுகிறோம்’ என்று கூறுவதோடு சரி. திரைத்துறையில் விநியோகஸ்தர் என்ற பிரிவே இல்லாமல் போய்விட்டது. மொத்த வியாபரம்போல ஆகிவிட்டது. படத்தை பார்க்கிறார்கள், பிடித்தால் வாங்கு கிறார்கள். என்ன வசூல் வருகிறதோ அதிலிருந்து 20 சதவீதத்தை மட்டும் தயாரிப்பாளருக்கு கொடுக்கிறார் கள். 2 கோடி கிடைத்தாலும் 20 சதவீதம், 20 கோடி கிடைத்தாலும் 20 சதவீதம்தான். படம் சரியாக ஓடாவிட்டால் அதைத் தூக்கிவிட்டு அடுத்த படத்தை போட்டுவிடுகிறார்கள். இதனால் ஒரு படம் தோல்வியடைந்தால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர் மட்டும்தான். இதை எல்லாம் எதிர்த்து போராடத்தான் இன்று கற்பனைத் திறனை எல்லாம் சுருக்கி வைத்துக்கொண்டு நாங்களும் வியாபாரியாக மாற வேண்டிய நிலை வந்திருக்கிறது.
இதை கவனிக்க தொடங்கிவிட்டால் உங்களின் இயக்கம், நடிப்பு போன்ற பணிகள் பாதிக்கப்படுமே?
இப்போது தொடங்கியுள்ள வேலை சாதாரண வேலை இல்லை. இதை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். இங்கே சேரன் படம் இயக்க வில்லையே என்று யாரும் கவலைப்படப்போவதில்லை. நான் என்பது இங்கு என் சினிமா. என் பாதையை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.
எத்தனை படங்கள் ‘சினிமா டூ ஹோம்’ மூலம் ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கின்றன?
‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’படத்தை முதலாவதாக ஆகஸ்டு 14 ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இந்தப்படம் ‘சிடூஹெச்’சில் வெளியாகும் அன்று சுமார் 75 திரையரங்குகளிலும் ரிலீஸாகும். அடுத்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், ‘ஆள்’, ‘மேகா’, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய 3 படங்கள் கொடுத்துள்ளார். முதலில் இந்த படங்களை முறையே வெற்றிகரமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். கண் முன்னே ஒரு இருட்டு இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு காடு. அதையும் கடந்தால்தான் வெளிச்சத்தை பார்க்க முடியும். ஆகவே, முதலில் இப்போது படம் கொடுத்துள்ள தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். சரியாக இதை செய்யும்போது மற்றவர்கள் நிச்சயம் வருவார்கள்.
இந்த முயற்சிக்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறீர்களா?
அரசு ஏற்கனவே சினிமாவுக்கு நிறைய செய்துள்ளது. வரி விலக்கு கொடுத்துள்ளதே பெரிய விஷயம். இந்த புதிய திட்டத்தின் வழியே நாளைக்கு முறைப்படி டிவிடி போகும்போது அதிலும் திருட்டுத்தனம் தொடரப்பட்டால் இன்னும் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைப்போம்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago