கமல் 59 - சாகசப் பயணம்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

புகழ் மற்றும் வெற்றியின் அதீத வெளிச்சம் படும் குழந்தைகளால் பொதுவாக அதன் சுமையைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பெரியவர்கள் ஆகும்போது அந்த வெளிச்சமும் வெற்றியும் அவர்களுக்குப் பெரும்பாலும் பாதகமாகவே அமைகின்றன.

சக மனிதர்கள் வாழ்க்கையோடு வெளிப்படுத்தும் இயல்பான உறவு மற்றும் சின்னஞ்சிறு வெற்றிகளில் அந்தக் குழந்தைகள் பாந்தமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடிவதில்லை. பெரியவரான பின்னர் அவர்கள், தங்கள் பழைய புகழ் மற்றும் வெற்றியின் நினைவுச்சுமையை சுமக்க இயலாதவர்களாக நொறுங்கிப் போகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் சிறுவயதிலேயே தங்கள் ஆற்றல் மற்றும் ஆளுமை குறித்துக் கொள்ளும் தன்னுணர்வுதான். ஆனால் இதே தன்னுணர்வுடனேயே, பெரியவனான பிறகும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றிபெற்ற ஒரு விதிவிலக்குதான் கமல்ஹாசன். அவரது வெற்றி, நெருக்கடிகள் இரண்டுக்குமே பின்விசையாக இந்தத் தன்னுணர்வே அவரிடம் தொடர்ந்து தொழிற்படுகிறது.

களத்தூர் கண்ணம்மாவில் மாஸ்டர் கமல்ஹாசனாகத் தனது சினிமா விளையாட்டைத் தொடங்கியவர், அடுத்துப் பல ஆண்டுகள் தமிழ் சினிமா ஸ்டுடியோக்களிலேயே தனது பால்யத்தைக் கழித்திருக்கிறார். அக்காலத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், சாவித்திரி எனப் பலரின் பிரியத்தில் திளைத்து, ஸ்டூடியோக்களின் வெளிச்சக் கூடங்களிலேயே உறங்கி எழுந்த அந்த அதிர்ஷ்டச் சிறுவன் எல்லாரையும் போல வளருகிறான். உதட்டின் மேல் மீசை அரும்புகிறது. குழந்தைக் குரல் உடைந்து கர்ண கொடூரமாகிறது.

அவன் மீது இருட்டு கவிழ்கிறது. அவனது வெற்றிகள் எல்லாம் பழங்கதைகளோ என்று தோன்றுகிறது. தமிழ் சினிமா வேகவேகமாக அந்தச் சிறுவனை மறந்துவிட்டதை அவன் மெதுவாகப் புரிந்துகொள்கிறான். குறைந்தபட்ச பாதுகாப்பைத் தரும் பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத அந்தச் சிறுவனுக்கு எதிர்காலம் குறித்து எந்த நிச்சயமான பதிலும் இல்லை. தனக்குப் பிரியமான சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை, சாலையைக் கடக்கும் ஒரு அந்நியனைப் போல எதிர்வரிசை பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு பார்க்கிறான். இங்கிருந்துதான் அவனது அடுத்த போராட்டம் தொடங்குகிறது.

மீண்டும் சினிமாதான் தன்னை நிரூபிக்க ஒரே இடம் என்பதை அவன் உணர்கிறான். நடன உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்கிறான். நடன இயக்குனராகப் பணிபுரிகிறான். கிடைக்காமல் போன பள்ளிப் படிப்பு மீது ஏக்கம் ஏற்படுகிறது. வாசிக்கத் தொடங்குகிறான். எழுதுகிறான். எழுத்தாளர்களைத் தேடிப் போய் பார்க்கிறான். தமிழ் சினிமாவில் அப்போது புதிய அலையை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருந்த இயக்குனர் ஆர்.சி. சக்தி போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது. பழமையை மறுத்துப் புதுமை மேல் ஆசை கொள்ளும் இளமையின் ஆற்றல் மற்றும் புதிய கனவுகள் தவிர அவன் கையில் வேறொன்றும் இல்லை. தனது தன்னுணர்வின் மேலான நிச்சயமின்மை உந்த, அசோகமித்திரன்,

தி.ஜானகிராமன், திரைக்கதை ஆசிரியர் அனந்து, இயக்குனர் ருத்ரையா, வண்ணநிலவன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு எனத் தேடித் தேடி நண்பர்களையும் ஆசிரியர்களையும் கண்டு உரையாடி தனது ஆளுமையை விகாசப்படுத்திக்கொள்கிறான். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவரான தொ. பரமசிவன்வரை அறிவுலகத் தொடர்பு இன்றுவரை நீடிக்கிறது. இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகச் சேர்வதற்கு கமல்ஹாசன் என்ற அந்த இளைஞர் வாய்ப்பு கேட்கிறார். ஆனால் அவரை நடிகனாகவே இரு, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆற்றுப்படுத்தித் தன் படங்களில் நடிக்கவைக்கிறார். மலையாள சினிமாவில் அப்போது வெளிவந்த இணை சினிமாக்களில் நடித்ததன் மூலம் தன்னைப் படிப்படியாக முழுமையான நடிகனாகச் செழுமைப்படுத்திக்கொள்கிறார். நடிப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், எழுத்து, திரைக்கதை, திரைப்படத் தயாரிப்பு, பாடல், பத்திரிக்கை என அவரது அக்கறைகள் விரிவுகொள்கின்றன. இத்தகைய அக்கறைதான், தான் மதிக்கும் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தின் படப்பிடிப்பு போதிய பிலிம் இல்லாமல் பூர்த்தியாகாமல் நின்றபோது, தனது செலவில் பிலிம் வாங்கி அந்தப் படத்தைப் பூர்த்தியாக்கியது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் அவருக்கு எந்தப் பங்கும் கிடையாது.

சினிமாவில் கதாநாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்ற தன்னுணர்வுடனான போராட்டத்தில் கமல்ஹாசன் என்ற நடிகர், அன்றைய காலகட்டத்தின் இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த அழகன் ஆனார். விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு தடைகளைக் கடந்து வெளியானபோது, கமலை அக்காலத்தில் மானசீகமாகக் காதலித்தவர்கள்தான், இன்று 40களைக் கடந்த அந்த அத்தைகளும், அம்மாக்களும், அண்ணிகளும். இவர்கள் தமிழகத் திரையரங்குகளை நிரப்பி, கமல் மீதான தங்கள் பிரியத்தை நிரூபித்தனர். அவர்கள் வீட்டிலேயே தொலைக்காட்சியோடு வெகுநாட்களாகக் கட்டிப் போட்டுக்கொண்டவர்கள். திரையரங்குப் பக்கமே தலைகாட்டாதவர்கள்.

சகலகலா வல்லவன், உல்லாசப் பறவைகள், டிக் டிக் டிக், சவால், தூங்காதே தம்பி தூங்காதே என வர்த்தகப் பாதையிலும் கோகிலா, வறுமையின் நிறம் சிகப்பு, ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சத்யா, பேசும் படம் மாறுபட்ட பாதையிலுமாக இரட்டைக் குதிரை சவாரியை அவர் சவால்களுடன் இன்றும் செய்துகொண்டிருக்கிறார். சில சமயங்களில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி போல வர்த்தகமும், கலையும் முயங்கிய தருணங்களும் அவரது சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்தன.

60 வயதைத் தொட்டுவிட்ட கமல் ஹாசன் என்ற ஆளுமையின் வெற்றிகரமான அம்சம் அவரது மனதின் இளமையும், துவளாத ஆற்றலும்தான். அந்த ஆற்றல் அவரது வசனங்களில் உண்டு. அவர் பாடிய பாடல்களில் உண்டு. அவர் திரைப்படத்தில் புதிதுபுதிதாகக் காதலிக்கும் தருணங்களில் உண்டு. தமிழ்க் காதலைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்களில் அவர் முக்கியமானவர். 40 வயதுக்கு அப்புறமும் அருமையான காதல் சாத்தியம் என்பதை வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் அவர் ரகசியமாக வெளிப்படுத்துகிறார்.

ஆளவந்தான் படத்தில் வரும் நந்துவின் ஆற்றலுடன் கமலின் ஆற்றலை ஒப்பிட முடியும். கடவுள் பாதி, மிருகம் பாதி என்று நன்மையையும் தீமையையும் கலந்து பிரதிபலிக்கும் கலை அவருடையது. மகாநதியில் தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி என்ற பாரதியின் கவிதையைப் பாடியபோது கல்லூரி படித்த மாணவனாக என்னிடம் அப்பாடல் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஸ்ரீதேவி ஒரு பூங்காவில் கமலைத் தேடி வருகையில் அவர் தீர்த்தக் கரையினிலே பாடலைப் பாடிக்கொண்டிருப்பார். அந்தப் பாடலை இப்போது யூட்யூப்பில் கேட்கும்போதும் அழுகையை வரவழைத்துவிடும். 70களின் இறுதியில் நிறைவேறாமல் போன இளைஞர்களின் கனவுகள் மற்றும் காதலின் துக்கம் அந்தப் பாடலில் இருக்கிறது.

கமலை எந்தத் தன்னுணர்வு வெற்றிகரமானவராக ஆக்கியதோ, அவர் சாதிக்க முடியாத இடங்களுக்கும், சாத்தியமின்மைகளுக்கும் அதே தன்னுணர்வே காரணம். நாயகனின் ஆண்மையை அதீதமாக வெளிப்படுத்தி, தனது உடலைத் திரையில், கதாபாத்திரத்துக்கும் வெளியே ஆக்கிரமிக்கவைப்பவர் அவர். விருமாண்டியின் அறிமுகக் காட்சியை இதற்கு சிறந்த உதாரணமாகச் சொல்ல முடியும். கமல்ஹாசன் என்ற தன்னுணர்வைத் திரையில் அவர் மட்டுப்படுத்தியிருந்தால் இன்னும் மேலான கலைஞன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருப்பான்.

தமிழ் சினிமாவின் சிறந்த தருணங்கள் என்று கணக்கிட்டால் அவரது படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் முன் நிற்கும். கவனிக்கவே படாமல் போன படங்களில் அந்தத் தருணங்கள் அதிகம். பேசும் படமும், மும்பை எக்ஸ்பிரஸும் அதற்கு உதாரணம். நாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, ஹே ராம், அன்பே சிவம் படங்களில் உள்ள காட்சிகளும் வசனங்களும் ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் தருணங்களாக என்றும் இருக்கும். குணா படத்தில் குணசேகரன் சலூனுக்குள் நுழைந்து தனக்குத் திருமணம் என்று சொல்லும்போது, ‘கல்யாணம்….’ என்று பரிகாசமாக சந்திரபாபுவின் பாட்டு வானொலியில் ஒலிக்கத் தொடங்கும். குணா திரைப்படம் அதுவந்த நாளில் கவனிக்கப்படாமல் போனாலும், தமிழின் சிறந்த கிளாசிக்குகளில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. பூர்த்தியாகாத படைப்புகளுக்கு ஒரு பேறு உண்டு. அது திரும்பத் திரும்பப் பூர்த்தி செய்யப்படும். காதல் கொண்டேன் படம் வழியாக குணா பூர்த்தி அடைந்தது.

ஹேராம், திரைக்கதையில் உள்ள குழப்பத்தாலும், நிறைய படிமங்களைக் கொண்டு அப்படம் பேசியதாலும் அதிகம் பேரால் ரசிக்கப்படவில்லை. அதிகபட்சமான உழைப்புடனும் வரலாற்றுணர்வுடனும், திரைமொழியை நன்கு உள்வாங்கி எடுக்கப்பட்ட சினிமா என்று விமர்சகர்களால் இன்று பாராட்டப்படும் படம் அது. இந்தியாவில் பரவும் பெரும்பான்மை மதவாதத்தின் அபாயத்தையும், அது அடையும் பாசிசத் தன்மையையும் வலுவாகச் சொன்ன படம் அது கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஒரு மதத்தினருக்கு எதிரானது என்று குற்றம்சாட்டப்பட்டது. அப்படிக் கருதுவதற்கான சந்தர்ப்பங்களும் அப்படங்களில் உண்டு. ஆனால் விஸ்வரூபம் மற்றும் உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசைக்கோலங்கள் சமாதானத்தைப் பேசுபவை. “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்” என்று சொல்லும் குரலையும் அப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது.

கமலின் தன்னுணர்வில் உள்ள இரட்டைநிலைதான் அது. அந்தக் குழப்பம் முக்கியமானதும்கூட.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்