கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மூன்றாவது படம், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம், டைட்டில் ஏற்படுத்திய ஈர்ப்பு என்ற இந்த காரணங்களே 'இறைவி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான முந்தைய படங்களான 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரு படங்களும் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. தமிழ் சினிமாவில் புது அலைகளை ஏற்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவரான கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம் இன்னும் சில எல்லைகளைத் தொடும் என்ற நம்பிக்கையில் 'இறைவி' பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
தியேட்டர் நோட்டீஸ் போர்டில் வைக்கப்பட்டிருந்த சென்சார் சான்றிதழில் யு/ஏ குறிப்பைப் பார்த்து ரசிகர்கள் இத்தனை கட்ஸ் கொடுத்திருங்காடா என பேசியபடி உள்ளே நுழைந்தனர்.
'இறைவி' படம் எப்படி?
'இறைவி' கதை: தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தகராறால் தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அண்ணனின் அழுகையைக் கண்டு அவரது தம்பி சிம்ஹா கோபப்படுகிறார். அவரது குடும்ப நண்பர் விஜய் சேதுபதி அதற்கும் மேலே தயாரிப்பாளரிடம் கொந்தளிக்க பிரச்சினை வெடிக்கிறது. அதற்குப் பிறகு யார் யார் என்ன ஆகிறார்கள்? எஸ்.ஜே. சூர்யாவின் படம் ரிலீஸ் ஆனதா? இந்த ஆண்களின் பின்னால் இயங்கும் பெண்கள் உலகின் நிலை என்ன? என்பது மீதிக் கதை.
முதல் இரண்டு படங்களின் சாயல் துளியும் இருக்கக்கூடாது என்பதற்காக முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்ட விதத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவனம் பெறுகிறார். ஆனால், சினிமாவுக்கு மிக முக்கியமான திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறி இருக்கிறார் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
படத்தின் நாயகனாக ஆளுமை செலுத்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சொன்ன வார்த்தைகளை ரிப்பீட் அடிப்பது, இரட்டை அர்த்த வசனம் பேசுவது, ஹை டெசிபலில் கத்தி அட்ராசிட்டி பண்ணுவது என வழக்கமான இமேஜே இதில் உடைத்திருக்கிறார். ரிலீஸ் ஆகாத படத்தை எண்ணி வருந்துவது, விரக்தியில் புலம்புவது, ஏக்கப் பெருமூச்சில் விம்முவது, தயாரிப்பாளரிடம் பொங்குவது, ஒரே படத்தில் ஓவராகப் பேசும் இயக்குநருக்கு அட்வைஸ் செய்வது, கோபம்- ஆவேசம்- ஆதங்கம் என எல்லா உணர்வுகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் எஸ்.ஜே.சூர்யா ஒரு நடிகனாக இறைவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குரிய தேர்ந்த நடிப்பை ஆத்மார்த்தமாக வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளிலும், அன்பான நடவடிக்கைகளிலும் சில நெகிழ்வான இயல்பான தருணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிம்ஹா தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இன்னும் உச்சரிப்பில் தான் அவர் தடுமாறுகிறார். அதை இனி வரும் காலங்களிலாவது சரி செய்தாக வேண்டும்.
அஞ்சலியின் நடிப்பு நிறைவை அளிக்கிறது. விஜய் சேதுபதியின் கேள்விக்கு, 'எப்ப கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்' என்ற அஞ்சலியின் உறுதி அவர் பாத்திரப் படைப்புக்கு கம்பீரம் சேர்க்கிறது.
சீனுமோகன் நடிப்பு யதார்த்தப் பதிவு. ராதாரவி, கருணாகரன், கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா, ஆர்.கே.விஜய் முருகன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஆர்.கே.விஜய் முருகனின் கலை இயக்கமும், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் படத்துக்குக் கூடுதல் பலம். மழை, மதுபானக் கடைகள், இருட்டு, கோயில், வண்ணங்கள் என்று எல்லாவற்றிலும் சிவகுமார் விஜயனின் கேமரா ஆட்சி செலுத்தியிருக்கிறது.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. எடுத்த எடுப்பில் எட்டு ரவுண்டு போகப் போறேன் பாரு, துஷ்டா, 'மனிதி' மான்டேஜ் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கடற்கரைப் பாடலை கண்ணை மூடிக்கொண்டு கட் செய்திருக்கலாம்.
'எப்பவும் நாம பேசக் கூடாது. நம்ம எடுத்த படம் பேசணும்', 'ஒரு கலைஞனை சிதைச்சிடாதீங்க. அது தப்பு', 'உன் எக்ஸ் வுட்பியோட கரன்ட் ஹஸ்பெண்ட்' போன்ற கார்த்திக் சுப்புராஜின் வசனங்கள் கூர்மை.
பார்த்துப் பார்த்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ் பாத்திரப் படைப்பில் சொதப்பி இருக்கிறார். பூஜா தேவ்ரியா, சேதுபதியிடம், சித்தப்பா சீனுமோகனிடமும் அப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு சேதுபதியை ஜன்னலோரம் பார்த்து அழுவது ஏன்? அஞ்சலி ஏன் இன்னொரு நபர் மீதான காதலை கணவனிடம் சொல்ல வேண்டும்? அதற்குப் பிறகும் கணவனே வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்? சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யாவின் பாத்திரப் படைப்பிலும் இப்படி விரிசல்கள் நிறைந்துள்ளன.
கோவலன் - கண்ணகி - மாதவி கதாபாத்திரங்களை நவீனமய மறுவடிவமாக்க முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அது முழுமை அடையாமலும், ஆழமான பாத்திர வார்ப்பு இல்லாததும் நீர்த்துப் போக வைக்கிறது.
படம் ரிலீஸ் நோக்கிய பயணம் இரண்டாம் பாதியில் தடம் மாறும் போது திரைக்கதையும் தடுமாறுகிறது. டிராமாத்தனம் கூடுவதால் படம் வலுவிழக்கிறது.
பெண்களை பெருமைப்படுத்த வேண்டும், போற்ற வேண்டும் என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த ஆண் சமூகமே கெட்டவர்கள். திமிர் பிடித்தவர்கள். ஆண் என்ற கர்வத்தில் தவறை மட்டுமே அடுக்கடுக்காக செய்வார்கள் என்று காட்சிப்படுத்தி இருப்பது படத்தில் இருக்கும் வன்முறையைக் காட்டிலும் அதிக ஆபத்துடன் தெறிக்கிறது.
மொத்தமாகப் பார்த்தால் 'இறைவி' நிறைவாக செதுக்கப்படவில்லை என்பதை உணரமுடிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago