முதல் பார்வை: சி3 - காக்கியின் அறச் சீற்றம்!

By செய்திப்பிரிவு

ஒரு கொலைக்குற்றத்தை கண்டுபிடிக்கப் போய், சர்வதேச குற்றத்தின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளியைத் தண்டிக்கும் சாகச நாயகனின் கதை 'சி3'.

தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சூர்யாவை, கொலைப் பின்னணி குறித்து கண்டுபிடிக்க ஆந்திர மாநிலம் அழைப்பு விடுக்கிறது. அந்த கொலையின் பின்னணியை ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக விசாரிக்கிறார் சூர்யா. ஆனால், அதற்கான காரணங்கள் திகீர், பகீர் விஷயமாக அச்சுறுத்துகிறது. அந்த சர்வதேச குற்றம் என்ன, சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார், குற்றவாளிக்கு தரப்படும் தண்டனை என்ன என்பதை அதிவேக திரைக்கதை அழுத்தமாக சொல்கிறது.

தமிழ் சினிமாவில் பாகம் 2, பாகம் 3 படங்கள் முதல் பாகத்துடன் ஓரளவே பொருந்தக் கூடியதாகவோ அல்லது ஒரே கருப்பொருளை மட்டும் மையமாகவோ கொண்டிருக்கும். ஆனால், ஒரு பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இன்னொரு பாகத்தைத் தொடர்வது, சரியான நேர்த்தியான தொடர்ச்சியை படம் முழுக்க பரவ விடுவது என சி3 தனித்து நிற்கிறது. அந்த விதத்தில் இயக்குநர் ஹரியின் மெனக்கெடலுக்கு பாராட்டுகள்.

ஹரி படம் என்றால், அதில் காக்கிச்சட்டையை அணிந்தால் சூர்யா கம்பீரமாய் நின்று விளையாடுகிறார். கதாபாத்திரத்துக்குரிய மிடுக்கு, இறுக்கம், பார்வை, உடல் மொழி ஆகியவற்றில் சூர்யா மிகக் கச்சிதம். நடனத்திலும் சூர்யாவின் உழைப்பு பளிச்சிடுகிறது. 'நான் பார்த்ததெல்லாம் திங்குற ஓநாய் இல்ல. பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்', 'போலீஸ்காரன் ஒதுங்குறான்னா பதுங்குறான்னு அர்த்தம், பதுங்குறான்னா பாயப்போறான்னு அர்த்தம்' என சூர்யா பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கரவொலி சத்தம் எகிறுகிறது.

அனுஷ்காவுக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. குணச்சித்ர நடிப்புக்கான இடத்தைக் கூட வழங்கவில்லை. கதையோட்டத்துடன் கூடிய காட்சிகளில் ஸ்ருதிஹாசன் வந்து போகிறார்.

நாசர், ராதாரவி, விஜயகுமார், சரத்பாபு, க்ரிஷ், மனோரமா, யுவராணி, சுமித்ரா, டெல்லி குமார், தியாகு, பிரேம், அண்ணாச்சி, சாம்ஸ், ஜோ மல்லூரி, ஜெயப்பிரகாஷ், சுமன், மோகன் வி.ராமன், நளினி, சாண்ட்ரா எமி உள்ளிட்ட பெரும் படையில் நிதின் சத்யாவும், ராதிகாவும் மட்டுமே மனதில் நிற்கிறார்கள்.

முரட்டுக் கதாபாத்திரத்தில் சரத் சக்சேனாவும், தொழிலதிபர் கதாபாத்திரத்தில் தாகூர் அனுப் சிங்கும் சரியாகப் பொருந்துகிறார்கள். சூரியின் நகைச்சுவையும், காதல் காட்சிகளும் எடுபடவில்லை. சூரி பேசும் நகைச்சுவை வசனங்கள் ரசிக்கும்படி இல்லை.

ரோபோ ஷங்கர் குணச்சித்ரம் கலந்த நடிப்பில் யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார்.

பரபர சண்டைக் காட்சிகளிலும், ஆந்திரா, தெலங்கானா, ஆஸ்திரேலியா என எல்லா இடங்களிலும் நம் தோள்களில் கேமரா பயணிக்கிறதோ என்ற அளவுக்கு ப்ரியனின் ஒளிப்பதிவில் ஆற்றல் அடங்கியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'முதன்முறையாக பெண்ணே உன்னைப் பார்த்தேன்' பாடல் மட்டும் பரவாயில்லை ரகம். சி3 வேட்டை தீம் ரிப்பீட் ரகம். மற்ற பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பின்னணி இசையில் இரைச்சலைக் கூட்டினாலும், சில இடங்களில் ஹாரிஸ் தன்னை நிரூபித்திருக்கிறார்.

படத்தொகுப்பில் வேகம் புகுத்தி, ஏற்கெனவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும் திரைக்கதையை, சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக்கியிருக்கிறார்கள்.

களம், காக்கிச்சட்டை என ஒரே மாதிரி பாதையில் தான் ஹரி பயணிக்கிறார். அதில் எந்தவித புதுமை இல்லாவிட்டாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனத்தை திரைக்கதையில் புகுத்தி இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு எப்படி கண்டம் தாண்டிய அதிகாரம் கிடைக்கிறது, விமானதளத்தின் ஓடுபாதையில் அவ்வளவு சுலபமாக ஒரு கார் நுழைய முடியுமா, சர்வதேச அளவில் தொழில் செய்பவரை எளிதாக நெருங்க முடியுமா என்ற சில கேள்விகள் எழுகின்றன.

கலாச்சாரத்தைப் பற்றி கிளாஸ் எடுக்கும் இயக்குநர், அதே கண்ணியத்தை சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் காட்டியிருக்கலாம்.

'சி4'க்கு இயக்குநரும்- ஹீரோவும் தயாராகிவிட்டதையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அதிகாரியின் சாகச பிம்பத்தைப் பதிவு செய்யும் படம் என்ற நோக்கமே பிரதானமாக இருப்பதாலும், ரசிகர்களுக்கான கமர்ஷியல் மசாலாவை கலந்து கொடுத்த விதத்திலும் 'சி3' எனும் காக்கியின் அறச் சீற்றமாக சீறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

மேலும்