இதுதான் நான் 29: ஆட வெச்ச மியூஸிக்!

By பிரபுதேவா

‘வால்டர் வெற்றிவேல்’ படத் தில் வரும் ‘சின்ன ராசாவே…’ பாட்டின் ஹம்மிங் இடத்துக்கு நான் பண்ணின டான்ஸ் மூவ்மென்ட்ஸை இளையராஜா சார் ரொம்பவும் ரசித்தார், மனசுவிட்டு சிரித்தார்னு டைரக்டர் பி.வாசு சார் சொன்னார். அப்பாடான்னு இருந்தது எனக்கு.

அதே படத்தோட ஆடியோ ரிலீஸுக் குப் போனேன். நிகழ்ச்சியில நான் பின்னாடி உட்கார்ந்துக்கிட்டேன். அப்போ, டைரக்டர் வாசு சார் பேசிட்டிருந்தார். அவரோட டீம்ல இருந்த அசோஸியேட் ஒருத்தர், ‘‘பிரபு, நீங்க முன்னாடி வாங்க’’ன்னு சொன்னார். கடைசி வரிசையில இருந்த நான் ரெண்டு வரிசை முன்னாடி வந்து உட்கார்ந்தேன். திரும்பவும், ‘‘இன்னும் முன்னாடி வாங்க’’ன்னு கூப்பிட்டார். மூணாவது வரிசை, ரெண்டாவது வரிசைன்னு மாறி மாறி முதல் வரிசைக்கு வந்தேன். இதை வாசு சார் கவனிச்சிட்டு இருந்திருக்கார். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு என்கிட்டே வந்து ‘‘கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி வந்துட்டே இருக்கே பிரபு… உன்னோட முன்னேற்றம் நல்லாத் தெரியுது!’’ன்னு சொன்னார். இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கிற அளவு மனசுல அது பதிந்திடுச்சு.

என் நண்பர் ஒருத்தர் கேமராமேனா இருக்கார். நான் மாஸ்டரா வேலை பார்க்குற ஷூட்டிங் பக்கம் சில சமயம் வருவார். அங்கே அவரை பார்த்ததும், ‘‘எப்படி இருக்கீங்க?’’ன்னு கேட்பேன். அப்படி கேட்டு அடுத்த செகண்ட் ‘‘ஒரு நிமிஷம் இந்த ஷாட்டை முடிச்சுட்டு வந்துடு றேன்’’ன்னு சொல்லிட்டு ஸ்பாட்டுக்குப் போய்டுவேன். அடுத்து அரை மணி நேரத்துக்குப் பிறகு மறுபடியும் வருவேன். அப்போதும் அவர் அங்கேதான் உட் கார்ந்திருப்பார். அவரை பார்த்ததும், ‘‘எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?’’ன்னு திரும்பவும் கேட்பேன். அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு, ‘‘இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே பார்த்தோம்’’னு சொல்வார்.

‘‘ஆமாமாம் இல்ல’’ன்னு சொல்லிட்டுத் திரும்பவும் ஷாட்டுக்குப் போய்டுவேன். ஒரே நாள்ல இப்படி மூணு, நாலு தடவை நடந்துடும். அப்புறம் ஒரு சந்தர்பத்துல ஆறு மாசத்துக்குப் பிறகு மீண்டும் எங்காவது சந்திப்போம். ‘‘என்னங்க. அன்னைக்கு வந்துட்டு அப்புறம் காணாமப் போய்ட் டீங்க?’’ன்னு கேட்பேன். ‘‘நீங்க பாட்டு ஷூட்டிங்ல இருந்தீங்கன்னா அந்தப் பக்கம் இனிமே தலையே காட்ட மாட்டேன்!’’ன்னு சிரிச்சுட்டே சொல்வார். மியூஸிக்கும், டான்ஸ் மேலயும் இருக்குற ஈர்ப்பால சில சமயம் இப்படி நடந்துடும். எந்த வேலை செஞ்சாலும் அதை முழுமையான கான்சன்ட்ரேஷனோட செஞ்சா அது தியானம் ஆயிடும்ல!

என்னோட பாட்டு மூவ்மென்ட்ல எந்த இலக்கணமும் இருக்காது. என் இஷ்டத்துக்குப் பண்ணுவேன். அப்படி புதுசா ஏதாவது பண்றப்ப மற்றவர்களுக்கு முட்டாள்தனமாத்தான் தெரியும். ‘‘என்ன இவன்!’’ன்னு திட்டு றதை நான் கேட்டிருக்கேன். புகழ்வதை முழுசா ஏத்துக்கிற மாதிரி, திட்டுறதையும் ஏத்துக்கத்தான் வேணும். அப்போதான் அடுத்தடுத்து நம்மால ஓட முடியும்.

போன வாரம் ராஜுவையும், என்னையும் பத்தி எழுதினதை படிச்சுட்டு, ஒரு பெரிய ஹீரோயின் போன்ல பேசினாங்க. ’‘ராஜுவோட டான்ஸ் ஸ்டைல் கேஷுவலா, ஸ்டைலா நல்லா இருக்கும். உங்களோட ஸ்டைல்தான் கை, கால் உடைச்சு, ஆளை பிழிஞ்சு, பெண்ட் நிமிந்துடும்!’’னு சொன்னாங்க. ‘‘என்னங்க.. இப்படி சொல்றீங்க?’’ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, ‘‘உண்மைதானே!’’ன்னு சொன்னாங்க.நான் சிரிச்சுட்டேன்.

அந்த டைம்ல ‘சூரியன்’ படத்துல வர்ற ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டுக்கு ஆடுறேன். பாட்டை முதல்ல கேட்கும்போதே பிடிச்சுது. நிறைய பட்டிமன்றத்துலகூட, ‘‘லாலாக்கு டோல் டப்பிமான்னா என்ன?’’ன்னு வாதம் வந்திருக்கு. சாதாரணமா, நடன இயக்கு நர்கள் பாடல்கள்ல தவறு கண்டுபிடிக்க மாட்டோம். பாட்டுக்கு எப்படி நல்லா டான்ஸ் அமைக்கிறதுலதான் மனசு ஓடிட்டிருக்கும்.

ரெண்டு, ரெண்டரை நாட்கள்ல ஷூட் பண்ணி முடிச்ச பாட்டு அது. அப்போதான் சரத்குமார் சார் ஹீரோவா நடிச்சுட்டு வர்றார். பவித்ரன் சார்தான் டைரக்டர். அவருக்கு என் மேல பெரிய நம்பிக்கை உண்டு. கேமராமேன் அசோக்குமார் சார். பாட்டுல ஒரு இடத்துல அவுட் ஆஃப் பிரேம்ல இருந்து ஜம்ப் அடிச்சு நடுவுல அவங்க கொடுத்த ‘மார்க்’ல வந்து நின்னு ஆடணும். ‘‘அவ்வளவு தூரத்துல இருந்து வந்து ஜம்ப் பண்ணி நின்னு, உடனே ஆட முடியுமா?’’ன்னு எல்லாருக்கும் தோணுச்சு.

எனக்கும்தான். டிரை பண்ணேன். முடிஞ்சுது. ‘‘பொசிஷன் ஓ.கேவா?’ன்னு கேட்டேன். கரெக்டா ஞாபகம் இல்லை. பக்கத்துல இருந்த யாரோ, ‘‘நல்ல பொசிஷன்லதான் இருக்கீங்க!’’ன்னு சொன்னாங்க. அந்த இடத்துல பவித்ரன் சார் டான்ஸ், அவங்க சொன்ன கமென்ட்ஸ் ரெண்டையும் ரசிச்சார். அந்தப் பாட்டுலதான் நான் வேகமா ஆடி டக்குன்னு உட்கார்ற ஸ்டைலை ஜனங்க ரொம்ப ரசிச்சாங்க.

‘சூரியன்’ படத்துல ஷங்கர் சார் அசோ ஸியேட் டைரக்டர். அப்போ இருந்துதான் அவர் எனக்குப் பழக்கம். அடுத்த வரு ஷமே அவர் ‘ஜென்டில்மேன்’ படத்துக்கு டைரக்டர் ஆனார். ‘சிக்கு புக்கு ரயிலு’ பாட்டுக்கு ஆடுற வாய்ப்பு அமைந்தது. மியூஸிக் ஏ.ஆர்.ரஹ்மான். பாட்டை கேட் டேன். வாய்ஸ் புதுசா இருந்துச்சு. மியூஸிக் புதுசா இருந்துச்சு.

சவுண்ட் டோனும் புதுசா இருந்துச்சு. அதுக்கு முன்னாடி ‘ரோஜா’ படப் பாட்டையும் கேட்டிருக்கேன். அப்பாதான் அதுக்கு மாஸ்டர். ‘‘சிக்கு புக்கு’ பாட்டோட ஷூட் டிங் ரெண்டு, மூணு தடவை தள்ளிப் போச்சு. இனிமேல் அந்தப் பாட்டு நமக்கு அமையாதுன்னு என்னோட மற்ற பாட்டு வேலைகள்ல இறங்கிட்டேன். ஆனா, என்னவோ தெரியலை; அந்தப் பாட்டுக்கு நானே ஆடுற சூழல் உரு வாச்சு. அதுக்கு நான் ஷங்கர் சாருக்குத் தான் தேங்ஸ் சொல்லணும்.

பாட்டோட ரிகர்சல்ல எப்படி பண்ற துன்னு யோசிக்கும்போது, அந்த வாய்ஸ் மாதிரியும், அந்த மியூஸிக் மாதிரியும் நம்ம உடம்பு வளைஞ்சு நெளியணும்னு தோணுச்சு. அந்த ஆட்டம் நான் யோசிச்சு ஆடுனது இல்ல. அந்த மியூஸிக் தான் ஆட வெச்சுது. என்கூட இருந்த டான் சர்ஸுங்க, ‘‘என்ன இது புதுசா ஒரு டைப்பா இருக்கே!’’ன்னு ஃபீல் பண்ணாங்க. ஆனா, என்னால அதை ஜட்ஜ் பண்ண முடியலை.

பாட்டோட ஓபனிங்ல ஒரு சின்ன பையன் பாடியிருப்பார். அது இப்ப மியூஸிக் டைரக்டரும், ஹீரோவாவும் இருக்கிற நம்ம ஜி.வி.பிரகாஷ் வாய்ஸ்தான். இவ்வளவு வருஷத்துக்கு பிறகு, இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ‘தேவி’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ்கிட்ட முதல் தடவையாப் பேசினேன். அப்போ ‘ஜென்டில்மேன்’ கதையைப் பத்தியெல்லாம் பேசிட்டிருந்தோம்.

‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்குப் பிறகு திரும்பவும் அதே எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ பாட்டு ஷூட்டிங். முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சுது. வீட்டுக்கு வந்து படுத்தேன். அடுத்த நாள் என்னால எழுந்திருக்கவே முடியலை. ஏன்... என்ன ஆச்சு?

- இன்னும் சொல்வேன்….

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்