ஒரு படம் பார்ப்பது போல் அல்லாமல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று வந்தது போல இருக்கிறது இந்த 'மதயானைக்கூட்டம்'.
செல்வாக்கு உடையவராக வாழ்ந்து வந்த ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு அவர் செய்த துரோகத்தால் பிரிந்து தன் அண்ணன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முதல் மனைவியும், அவரது அண்ணனும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினை ஒதுக்கி வைக்கிறார்கள். ஜெயக்கொடி தேவர் மாரடைப்பால் இறந்தவுடன் நடைபெறும் பிரச்சினையில் கொலை நிகழுகிறது. அப்பழி நாயகன் மீது விழ, பழிதீர்த்தே ஆக வேண்டும் என்று தாய் மாமன் கிளம்புகிறார். இறுதி இந்தக் கூட்டம் என்னவானது என்பது இந்த 'மதயானைக்கூட்டம்'.
ஜெயக்கொடி தேவர் இறுதிச் சடங்கில் ஆரம்பிக்கிறது படம். அப்போது நடைபெறும் கூத்துக் கலைஞர்களின் பாடல் மூலம் ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரனை பாராட்டலாம். தேவர் சமூகத்தின் சாவு வீடு எப்படி இருக்கும், அவர்களது சம்பிரதாயங்கள் என்ன என்பதினை நம் கண்முன் அப்படியே காட்டியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் அனைத்திற்கும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களைக் கையாண்டிருக்கும் யுக்திக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்.
ஓவியா மீது காதல் கொள்வது, தாய் மாமன் வெட்ட துரத்தும் போது ஓடுவது என நாயகன் கதிர் கவனம் ஈர்க்கிறார். வில்லனாக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி படத்திற்கு மிகப்பெரிய பலம். கையை மடித்துக் கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டே அவர் நடித்திருப்பது, ஒரு புதிய நடிகர் என்பதற்கான உணர்வை தரவில்லை. தங்கையின் பாசத்திற்காக தன்மானத்தை விட்டுக் கொடுப்பது, மனக் கசப்பில் இருந்தாலும் மச்சானின் மீது மரியாதை வைத்திருப்பது, ஏலத்தில் மச்சானை கிண்டலாக பேசியவனை கொலை செய்வது, தன் மகனைக் கொன்றவனைக் கொன்றே தீர வேண்டும் என காத்திருப்பது என நடிப்பில் மிரட்டியிருக்கிறார் வேல.ராமமூர்த்தி.வீரத் தேவர் என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
விஜி, அம்மு, ஸ்ரீஜித் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த பழிவாங்கல் கதைக்கு நாயகி வேண்டுமே என்று ஓவியாவை சேர்ந்து, 2 பாடலையும் வைத்திருக்கிறார்கள்.
ராகுல் தருமன் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதற்கு மிகாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘கோணக் கொண்டக்காரி’, ‘உன்னை வணங்காத’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. பின்னணி இசை நம்மை காட்சியோடு ஒன்ற வைத்திருப்பது மிகப்பெரிய பலம்.
இந்த மதயானைக் கூட்டத்தில் யார் யாரை கொல்லப் போகிறார்கள் என்று க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை உட்கார வைத்த விதத்தில் பாராட்டைப் பெறுகிறது படக்குழு.
படத்தின் மைனஸ் என்றால் வேகமாக பயணிக்கும் இரண்டாம் பாதியில் கேரளா காட்சிகள் வேகத் தடையாக இருக்கிறது.
தமிழ் திரையுலகில் பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற கூட்டமான படங்கள் வந்திருந்தாலும், அக்கூட்டத்தில் இருந்து தனித்து நின்று கவனம் ஈர்க்கிறது ’மதயானைக்கூட்டம்’.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago