ரசிகர் மன்றங்களை இயக்கமாக மாற்றிய விஷாலின் திருமண சபதம்!

நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடிந்தவுடன்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

நடிகர் விஷால் இன்று வானகரத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ரசிகர் மன்ற வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை இனி நற்பணி மன்றமாக மாற்றுவதாக அறிவித்தார்.

ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்தது இனிமேல் "அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்" என்று மாற்றியிருக்கிறார்கள்.

தனது ரசிகர்களை சந்திக்கும் முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் விஷால். அப்போது நற்பணி மன்றம், ரசிகர்கள் என விஷால் பேசியதில் இருந்து:

"தமிழகம் முழுவதிலும் உள்ள என் ரசிகர்கள் என் பெயரில் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். என் வளர்ச்சிக்கும் உதவும் ரசிகர்களுடன் இனி நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ரசிகர்களை திரட்டியிருக்கிறேன். அரசியலுக்கு வரும் திட்டமில்லை. இயக்கத்தின் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நன்றாக படிக்க கூடிய வசதியில்லாத மாணவிகளுக்கு உதவ முடிவு செய்திருக்கிறேன். இதன் மூலம் அவர்களின் கனவு நிறைவேறும்.

எனது நற்பணி மன்றத்துக்கு தனிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வசதிகள் இல்லாத கிராமப்புற பள்ளிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தரப்போகிறோம். உடனே நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று பேசினால் தப்பு. ரசிகர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் இணையதளம் ஒன்றும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கப் பிரச்சினை

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு நான் எதிரானவன் கிடையாது. அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் நடிகர் சங்கத்துக்கு என்று தனியாக கட்டிடம் வேண்டும். கட்டிடம் வரும் வரை நான் கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருப்பேன். நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடிந்தவுடன் தான் திருமணம் செய்து கொள்வேன்.

நடிகர் சங்க கட்டிடத்தை நான் எனக்காக கேட்கவில்லை. நடிகர் சங்கத்தை நம்பியிருக்கும் 2500 குடும்பத்துக்காக கேட்கிறேன். மறைந்த திரையுலக ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் இரவும் பகலும் உழைத்து உருவாக்கிய நடிகர் சங்கம் கட்டிடம் இன்று மயானம் மாதிரி காட்சியளிக்கிறது.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் மே மாதம் இறுதி அல்லது ஜூனில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும்.எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன்.

என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள் " என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE