இதுதான் நான் 28: யார் பெஸ்ட்... எது பெஸ்ட்?

By பிரபுதேவா

நான், ராஜு… எங்க ரெண்டு பேர்ல யார் ‘பெஸ்ட் மாஸ்டர்’ங்கிற வாக்குவாதம் அந்த ரெண்டு நண்பர்கள்கிட்ட நடந்துச்சு. இந்த விஷயத்தை என்னோட நண்பர் என்கிட்ட வந்து சொன்னார். கேட்டுக்கிட்டேன். அப்புறம் நான் மெதுவா சிரிச்சுட்டு ‘‘ஏங்க… உங்களுக்கு உங்க நண்பர் பெஸ்ட்டுங்க. அவருக்கு அவர் நண்பர் பெஸ்ட்டுங்க’’ன்னு சொன்னேன். அதுக்கு என்னோட நண்பர் ‘‘வாதம்னு வர்றப்போ அந்த இடத்துல உங்களை எப்படி என்னால விட்டுத் தர முடியும்! அதான் அப்படிச் சொன்னேன். ஆனா, நிஜமாவே ராஜுவோட ஸ்டைலிஸ் லெவல் வேறதான். அவரை எனக்கும் ரொம்பவே பிடிக்கும்’’னு சொன்னார். அந்த அளவுல ராஜுவோட டான்ஸ் ஸ்டைல் இருக்கும்.

என்னை கேட்டா, ஒரு மாஸ்டர் பணத்துக்குப் பின்னாடி போகாம, பாட்டுக்குப் பின்னாடி போய் உழைப்பை கொடுக்குறதுதான் உண்மையான பெஸ்ட்னு நினைக்கிறேன். சின்ன வயசுல எல்லாம் முதல்ல நல்லா டான்ஸ் பண்ணணும், அப்புறம் பேரு வாங்கணும், அதுக்கு அப்புறம்தான் பணம் சம்பாதிக்கணும்னு இருந்தேன். அதுவே, ஒரு காலகட்டத்துல தலைகீழா மாறி முதல்ல பணம் வரணும், அப்புறம்தான் உழைப்பு, புகழ்னு இருந்தேன். பொதுவா வயசும், அனுபவமும் கூடக் கூட ரொம்பவும் தெளிவா முடிவு எடுப்போம்னு சொல்வாங்க. ஆனா, வாழ்க்கையில அப் அண்ட் டவுன் எல் லாம் பார்த்துட்டு வர்ற ஒருகட்டத்துல எல்லாத்துக்கும் முதல்ல பணம்தான்னு மனசு சொல்லுச்சு. எதுவுமே தெரி யாத பதினாலு, பதினைஞ்சு வயசுல சரியாத்தானே இருந்தோம். நல்லது, கெட்டது தெரிஞ்ச இப்போ சரியா இல்லையேன்னு தோணுச்சு.

அப்போ பணம்தான் வாழ்க்கையா? படிக்கிற காலகட்டத்துல நம்மல சுத்தி இருக்கிற எல்லோருமே, ‘‘டேய்… நல்லா படிச்சு வேலைக்குப் போய் நிறைய பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்’’ன்னு சொல்வாங்க. அந்த மாதிரிதான் எனக்கும் அது மனசுல இருந்ததால அந்த ரூட்ல போனேன். ஆனா, இந்த ரூட்டும் மாறிடுச்சு. இன் னைக்கு எல்லாம் முதல்ல உழைப்பு. அப்புறம் பேரு, புகழ். அப்புறமாத்தான் பணம். அப்பாடா! கடவுள் புண்ணியத்துல இப்போ நான் மறுபடியும் பதினாலு வயசா மாறிட்டேன்.

அதே மாதிரி, லைஃப்ல யார் ஒருத்தங்க கடைசி வரைக்கும் அப்பா, அம்மா பேச்சை கேட்டு மரியாதை செலுத்தி வாழ்க்கை முழுக்க அவங்க கூடவே வாழ்கிறோமோ, அவங்கதான் பெஸ்ட். பொதுவா, எனக்குத் தெரிஞ்சு பெருசா சாதிக்கிறதைவிட நல்ல ஆளா இருக்குறதுதான் பெரிய சாதனைன்னு நினைக்கிறேன்.

சில தடவை நான் 100 சதவீதம் சரின்னு நினைச்சு பண்ணின பாட்டுங்க மத்தவங்களுக்கு பிடிக்காமலும் போயி ருக்கு. அப்படித்தான் மாஸ்டராகி உள்ளே வந்த புதுசுல ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்ணி முடிச்சிருந்தேன். அந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னைக் கூப்பிட்டார். பாராட்டத்தான் கூப்பிடு றார்னு, நான் ஜாலியா போனேன். அன்னைக்கு அவர் பக்கத்துல ஒரு டெக்னீஷியன் உட்கார்ந்திருந்தார். அவர் எனக்கு நல்லா தெரிஞ்சவரும்கூட. தயாரிப்பாளர்கிட்ட போனதும், ‘‘பாட் டுக்கு டான்ஸ் நல்லா இல்லை’’ன்னு சொன்னார். எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு கூட தெரியலை. அது வும் இல்லாம, பெரிய ஹீரோவோட பாட்டு அது. திரும்பவும், ‘‘அந்த ரீலை உங்ககிட்டயே கொடுத்துடுறேன். வீட்டு லயே வெச்சி, நீங்களே பார்த்துக் கோங்க’’ன்னும் சொன்னார். அவர் பக்கத்துல இருந்த எனக்கும் தெரிஞ்ச அந்த டெக்னீஷியன், ‘‘ஆமாமாம்… சரியா இல்லைல்ல… கொடுத்துடுங்க’’ன்னு சொல்லிச் சிரிச்சார். அவங்க பெரிய வங்க. நான் சின்னப் பையன். எது வும் பேசாம திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

படம் ரிலீஸாச்சு. அந்தப் பாட்டும் இருந்தது. அவங்களுக்கு பிடிக்காத அந்தப் பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. புத்தம் புது ஸ்டைலா இருக்குன்னு எனக்கு ரொம்ப நல்ல பேரு வந்துச்சு. ‘பார்த்தீங்களா?’ன்னு அதன்பிறகு அவங்கக்கிட்ட நான் எதுவுமே சொல்லிக்கலை. என் வேலையை நான் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இதுவரைக்கும் நான் யார்க்கிட்டேயும் அதை சொன்னதில்லை. இது நடந்து இருபத்தினாலு, இருபத்தைஞ்சு வருஷங்க இருக்கும்.

இப்ப இதை நான் ஏன் சொல்றேன்னா, புதுசா வர்றவங்களுக்கு அடி விழும். திருப்பி அடிக்காம நல்லா வேலையைப் பாருங்க. நல்லதுதான் நடக்கும். அதுதான் சொல்லணும்னு தோணுச்சு. சமீபத்துல கூட அந்தப் பாட்டை ரீமிக்ஸ் செஞ்சு வெளியிட்டாங்க. அவ்வளவு ஹிட். ஆனா, அது எந்தப் படம்? என்ன பாட்டுன்னு சொல்ல மாட்டேன்.

அதே மாதிரி இன்னொரு தடவை வேறொரு தயாரிப்பாளர், ‘‘பிரபு, இந்தப் பாட்டை நீங்க சரியா பண்ணலையே?’’ன்னு சொன்னார். அடுத்து ஒவ்வொரு தடவையும் என் னோட பெஸ்ட் உழைப்பை கொடுத்து அவர்கிட்டதான் என்னோட சம்பளத்தை உயர்த்தினேன்.

கிட்டத்தட்ட நாலு, அஞ்சு முறை அவர்கிட்டயே அப்படி சம்பளத்தை கூட்டியிருப்பேன். அவரும் கொடுக் கத்தான் செய்தார். யார் ‘பெஸ்ட்’, எது ‘பெஸ்ட்’ங்கிற விஷயத்தை நாம நம்மோட வேலையில மட்டும்தான் காட்டியாகணும்.

அந்த மாதிரி வேலை பார்த்துக் கிட்டிருந்த நேரத்துலதான் ‘இதயம்’ படத்தோட டைரக்டர் கதிர் சார், ‘‘உங்க பையன் பிரபுவை இந்தப் பாட்டுக்கு ஆட வையுங்களேன்?’’ன்னு அப்பாகிட்ட கேட்டார். அதுதான் ‘ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல’ங்கிற பாட்டு. அதுல நூத்துல 80 சதவீதம் டைரக்டர் ‘டச்’தான். அந்த பாட்டுல ரெண்டு, மூணு ஸ்டெப்ஸ் ஆடியிருப்பேன். ‘‘என்ன, இந்த பாட்டுல நமக்கு வேலையே இல்லையே? ஏன் டைரக்டர் நம்மளை கூப்பிட்டார்’’னு தோணுச்சு. ஆனா, பாட்டு ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. ஒரு பாட்டு ஹிட் ஆகணும்னா, அதுல முழுக்க டான்ஸ் இருக்கணும்னு அவசியமே இல்லை. அதுக்கு உதாரணமான பாட்டு இது. இளையராஜா சாரோட மியூசிக், கதிர் சாரோட ஐடியாதான் பாட்டை எங்கேயோ தூக்கிட்டு போயிடுச்சு.

அப்புறம் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ‘வால்டர் வெற்றிவேல்’ படத்துல வர்ற ‘சின்ன ராசாவே’ பாட்டோட ஷூட்டிங். படத்துக்கு பி.வாசு சார் டைரக்டர். உட்லன்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் எதிர்ல இருக்குற பொட்டானிக்கல் கார்டன்லதான் அந்தப் பாட்டை எடுக்க ஆரம்பிச்சோம். பாட்டு வரிகளுக்கு இடையில் லேடீஸ் எல் லாரும் கோரஸ்ஸா ‘ஆ….ஆ…ஆ’ன்னு பாடிக்கிட்டே போகிற மாதிரி ஒரு இடம் வரும்.

அந்த இடத்துல விஷுவலா என்ன பண்றதுன்னு யோசிச்சேன். அப்புறமா, கேர்ள்ஸுங்க எல்லாம் கோரஸா பாடுறப்போ நான் என்னோட தலையில கைய வெச்சு ‘என்னடா இவங்க?’ன்னு ஃபீல் பண்ற மாதிரி பாட்டை ஷூட் பண்ணிட்டோம். அப்போதான், ‘இது இளையராஜா சார் பாட்டாச்சே. அவர் கம்போஸ் பண்ணின அந்த ஹம்மிங் இடத்துலப் போய் இப்படி பண்ணிட்டோமே? அவர் பார்த்துட்டு என்ன சொல்லப்போறாரோ?’ன்னு இருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வாசு சாரை பார்த்தேன்ன். அவர், ‘‘இளையராஜா சார் அந்தப் பாட்டை பார்த்தாரு பிரபு! அந்த கேர்ள்ஸ் கோரஸா பாடுறப்போ நீ தலையில கை வைச்சதை பார்த்து, அவர் ரியாக்ட் பண்ணினாருப்பா’’ன்னு சொன்னார். அது என்ன ரியாக்‌ஷன்னு அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்