நான் தவறவிட்ட உதவி இயக்குநர் வாய்ப்பு: மணிரத்னம் நெகிழ்ச்சிப் பகிர்வு

By பால்நிலவன்

தான் தவறவிட்ட உதவி இயக்குநர் வாய்ப்பு பற்றியும், அதன் பின்னணியையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் இயக்குநர் மணிரத்னம்.

வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.

இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.

தமிழ் சினிமாவில் வீணை எஸ்.பாலச்சந்தர் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதன் தாக்கம் இந்தக் கூட்டத்திலும் வெளிப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் வியக்கும் பெரிய கலைஞனாக, ஒரு சினிமா இயக்குநராக எஸ்.பி. சிறந்து விளங்கியதை அறியமுடிந்தது.

இக்கூட்டத்தில் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது:

"எஸ்.பி. சாரை எனக்கு ஒரு ஃபிலிம் மேக்கராக தெரிவதற்கு முன் ஒரு கிளாஸ்மேட்டின் அப்பாவாகத்தான் முதலில் தெரியும். அவருடைய படம் பாக்கறதுக்கு முன் அவர் ஒரு வீணை மாஸ்டராகதான் எனக்குத் தெரியும். ஒரு ஜீனியஸாகத்தான் தெரியும். பியுசி படிச்சிட்டிருந்தோம்னு நெனைக்கறேன்... என் கிளாஸ்மேட் வீட்டுக்கு போனபோதுதான் அவரை முதலில் பார்த்தேன்.

ஹாலுக்குள்ள போனா முழுவதும் போட்டோகிராப்ஸ். அவர் செஞ்ச எல்லா ரிக்கார்டும் இன்ஆக்லெட்டா ஃப்ரேம் பண்ணி சுவர் முழுவதும் ஒரு பெரிய பெயிண்டிங் ராஜம் பண்ணதுன்னு நெனைக்கறேன். வெளிலகூட அதே பெயிண்டிங்தான் வெச்சிருக்கோம். கீழ அவர் உட்கார்ந்துகிட்டிருப்பார் ஒரு ஜாயிண்ட் மாதிரி. அப்புறம் அவர் தலைக்கு மேல ஒரு ஃபோட்டோகிராப். அது அவருக்கு பிரெசிடெண்ட் அவர்டு கொடுக்கும் எடுத்த ஃபோட்டோகிராப். அந்த போட்டோ பாத்தீங்கன்னா யார் அவார்டு கொடுக்கறாங்க... யார் அவார்டு வாங்கிக்கறாங்கன்னு கண்டே பிடிக்கமுடியாது. அது இன்னும் கண்ணைவிட்டுப் போகலை. அதான் என்னோட ஃபஸ்ட் அறிமுகம் எஸ்.பி. சாருக்கு.

ராமனுக்கு போன் பண்ணுவேன் சில சமயம். சாயங்காலம், நைட் என்ன ப்ளான் எங்காவது வெளில போகலாமா? சினிமாவுக்கு போலாமான்னு கேட்க. ஃபோன் இவர்தான் எடுப்பார். பாலச்சந்தர் ஹியர் அப்படிம்பாரு. அவர் டோனே வந்து நாம ஏதோ தப்பு பண்ண மாதிரிதான் இருக்கும். ஃபோன் பண்ணது தப்பான்னு தோணும். மே ஐ ஸ்பீக் டூ ராமன் சார்? தயக்கப்பட்டு கேட்டோம்னு வச்சுக்குங்க.. அவன் இல்ல அப்படின்னு டப்னு போனை வச்சிடுவாரு. அவன் எப்ப வருவான்.. திரும்பி வந்தா போன் பண்ணமுடியுமா? எதுவும் நம்பலாள சொல்ல முடியாது. நானும் ராமனும் சேர்ந்து ஜாயிண்ட் ஸ்டடி பண்ணுவோம். ஜாயிண்ட் ஸ்டடின்னா என்ன நைட் சினிமாவுக்கு போறதுக்கு ஒரு வழி. சைக்கிள் எடுத்துக்கிட்டு வெள்ளிக்கிழமைதோறும் சினிமாவுக்கு கிளம்பிடுவோம்.

நான் சினிமாவுக்குள்ள வந்துட்டேன். அவர் வர்றலை அதான் வித்தியாசம். நானும் ராமனும் நைட் ஷோவுக்கு சினிமாவுக்கு போவோம். மொதல்ல எங்க கண்ல படமாட்டாரு. அப்புறம்பாத்தா பிளாக் ஹெரால்டு கார்ல அவரும் சாந்தா அம்மாவும் உக்காந்துகிட்டிருப்பாங்க. அதே தியேட்டருக்கு அவங்களும் வருவாங்க. எஸ்.பி.சாரைப் பாத்துட்டு நாங்க பைக்கை திருப்பிகிட்டு ஓடிடுவோம்.

இதைத்தாண்டி காலைல சில சமயம் அப்போ பீச்சிக்கு ஜாகிங் போவோம். அங்கே எஸ்.பி.சாரும் இருப்பாரு. ஷாட்ஸ் போட்டுகிட்டு ஜியாண்டுமாதிரி நடந்துபோய்கிட்டிருப்பாரு. அங்கே பிச்சை கேட்கவர்றவங்க.. ஜாகிங் போறவங்க நேர் எதிர்ல வந்துகேட்பாங்க. நடந்துவர்றவங்க கூடவே வருவாங்க. இதனால நாங்கள்லாம் அவங்களை சுத்திகிட்டு நடந்து போவோம். இவர் மட்டும் ஒரு வழி கண்டுபிடிச்சாரு. ரெண்டு கையும் விரிச்சி வா வந்து கட்டிப்பிடிச்சிக்கோ என்பார். அந்த லேடி இவரைப் பாத்துட்டு ஓட ஆரம்பிச்சது. ஸோ அவரைப் பாத்து நானும் எஸ்.பி.சார் சன்னும் இல்லை. பீச்சில ஒரு லேடியும்!

நான் சினிமாவுக்கு வர்றத்துக்கு மெயின் காரணமா இருந்தவரு எஸ்.பி. நாங்க படிச்சிட்டிருக்கும்போது... அவருக்கு தெரிஞ்சிடிச்சி. இவங்க ரெண்டு பேரும் நைட் சினிமா பாக்கறாங்க. சினிமாமேல ஏதோ இன்ட்ரஸ்ட் இருக்கு. அவ்வளவுதான் தெரியும். ஒரு நாள் ராமனுக்கு ஞாபகம் இருக்கா தெரியலை. ஒருநாள் குரோசாவோட ஃபெஸ்டிவல் நடந்துகிட்டிருக்கு, தூரத்துல எங்கேயோ தியேட்டர்ல. அவர் அன்னிக்குப் போகலை. ரெண்டு டிக்கெட் இருந்தது. ரெண்டு படம். எங்ககிட்ட கொடுத்து.. போய் பாத்துட்டு வாங்க அப்படின்னாரு. அதுக்கு காலேஜ் மட்டம் அடிச்சிட்டுப்போனோம் வேற. அவரே பர்மிஷன் கொடுத்துட்டாரு.

அப்பொழுது சொன்னார். நான் இதைப் பாத்துட்டு இன்ஸ்பையராகி அந்த நாள் பண்ணேன். லெட் ஸீ வாட் ஹேப்பன்ஸ் டூ யூ.. அப்படின்னு சொல்லி எங்களை அனுப்பினாரு. அங்கே போனா ரெட் பியர்டுன்னு ஒரு படம்.. ரோஷமான்னு ஒரு படம். இதுதான் எனக்கு முதல் முறை ஒரு இண்டர்நேஷ்னல் படம் பாக்கற வாய்ப்பு. அதுவும் இன்னிவரைக்கும் என்னை பாதிக்கற ஒரு படம் ரோஷமான். இதுவரைக்கும் மோகமா இருந்த படம் பிறகு காதலா மாறிடுச்சி.

அவரோட டெக்னிக்ஸ் பத்தி, அவரோட ஜீனியஸ் பத்தி... ஆஸ் எ பிலிம் மேக்கர் அவர் ஒர்க் பண்ணது... மகேந்திரன் சார் எல்லாம் சொன்னது எல்லாம் இருக்கு. பட் நான் இன்னும் ஒண்ணே ஒண்ணு சொல்ல விருப்பப்படறேன்.

அவர் பண்ணாத ஒரு படம் இருந்தது. அவர் பண்ணணும்னு நெனைச்சி.. அதப்பத்தி பேசி.. அது நடக்காம போனது. நாங்க செகண்ட் படிக்கறோம். அப்போ ராமன் வந்து சொன்னாரு.. அப்பா ஒரு படம் பண்ணப்போறாருனு. ரொம்ப நாளா எஸ்.பி.கிரியேஷன் படம் பண்ணலை. இப்போ மீண்டும் ஒரு படம் பண்ணணும்னு ஒரு தாட். அதுமட்டுமில்ல, அவர் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணிருக்காரு. கமலஹாசனை வச்சி எடுக்கப்போறாருன்னு சொன்னாங்க. கமல் அப்போதான் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன்னு அந்த மாதிரி படங்கள் ஆரம்பித்த நேரம். எக்ஸைட்டேடு சச் ய பிராமிஸிங் ஹீரோ.. பெண்டாஸ்டிக் ஆக்டர். அவரோட எஸ்.பி. பண்ணப்போறாரு. நாங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டோம். நாமதான் அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்னு ரொம்ப ஆர்வமா இருந்தோம்.

அந்தப் படத்துல அவர் என்ன எடுக்கணும்னு நெனைச்சார்னா... ஒரு யங் மேன் பீச்சில நைட்ல தனியா உட்கார்ந்துகிட்டிருக்காரு கடலைப் பாத்துகிட்டு. ஒரு பேப்பரோடு பீஸ் ஒன்னு கிடைக்குது. அதை எடுத்துப் பாக்கறான். லைட் ஹவுஸ்மேல இருந்து ஒரு ஆள் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் அப்படின்னு இருக்கு அதுல. அதுமாதிரி இந்தப் பக்கம் திருப்பறாரு. இன்னொரு நியூஸ்... ஒரு கொலை நடந்துருக்குன்னு.. அப்புறம் இன்னொன்னு இங்கே திருட்டுப் போயிருக்குன்னு... இது மாதிரி வேரியஸ் இன்ஸிடெண்ட்ஸ். ஆனா தேதியப் பாத்தா தப்பா இருக்கு. ரெண்டு நாளைக்கு அப்புறம் உள்ள டேட். விட்டிருர்றாரு... ரெண்டு நாள் கழிச்சிப் பாத்தா... லைட் ஹவுஸ் முன்னாடி ஏதோ கூட்டம் இருக்கு... ஏதோ ஒரு ஆள் விழுந்து செத்துட்டான். ரெண்டாவது நிகழ்ச்சியும் நடக்குது. இந்த சிந்தனை அவருக்கு 70களில் வருகிறது. 73, 74...

இன்னிக்கு கார்த்திக் சுப்புராஜ் இப்படியொரு எடுத்தார்னா நம்ப முடியும் என்னால. முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்னால ஒருத்தரால இப்படி யோசிக்க முடியுதுன்னா... அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ்.

இதையெல்லாம் தாண்டி எஸ்பியோ ஒரு எக்ஸ்ஸலரேட்டிங் அனுபவம் ஒன்னு இருக்கு. நாங்க ரெண்டுபேரும் நைட்ஷோ முடிச்சிட்டு பன்னிரண்டரை மணிக்கு சிலசமயம் அவங்க வீட்டுக்கு வருவோம். இரும்பு கேட்டில சிறு சத்தமும் இல்லாம திறக்கறது ராமனால மட்டும்தான் முடியும். சத்தமே இல்லாம திறந்து உள்ளே போவோம். இருட்டா இருக்கும். மேல சின்னதா ஒரு விளக்கு மட்டும் எரியும். அங்கேயிருந்து ஒரு வீணை சத்தம் கேட்கும். நைட் பன்னிரண்டரை மணிக்கு சரஸ்வதி படத்துக்கு முன்னாடி உக்காந்து வீணை வாசிச்சிகிட்டிருப்பாரு. நாங்க கீழே இருப்போம். அது முடியற வரைக்கும் பேச முடியாது. அது சிறப்பானதொரு தெய்வீக இசை. அத என்னால எப்பவும் மறக்க முடியாது. இவ்வளவு பெரிய மிகச்சிறந்த மனிதரோடு எப்படியிருந்தது உங்கள் வாழ்க்கை என்றுதான் மிஸஸ் பாலசந்தரைப் பார்த்து எனக்கு கேட்கத் தோன்றுகிறது."

இவ்வாறு மணிரத்னம் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்