விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி?- ரஜினி சொன்ன கதைகள்

சமூகவலைத்தளத்தில் தன்னை சாடியவர்களையும், அரசியல் பார்வை குறித்த சாடியவர்களுக்கும் 3 கதைகளைக் கூறினார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அச்சந்திப்பு இன்றோடு முடிவடைந்துவிட்டது. முதல்நாள் சந்திப்பின் போது ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை கொண்டுவந்தது. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

இறுதிநாள் சந்திப்பின் போது தன்னுடைய பேச்சில் சில உதாரணங்களையும், குட்டிக் கதைகளையும் எடுத்துரைத்தார் ரஜினி.

தன்னுடைய பேச்சில் ரஜினி, "ஒரு செடி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் குழி தோண்ட வேண்டும். அதில் மண், உரம் எல்லாம் போட்டு விதையைப் போட்டு மூடிவிடுகிறோம். மூடியவுடன் நல்ல அழுத்தி அமுக்குவோம். ஏனென்றால் அது வளர வேண்டும் என்பதற்காக மட்டும். ஆகையால் இந்த அவதூறுகள், திட்டுகள் எல்லாமே நமக்கு உரம், மண் மாதிரி. நிறைய திட்டுகள் இருந்தால் மட்டுமே நாம் இன்னும் வளர முடியும். அவர்கள் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஒருமுறை புத்தர் தனது சிஷ்யர்களுடன் பயணம் போய் கொண்டிருந்தார். அப்போது நிறையப் பேர் வழிமறித்து பயங்கரமாக திட்டுகிறார்கள். அவ்வளவு திட்டியும் புத்தர் அமைதியாக நின்று சிரித்துக் கொண்டே இருந்தார். குருவே அமைதியாக இருந்ததால், சீடர்களும் பேசவில்லை. திட்டிமுடித்துப் போன பிறகு, "என்ன குருவே. அவ்வளவு திட்டுகிறார்கள். ஆனால், நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே" என்று கேட்டார்கள். அவர்கள் திட்டிட்டு கொட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லையே. அதையும் அவர்களே கொண்டு போய்விட்டார்கள் என்றார் புத்தர்" என்று பேசினார் ரஜினி.

மேலும், அரசியலுக்கு வருவது குறித்தும் ரஜினி எதையும் பேசாமல் ஒரு கதை மட்டுமே கூறி முடித்துக் கொண்டார். அக்கதை இதுவே, "பழைய காலத்தில் ராஜாக்களிடம் படை பலமிருக்கும். லட்சகணக்கில் இல்லாமல் அவர்களால் எவ்வளவு வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு இருக்கும். போர் என வரும் போது அனைத்து ஆண்மக்களும் இணைந்து போய்விடுவார்கள். அது வரைக்கும் ஆண் மக்கள் அவர்களுடைய வேலைகளை, கடமைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள்.

வீர விளையாட்டுகளை வைத்ததே அவர்களையும் வீரர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காக தான். ஜல்லிக்கட்டு, கம்புச் சண்டை, கபடி, குஸ்தி உள்ளிட்ட விளையாட்டுகளை எல்லாம் ஆண்மக்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கியவை தான். போர் என வரும் போது, அனைவருமே மண்ணுக்காக களமிறங்கி போராடுவார்கள். அந்த மாதிரி எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளை செய்து கொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்” என்று பேசினார் ரஜினி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE