சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என்னும் இரண்டு சறுக்கல்களுக்குப் பிறகு கார்த்தி சுதாரித்துக்கொள்வார் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறார் இயக்குநர் எம். ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் அடித்த ராஜேஷ், கார்த்திக்கும் தனக்கும் சேர்த்து வைத்துக்கொண்ட வேட்டுதான் அழகுராஜா.
வருமானமே இல்லாத உள்ளூர் சானலின் எம்.டி. அழகுராஜா (கார்த்தி), கம்பெனியை வளர்ப்பதில் துணையாக கல்யாணம் (சந்தானம்). தன் சானலை நம்பர் ஒன் சானலாக ஆக்கியபின்தான் திருமணம் என்பது அழகுராஜாவின் பிடிவாதம். சானலை வளர்க்க ராஜா - கல்யாணம் கூட்டணியிடம் இருப்பதோ படு மொக்கையான திட்டங்கள். அதில் ஒன்று நகைக்கடை விளம்பரத்துக்காக கல்யாணம் பெண் அவதாரம் எடுத்து கடை முதலாளியை (கோட்டா னிவாச ராவ்) ஏமாற்றுவது. அந்தத் திட்டம் எதிர்பாராத விளைவை ஏற்படுத்த, இருவரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். கல்யாணத்தை உண்மையாகவே பெண் என்று நினைக்கும் முதலாளி அவளைச் சின்ன வீடாக்கிக்கொள்ள வெறியோடு துரத்துகிறான். இதற்கிடையில் ஒரு கல்யாண மண்டபத்தில் 'கானக்குயில்' தேவிசித்ராப்ரியாவை (காஜல் அகர்வால்) சந்திக்கும் அழகுராஜா கண்டதும் காதலில் விழுகிறான். ஆனால் கானக்குயில் கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பித்ததும் அவனுக்குக் கோபம் வந்து அவளைக் கலாய்த்து விடுகிறான். சித்ராவுக்குக் கோபம் வந்தாலும் அவன் சொல்வதில் உள்ள உண்மை அவளுக்குப் பிறகு புரிகிறது. கோபம் காதலாக மாறும் நேரத்தில் சில சிக்கல்கள் வருகின்றன. அதில் முக்கியமானது அழகுராஜாவின் அப்பா முத்துவின் எதிர்ப்பு. அவர் சிறு வயதில் சித்ராவின் தாத்தாவிடம் (நாசர்) வேலை பார்த்தவர். அப்போது நேர்ந்த ஒரு அசம்பாவிதத்தில் சித்ராவின் தாத்தா தன்னை அவமானப்படுத்தியதை அவரால் மறக்க முடியவில்லை.
அப்பாவைச் சமாளிப்பதற்கு அழகுராஜா பாடுபடுகையில் சித்ராவுக்கு மீண்டும் கலைச் சேவையில் ஆசை வந்துவிடுகிறது. இப்போது பரத நாட்டியம். இதிலும் அவள் மூக்கு உடைய, மீண்டும் காதலில் சிக்கல். அப்பாவையும் காதலியையும் அழகுராஜா எப்படி சமாளிக்கிறான், கல்யாணத்தின் கதி என்ன என்பதுதான் மீதிக் கதை.
சுவையான காட்சிகளால் படத்தை நகர்த்திச் செல்வதில் ராஜேஷுக்கு இருக்கும் திறமை இப்படத்தில் அவரை விட்டு ஓடிவிட்டது. காட்சிகளில் புத்திசாலித்தனமோ சுவாரஸ்யமோ இல்லை. பெண் வேடம் போடும் சந்தானத்தைப் பார்த்து கோட்டா உருகுவது, கார்த்தி ஒரு பெண்ணைப் பொது இடத்தில் அவமானப்படுத்துவது, நடனம் சொல்லித்தரக் கழைக்கூத்தாடியை ஏற்பாடு செய்வது, கார்த்தியின் அப்பாவுக்குச் சிறிய வயதில் ஏற்படும் அனுபவம் என்று எல்லாமே சிறுபிள்ளைத்தனமா்க இருக்கின்றன. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை லூஸு போலச் சித்தரிப்பது வழக்கந்தான். ஆனால் இதில் காஜலின் பாத்திரம் லூஸு போல அல்ல, முழு லூஸு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் குடும்பத்தினர் அதற்கு மேல். இடைவேளையின்போது கார்த்தி ஒரு வண்டியைக் கொளுத்துவது அபத்தத்தின் உச்சம்.
கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை. கலாய்ப்பது, காதலிப்பது என்று எதுவும் புதிதல்ல. காஜல் அகர்வால் பளிச்சென்ற அழகால் திரைக்கு ஒளியூட்டுகிறார். அவர் காமெடி பண்ணியிருக்கிறார் என்றார்கள். அந்தக் காமெடியைப் பார்க்க அழுகைதான் வருகிறது. சந்தானம் எவ்வளவு முயன்றும் தியேட்டரில் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. பிளாஷ்பேக்கில் பிரபுவின் சிறிய வயதுத் தோற்றத்தில் கார்த்தியே நடித்திருப்பது நல்ல ஐடியா. தமனின் இசையில் யாருக்கும் சொல்லாம, உன்ன பார்த்த நேரம் ஆகிய பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது. பால சுப்பிரமணியம், சக்தி சரவணன் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
ராஜேஷ், கார்த்தி, சந்தானத்தை நம்பி வந்தவர்களை மூன்று பேரும் சக்கையாக ஏமாற்றியிருக்கிறார்கள். விளைவு, படம் முடிவதற்குள் பார்வையாளர்கள் பலரும் எழுந்து போகிறார்கள்.
தி இந்து விமர்சனக் குழு தீர்ப்பு:
எல்லாத் தரப்பினரையும் கவரும் நகைச்சுவைப் படமாக நினைத்துச் செய்திருக்கிறார்கள். கற்பனை வளமோ பக்குவமோ இல்லாத காட்சிகளால் எந்தத் தரப்பையும் கவரத் தவறுகிறது படம்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago