கார்த்தி ஏற்கெனவே அரசியலில் உள்ளார்: ராஜு முருகன் பேச்சு

By ஸ்கிரீனன்

கார்த்தி ஏற்கெனவே அரசியலில் உள்ளார் என்று கார்த்தி மக்கள் மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் இயக்குநர் ராஜுமுருகன் தெரிவித்தார்.

மே 25-ம் தேதி கார்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் நடிகனான அறிமுகமாகியும் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கார்த்தி, ராஜசேகரபாண்டியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ராஜுமுருகன், சரவணன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் மற்றும் புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது, "மக்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்பவன் தலைவன் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்பவனே தலைவன். இந்த மேடை மிக முக்கியமான மேடையாகும். என்னை பொறுத்தவரை கார்த்தி ஏற்கெனவே அரசியலில் உள்ளார். தேர்தலில் போட்டியிடுவது மட்டும் அரசியல் இல்லை. மக்களுக்காக யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்" என்று பேசினார்.

இயக்குநர் சரவணன் பேசியதாவது, "சினிமா எப்படி வரவேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி தீர்மானித்தால் ஏன் ஒரு அரசியல் கட்சி எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்யக் கூடாது என்று ’கொம்பன்’ சர்ச்சை சமயத்தில் கார்த்தி பேசி இருந்தார். அந்த பேச்சில் அவ்வளவு ஆழம் மற்றும் தெளிவு இருந்தது.

கார்த்தியின் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பைபோல் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கார்த்தி எப்போதும் சமூகத்தை பற்றி சிந்திக்க கூடிய ஒரு நபர். அவருடைய ரசிகர்களான நீங்கள் அனைவரும் அவரைப் போல் நிறைய சமூக பணியாற்ற வேண்டும். அடுத்த முறை நான் உங்களை சந்திக்கும் போது நீங்கள் அனைவரும் சமூக பணியாற்ற வேண்டும்" என்று பேசினார் இயக்குநர் சரவணன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE