‘‘ஒரு முறை சிம்புவை சந்திக்கும்போது, ‘நண்பா நீதான் இப்போ யங் சூப்பர் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கிறியே, உன்னோட பழைய ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ பட்டம் சும்மாதானே இருக்கு. இனி நான் பயன்படுத்திக்கிறேனே’ ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் முடியாது. வேணும்னா ‘மினி லிட்டில் சூப்பர் ஸ்டார்’னு போட்டுக்கோ’ என்றார். இப்போ இரண்டு மாதத்துக்கு முன்னால ‘எனக்கு பட்டம் எதுவும் வேண்டாம். இனி எஸ்டிஆர் மட்டும்தான்’ன்னு சிம்புவே அறிவித்தார். அவசர அவசரமா ஓடிப்போய், ‘தலைவா, இப்பவாவது ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை என்கிட்ட கொடுத்துடேன்’னு நின்னேன். அவரும், ‘சரி.. எடுத்துக்கோ’னு கொடுத்துட்டார். கூடவே இப்போ அண்ணன் வெங்கட்பிரபு, ‘உனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ பட்டம் போட்டுக்கோ’’ன்னு சொன்னான். சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ‘மாங்கா’ படத்தில் இந்த மூன்று பட்டங்களோடுதான் என் அறிமுகத்தை பார்க்க போறீங்க...’’
இப்படி கலகலப்பாக பேசத் தொடங்கிய பிரேம்ஜி அமரன் எப்போதும் கிண்டலும், ஜாலியும் கலந்தே பேசுபவர். முதன்முதலாக சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ‘மாங்கா’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளில் இருந்தவரை ‘தி இந்து’ வுக்காக சந்தித்தோம்.
காமெடி, இசை, ஹீரோ என்று படிப்படியாக முன்னேறி உங்களுக்கான இடத்தை பிடிச்சிட்டீங்களே?
எல்லாமே ஜாலியாத்தான் இருக்கு. எல்லாருக்கும் எப்படி கால்ஷீட் பிரித்துக் கொடுக்க போகிறேன்னுதான் ஒரே குழப்பமா இருக்கு. நடிப்பு, இசைன்னு ஒப்புக்கொள்ளும் படத்தில் ‘முதலில் பாட்டை கொடுத்துடுங்க’னு கேக்குறாங்க. அதை படம் வெளியாறதுக்கு பத்து நாளைக்கு முன்னகூட பார்த்துக்கலாம். முதலில் ரொமான்ஸ், சண்டை காட்சிகளை எடுத்துடுவோம்னு சொல்வேன். ஏன்னா, இது ரெண்டும் நமக்கு கொஞ்சம்கூட செட் ஆக மாட்டேங்குது. ரொமான்ஸ் சீன்னாலே பயமா இருக்கு. ‘கோவா’ படத்தில் ரொமான்ஸ் சீன்ல அப்படியே போய் நிப்பேன். ஒரு கட்டத்தில் என்னோட ஒரிஜினல் கேரக்டரையே படங்கள்ல பிரதிபலிச்சேன். அதை ரசிகர்களும் இயல்பா ரசிக்கிறாங்க. இப்போ அதில் காமெடி கலாட்டாக்களை கலந்து ‘மாங்கா’படத்தையும், அதை அடுத்து ஒரு புதிய படத்தையும் செஞ்சுட்டு வர்றேன்.
காமெடி, நடிப்பு, இசை இதில் ஏதாவது ஒன்றில் ஆழமாக கவனம் செலுத்தினால் என்ன?
‘என்ன வேலை வருதோ அதை சரியா பயன்படுத்திக்கிட்டு செய்யணும்’னு அப்பா சொல்வார். எல்லாமே கடவுள் கொடுப்பதாகத்தான் நினைக்கிறேன். நடிப்பை விட இசை எனக்கு ரொம்பவே பிடிக்கும். காலை எழுந்திரிக்கறதும், படப்பிடிப்பில் வெயில்ல நிக்கறதும் நமக்கு அலர்ஜி. இருந்தாலும் ரசிகர்களோட பாராட்டுக்காக இதை செய்யறேன்.
‘செல்பி’ எடுத்துக்கொள்வதில் தொடங்கி ஃபேஷன் ஷோ, மாலை நேர பார்ட்டி புகைப்படம் வரைக்கும் ட்விட்டரில் அசத்துறீங்க. இவ்வளவு ஓபனாக இருக்கலாமா?
நான் எப்பவுமே ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறவன். மத்தவங்க என்ன நினைப்பாங்க என்பது பற்றி கவலையில்லை. எங்கே போகிறோம், என்ன செய்யறோம் என்பது என்னோட ரசிகர்களுக்கும் தெரியட்டுமேனு பண்றேன்.
வெங்கட்பிரபு கூட, ‘‘டேய் இதெல்லாம் ஏண்டா. அதனாலதான் உனக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது’ன்னு கிண்டலடிப்பான். எனக்கு பொய் சொல்லத் தோணாது. நான் இப்படித்தான்னு எதார்த்தமாக இருக்கவே விரும்புறேன்.
கல்யாணம் எப்போ?
தெரியலையே. பல வருஷமா பொண்ணு தேடிட்டே இருக்காங்க. ‘வீட்ல பொண்ணு எப்படிடா இருக்கணும்’னு கேட்டாங்க. செல்போன்ல கிரீடம், ஜரிகை பட்டு, அணிகலன் அணிந்து இருந்த மகாலட்சுமி படத்தை காட்டினேன்.
அந்த கிரீடம் எல்லாம் வேண்டாம். முக அழகு, கண்கள் பேசும் மொழி இது போதும்னு சொன்னேன். அடிக்க வர்றாங்க. எல்லாமே கடவுளால்தான் நடக்குதுனு நம்புறவன். அதையும் அவர் தீர்மானிப்பார்.
‘மாஸ்’ படத்தில் நடிக்கிறீங்களாமே?
சூர்யாவோட நண்பரா நடிக்கிறேன். லவ் சீன், சாங் மட்டும் இருக்க மாட்டேன். மற்றபடி படம் முழுக்க அவர்கூடவே வருவேன். அண்ணன் ஸ்டைல் படம் இது. புதுமையாக இருக்கும். 2015-ல் ரிலீஸ்.
அண்ணன் வெங்கட்பிரபு படத்துக்கு எப்போ இசையமைப்பீங்க?
‘சென்னை 28’ படத்தப்போ யுவன் ‘பருத்தி வீரன்’ படத்துல பிஸியா இருந்ததால சரோஜா, சல்சா, யாரோ.. மூன்று பாடல்களுக்கும் நான்தான் இசையமைச்சேன். படத்துக்கு முழுக்க பின்னணி இசையும் நான்தான். அடுத்து ‘சரோஜா’ படத்தப்போ அண்ணன், யுவன்கிட்ட ‘பிரேம்ஜியே இசை வேலைகளை கவனிச்சிக்கிட்டுமா?’னு கேட்டான். நடிப்பு இல்லைனா இசை, அவன் ஏதாவது ஒரு விஷயத்தை செய்யட்டும்னு அவரே மியூசிக் பார்த்துக்கிறேன்னு சொன்னார். இது அண்ணனுக்கும், யுவனுக்கும் உள்ள டீலிங். வெங்கட் படத்தில் நான் நடிக்காமல் இருக்கும்போது இசையை பார்த்துப்பேன்.
பேட்டியை முடித்து கிளம்பும் முன், மீண்டும் நம்மை அழைத்த பிரேம்ஜி, “ஆரம்பத்தில் தொடங்கின விஷயத்தோட தொடர்ச்சியா ஒரு விஷயத்தை மறந்துட் டேன். இரண்டு வாரத்துக்கு முன் விஷாலை சந்திச்சப்போ, ‘இப்போ ‘புரட்சி தளபதி’ பட்டத்தை போட்டுக்கறதே இல்லை யேப்பா’ன்னு கேட்டேன். அதெல்லாம் ‘வேண்டாம்’னு கேஷுவலாக சொன்னார். அப்போ அதை நான் எடுத்துக்கிட்டுமா! என்று கேட்க, ‘உன்னை பிச்சுப்புடுவன்டா’னு துரத்தினான்.
நண்பர்களே.. யாருக்கு பட்டம் வேண்டாமோ அதை தாராளமாக என்கிட்ட கொடுக்கலாம். பிரேம்ஜி இருக்கிறேன்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago