சாதனையுடன் தொடங்கிய படம்

By கா.இசக்கி முத்து

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான பெயர்கள், முன்னணி நடிகருக்கு வித்தியாசமான கெட்டப் உள்ளிட்டவை படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும். தற்போது ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை வைத்துப் படமெடுத்து படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘என்ன சத்தம் இந்த நேரம்'.

படம் வெளியாகும் முன்பே, 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இப்படத்தின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் எந்த ஒரு படத்திலும் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை வைத்துப் படமெடுத்தது இல்லை. அச்சாதனையைச் செய்து, படம் வெளியாகும் முன்பே சாதனை படைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ரமேஷைச் செம்மொழிப் பூங்காவில் சந்தித்துப் பேசியபோது, “சாதனை படைக்கணும்னு நானா எந்த ஒரு விஷயத்தையும் செய்யலை. அதுவே நடந்தது. ‘என்ன சத்தம் இந்த நேரம்' ஒரு காமெடி கலந்த த்ரில்லர். நாயகன், நாயகியைச் சுற்றி நடக்குற கதை கிடையாது. ஒரே நாள்ல ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற பிரச்சினை எப்படி முடியுது என்பதை இந்த நான்கு குழந்தைகளை முன்வைத்து சொல்லியிருக்கிறோம்” என்றார்.

எப்படி இந்த நான்கு குழந்தைகளைத் தேர்வு செய்தீர்கள் என்றவுடன், “ஒரு வீட்ல ஒரு குழந்தை இருந்தாலே சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். அதுவும் நிறைய பேர் இருந்தாங்கன்னா. வயது வித்தியாசம் இருக்குறப்போ சமாளிச்சுடலாம். ஆனா ஒரே வயது குழந்தைகளா இருக்குறப்போ சமாளிக்கறது கஷ்டம். இதப்பத்தி இணையத்துல படிச்சிட்டு இருந்தேன்.

சினிமால இரட்டைக் குழந்தைகளை வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு. நாம் ஏன் மூணு குழந்தைகளை வைச்சு பண்ணக் கூடாதுன்னு யோசிச்சு தேட ஆரம்பிச்சேன். படத்தோட கதையையும் அதை வச்சுதான் பண்ணினேன். ரொம்ப நாளா கிடைக்கல. நிறைய பேர்கிட்ட மெயில் பண்ணி தேடினேன். இரட்டைக் குழந்தைகளாக இருந்த 2 ஜோடியை வைச்சு பண்ணலாம்னு ப்ளான் பண்ணினேன்.

ரொம்ப நாள் தேடி, அக்குழந்தைகள் எனக்கு சென்னைல அமைஞ்சு, அவங்க ஃபேமிலி நடிக்க ஒத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவங்க பேரு அதிதி, ஆப்தி, ஆக்ருதி, அக்‌ஷ்தி. இதுல இன்னொரு ஹைலைட் இருக்கு. இவங்க நாலு பேருமே சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரே க்ளாஸ், ஒரே செக்‌ஷன்” என்றார்.

நான்கு குழந்தைகள் ஓ.கே. நடிக்க மாட்டேன்னு இருந்த ஜெயம் ராஜாவும், 'காதல் மன்னன்' படத்தோடு நடிப்பை விட்ட மானுவும் எப்படி நடிக்க ஒத்துக் கிட்டாங்க? “நான்கு குழந்தைகள் கிடைத்தவுடன், நிதின் சத்யாவை ஒப்பந்தம் செய்தேன். படத்துல முக்கியமான ரோல் குழந்தைகளோட அப்பா - அம்மா. இப்பவுள்ள ரசிகர்கள் புதுமுகங்களை நிறைய எதிர்பாக்குறாங்க. ஜெயம் ராஜா, மானு ரெண்டு பேரையும் ஒத்துக்க வைச்சது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. “எனக்கு நடிக்கணும் அப்படிங்கிற ஆசையே கிடையாது” என்றார் ராஜா. சரி சார், கதை கேளுங்க. நான் ஒரு இயக்குநர் கிட்ட கதை சொன்னதா இருக்கட்டும். அப்புறமா முடிவு பண்ணுங்கனு சொல்லிட்டு கதையைச் சொன்னேன். “சரி ரமேஷ். நான் பண்றேன்” என்று ஒத்துக்கிட்டார்” என்றவர் மானுவை ஒப்புக்கொள்ளவைத்த கதையைத் தொடர்ந்தார்..

“ நடிகை மானுவை ஒரு விளம்பர படம் இயக்கியது மூலமா தெரியும். நான் போன் பண்ணும்போதே, அவங்க சொன்ன முதல் வார்த்தை, “ரமேஷ், படத்துல நடிக்கணும்னு கேட்குறதா இருந்தா போனை வைச்சுடு” அப்படினு சொன்னாங்க. மேடம். கதை கேட்டுட்டு முடிவு பண்ணுங்க சொல்லி கதையை சொன்னேன். அன்றைக்கு மாலையே, “சரி ரமேஷ். பண்றேன். எனக்கும் ஒரு நல்ல கம்பேக் கதையா இருக்கு” என்றார். இவங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்ச பெருமை இந்த ரமேஷுக்கு இருக்கு “ என்றார் சந்தோஷமாக.

“லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அப்ளை பண்ணின உடனே, டெல்லியில் இருந்து சென்னைக்கு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. குழந்தைகளை பாத்துட்டு இவங்க நாலு பேர்தான்னு கன்பார்ம் பண்ணிட்டு அவார்ட் கொடுத்துருக்காங்க. 4 குழந் தைகள், ஜெயம் ராஜா, மானு மற்றும் என்னோட டீம். நிறைய புதியவர்களை வைச்சு வெர்க் பண்ணியிருக்கேன். புதுசா வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுறவங்களை இந்த திரையுலகம் கைவிடுறதில்லை. அந்த வரிசைல ‘என்ன சத்தம் இந்த நேரம்' கண்டிப்பா இடம் பிடிக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்