கொம்பன் திரைப்படத்தை வெளி யிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திரைப் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் இருந்தால் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் ஏப். 2-ல் வெளியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் தயாரித்துள்ளனர். கதாநாயகன் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராகவும், வில்லன் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவராகவும் காட்டியுள்ளனர். வேறு இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு முதல்முறையாக விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் ஆகியோர் படத்தை பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம் போர்பிரேம் பிரிவியூ தியேட்டரில், கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்க்கச் சென்றனர். அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பினர், படத்தின் கதை, வசனக் குறிப்பை தங்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின்னர், வசனங்களைக் குறிப்பெடுக்க வசதியாக படத்தை ரிவைண்ட் செய்யுமாறு கேட்டுள்ளனர்.
அப்போது, படக் குழுவின ருக்கும், மனுதாரர் தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் படத்தை முழுமையாக பார்க்காமலேயே தியேட்டரில் இருந்து வெளியேறினர். பின்னர், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு பேக்ஸில் அனுப்பிவைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தணிக்கை வாரிய வழக்கறிஞர், கொம்பன் படத்துக்கு சட்டத்துக்குட்பட்டே தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், கொம்பன் படத்துக்கு தடை கோரிய மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் முன் நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஜாதி மோதலை ஏற்படுத்தும் மற்றும் பொது அமைதியை கெடுக் கும் வகையில் எடுக்கப்படும் படங்களை வெளியிடக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து கிடை யாது. சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், ஜாதி பதற்றத்தை ஏற்படுத்தும் வகை யிலும், எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ குறை கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதுபோன்று ஜாதி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படம் எடுப்பவர்களால், அப்பாவி மக்களின் அமைதியான வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை கொம்பன் படத்தில் குறிப்பிட்ட ஜாதி குறித்து ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருப் பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு படத்தை பார்க்க உத்தரவிடப் பட்டது. அந்தக் குழுவால் படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக நீதிபதிகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த விவகாரத் துக்குள் தற்போது செல்ல விரும்ப வில்லை.
மேலும், படத்தில் ஆட்சேபக ரமான காட்சிகள், வசனங்கள் இருப்பதற்கு போதுமான ஆவண ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழும் வழங்கியுள்ளது. படத்தை யாரும் முழுமையாக பார்க்காத நிலையில், படத்துக்குத் தடை விதிக்க முடியாது. எனவே, படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் மனுதாரர், பிரதான மனுவை சட்டத்துக்கு உட்பட்டு திருத்தம் செய்து தொடர லாம். படத்தை பார்த்து, அதில் சமூக நல்லிணக்கத்துக்கு எதி ரான காட்சிகள், வசனங்கள் இருந் தால் மனுதாரர் உட்பட யாரும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள் ளது. பின்னர், பிரதான மனு மீதான விசாரணையை ஏப். 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago