ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், தந்தையர் தினத்தை முன்னிட்டு, தன்னுடைய அப்பா குறித்த சுவாரசியமான சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களின் கோச்சடையான் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதற்குப் பிறகு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
தாய்மையை அனுபவித்து வருகிறேன். மே 2014-ல் 'கோச்சடையான்' வெளியானது. மே 2015-ல் என் மகன் வேத் கிருஷ்ணா பிறந்தான். படத்துக்கு பிறகு முழுமையான ஓய்வு மற்றும் அமைதிதான்.
படத்தில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். திரையுலகம் எப்படி வேலை செய்கிறது, நடிகர்களின் வேலை எப்படி என பல்வேறு தளங்கள். என்னுடைய அறிமுகப் படத்திலேயே ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
படத்துக்குப் பின்னர் என்னுடைய அப்பா, அம்மா இருவருமே கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள் என்று அறிவுறுத்தினார்கள். ஒரு வருடத்தில் பையன் பிறந்தான். இனி விரைவில் என்னைச் சந்திப்பீர்கள்.
கோச்சடையான் படத்தை ஒரு ரஜினி ரசிகையாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
படத்தை என்னுடைய குழந்தையாகத்தான் பார்த்தேன். எப்போதும் படத்தைப் பற்றியேதான் சிந்தித்துக்கொண்டு இருப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கலவையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 'அட்வென்சர்ஸ் ஆஃப் டின்டின்', 'அவதார்' உள்ளிட்ட படங்களைப் போலிருக்கும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் படத்தின் தொழில்நுட்பத்தைப் பற்றித்தான். படத்தின் வெளியாக்கத்தைப் பற்றியல்ல.
படம் பெரும்பான்மையான ரசிகர்களின் ரசனையோடு ஏன் ஒத்துப்போகவில்லை என்று நினைக்கிறீர்கள்?
இந்திய ரசிகர்கள், அனிமேஷனைக் காட்டிலும் உண்மையான மனிதர்களைத்தான் திரையில் காண ஆசைப்படுகிறார்கள். அத்தோடு என்னுடைய கதை உண்மையாக இருந்தது. அதில் ஃபேண்டசி விஷயங்கள் எதையும் செய்யவில்லை. 'அவதார்' படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே புது உலகமே உருவாக்கப்பட்டு இருந்தது. 'தோர்' படத்தில் புது கிரகத்தை உருவாக்கி இருந்தனர். கோச்சடையானில் அத்தகைய அம்சங்கள் எதையும் சேர்க்கவில்லை. படம் உண்மையான போரை அடிப்படையாக கொண்டிருந்தது.
அதே படத்தைப் பண்ண திரும்பவும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அப்போது லைவ் ஆக்ஷன் சிஜி படமாக இயக்குவேன். 'பாகுபலி' படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லாமே இருந்தது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் திரும்பவும் என்னுடைய அப்பாவை வைத்தே இயக்குவேன். ஆனால் படத்தின் கதைக்கும், வெளியீட்டுக்கும் ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வேன்.
ரஜினிகாந்தின் 'லிங்கா' படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லையே?
அப்போது ஏராளமான விஷயங்கள் நடைபெறவில்லை. அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இப்போதைய ரசிகர்கள் எல்லாம், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு அப்பாவைக் காண நினைக்கிறார்கள். நானும் அந்த வகையில்தான் அப்பாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன். 'கபாலி'யில் அது இருக்கிறது.
உங்களின் குழந்தைப் பருவத்தில் ரஜினிகாந்த் பிடித்தமான அப்பாவாக இருந்தாரா?
மற்ற யாருக்குமே கிடைக்காத மிகச் சிறந்த அப்பா அவர். அதற்கு என்றுமே நன்றியுடையவளாக இருப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நானும் அக்காவும் (ஐஸ்வர்யா) இப்போதுதான் அப்பாவை அதிகம் பார்க்கிறோம். அப்போது அவர் பயங்கர பிஸியாக இருப்பார். அப்போது பல்வேறு மொழிகளில் நடித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வருடமும் அவரின் 7, 8 படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனாலும் எங்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார். செலவிட்டார்.
ஆனாலும் உங்களுடையது வழக்கமான குழந்தைப் பருவமாக இருந்திருக்காது அல்லவா? உங்களால் படத்துக்கோ, பீச்சுக்கோ அவருடன் சேர்ந்து போக முடிந்ததா?
2002- ல் நடந்த அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்பா திடீரென என்னையும், இன்னொரு ஃப்ரண்டையும் வெளியே அழைத்துச் செல்ல ஆசைப்பட்டார். அப்பா ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் கூட்டத்துக்குள் புகுந்து வெளியே வந்துவிடுவார்.
அந்த நாள் மாலையில் அப்பா தலையில் ஒரு மஃப்ளரைச் சுற்றியிருந்தார். அப்படியே மெரினா பீச்சுக்கு சென்றோம். மணலில் பேசிக்கொண்டே நடந்து சென்றோம். அப்போது திரை நடிகர்களின் புகைப்பட கட்-அவுட்கள் கடையைக் கடந்தோம். அங்கே நிறைய பேர் நடிகர், நடிகையரின் கட்-அவுட்களுடன் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பா என்னிடம் நீயும் ஒரு படம் எடுத்துக்கொள்கிறாயா என்று கேட்டார். நானும் மகிழ்ச்சியுடன் தலையாட்டினேன்.
நான் படம் எடுத்தது..... ரஜினிகாந்தின் கட்-அவுட்டுடன். அங்கே படம் எடுத்தவர், ரஜினிகாந்தே அருகில் நிற்கிறார் என்பதை உணராமலேயே என்னைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
ஸ்டாரின் குழந்தையாக ஏதேனும் சிரமத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
இது ஆசீர்வாதம்தான். என்னுடைய அம்மா, அக்கா மற்றும் நான் ஆகியோர்தான் ரஜினிகாந்தை எங்களின் பெயரிலேயே கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சிரமமும் இருக்கிறது. ஸ்டார்கள் என்ன சாதித்தார்களோ அவற்றை மக்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அதுதான் பெரிய அழுத்தமாக இருக்கிறது,
ரஜினி அவரின் படங்களிலும் பாடல்களிலும் எப்படி வாழ வேண்டும் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். அதேபோல் உங்களுக்கும் அடிக்கடி அறிவுரை கூறுவாரா?
மிகவும் பணிவான பின்னணியில் இருந்து வந்தவர் அப்பா, அவர் இன்னும் அதை மறக்கவில்லை. அவர் எனக்குச் சொல்லிக்கொடுத்த முக்கியமான விஷயம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதுதான்.
உங்களிடம் என்ன விஷயத்தைப் பின்பற்ற சொல்வார்?
நான் பெரிய வாசிப்பாளர் கிடையாது. இந்த இரண்டு வருடங்களாகத்தான் நிறையப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவர்தான் என்னை வாசிப்பு பழக்கத்தை நோக்கி தள்ளினார். வாசிப்பில் தீராத தாகம் கொண்டவர் அப்பா. அவர் தமிழ், ஆங்கிலம், கன்னட புத்தகங்களை படிப்பார். அவர் அதிகமாகப் பரிந்துரைப்பது கன்னட எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பாவின் எழுத்துக்களை. அப்பா அவரின் மிகப்பெரிய ரசிகர்.
தங்களின் அடுத்த புராஜெக்ட் என்ன?
ஏற்கெனவே என்னுடைய அடுத்த கதையில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். வேண்டுமென்றே அனிமேஷனில் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்கிறேன். என்னுடைய அடுத்த படம் ரொமான்டிக் காமெடியாக இருக்கும். என்னுடைய கதையை தனுஷுடன் இணைந்து பணிபுரிகிறேன். படம் விரைவில் வெளிவரும்.
கபாலி படம் குறித்து..
செளந்தர்யாவுக்கும் கபாலி படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அவர்தான் இந்த படத்தின் ஆரம்பகர்த்தா. இதுகுறித்து ஆர்வத்துடன் பேசுபவர்,
கோவா படத்தில் வெங்கட் பிரபுவின் அஸிஸ்டண்டாக இருக்கும் சமயத்தில் இருந்தே எனக்கு ரஞ்சித்தைத் தெரியும். அவரின் 'அட்டகத்தி' படத்தை நான் தயாரிப்பதாக இருந்து முடியாமல் போனது. ஒரு நாள் அப்பா 'மெட்ராஸ்' படம் தனக்கு பிடித்திருப்பதாகக் கூறினார். உடனே அந்த விஷயம் என் மனதில் வேலை செய்ய ஆரம்பித்தது.
பின்னாளில் நான் ரஞ்சித்தை சந்தித்தபோது அப்பாவுக்காக ஒரு கதை பண்ணுகிறீர்களா என்று கேட்டேன். அவர் உறைந்து நின்றார். சில நாட்கள் கழித்து வந்து ஒரு வரி சொன்னார். அது, 'மலேசியா டான்'. போதுமானதாக இருந்தது. இதை அப்பாவிடம் சொன்னேன். அப்பாவுக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய 'கபாலி'.
தமிழில்: ரமணி பிரபா தேவி
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago