என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

By மகராசன் மோகன்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி..

‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது?

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக

‘‘என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே..
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத்தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர்போல
உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா?

இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன்.

இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்..

‘‘நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா மூட்டை
ஒரு மாட்டுக்கொம்பு மேல
பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி?

எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்.

‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே?

‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.

மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…

மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு

இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’

இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா?

இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

அடுத்த உங்களது புதிய படைப்புகள்?

‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது.

கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது?

ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..

கடவுள் இருந்திருந்தால்
ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது.

உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்?

மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்