தள்ளி ஆரம்பிக்கலாமே!

தற்போது நிலவும் சூழ்நிலையை பார்க்கும் போது அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ஆரம்பம்' படம் தீபாவளிக்கு வெளிவருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

விஷால் நடித்து, தயாரித்திருக்கும் 'பாண்டியநாடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவை அதற்கான அச்சாரமாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர் விஷால் ஆகியோர் பயன்படுத்திக் கொண்டனர்.

'பாண்டியநாடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “தீபாவளிக்கு வருகிற எல்லா படங்களும் நல்லா ஓடணும் என்பதுதான் என் ஆசை. முன்பு 2800க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்போது அது ஆயிரத்து சொச்சமாக குறைந்துவிட்டது. அதிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்று எடுத்துக் கொண்டால் முன்னூத்தி சொச்சம்தான். இது தல படமும் வரப்போவுது. அவர் படம் வந்தா அது தல தீபாவளிதான். அதுல சந்தேகம் இல்ல. ஆனால் மற்ற படங்களும் வர்ற காரணத்தால் தல தன் படத்தை ஒரு வாரம் கழிச்சு கொண்டு வந்தார்னா நல்லாயிருக்கும்” என்று பேசினார் கேயார்.

அவ்விழாவில் பேசிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் “இயக்குநர் திரு மூலமாகத்தான், சுசீந்திரன் கிட்ட பாண்டியநாடு படத்தின் கதையை கேட்டேன். பிறகுதான் ஒருநாள் இரவு 12மணிக்கு திடீரென தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு பண்ணி இந்த படத்தை தயாரித்தேன்.

பாண்டியநாடு படம் ஆரம்பிக்கும்போது என்னிடம் ஒரு பைசா கிடையாது. என் நண்பர் அழகர் கொஞ்சம் பணம் கொடுத்தார், பிறகு அன்பு கொஞ்சம் பண உதவி செய்தார். பிறகு தான் சுசீந்திரனின் மூளையை வைத்து இந்தபடத்தை நான் தயாரிக்கலாம் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. என் கேரியரில் பாண்டியநாடு படம் ரொம்ப முக்கியமானது. பொதுவாக ஹீரோக்கள் எல்லோரும் ஹீரோயினத்தான் லவ் பண்ணுவாங்க, ஆனால் இந்தப்படத்தில் என் அப்பாவாக நடித்துள்ள பாரதிராஜாவைத்தான் நான் லவ் பண்ணினேன். ஒரு பெரிய இயக்குநரான அவரை அருகில் இருந்து ரசித்தேன். பாண்டியநாடு படத்தில் நான் திக்கி திக்கி பேசும் கேரக்டரில் நடித்ததால் என்னவோ இப்போது இங்கும் நான் திக்கி திக்கி பேசுகிறேன்.

சினிமாவில் ஒரு உதவியாளராக என் பயணத்தை தொடங்கினேன். முதன்முதலில் அர்ஜூன் சார்கிட்ட தான் உதவி இயக்குநராக பணியாற்ற வரிசையில் நின்றேன். அவர் என்னை தனது உதவியாளராக சேர்த்து கொள்வாரா இல்லையோ என்று தயங்கி தயங்கி நின்றேன். பிறகு உதவி இயக்குநராக பணியாற்றினேன், செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக நடிச்சு, இப்போ பாண்டியநாடு படத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராக உங்கள் முன்னாடி நிற்கிறேன். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன்.

மதகஜராஜா படத்தை ரிலீஸ் பண்றதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். இங்க ஓடுன்னு சொல்வாங்க. இங்க ஓடுவேன். அங்க ஓடுன்னு சொல்வாங்க. அங்க ஓடுவேன். அவ்வளவு ஏன், சென்சார் சர்டிபிகேட் ஜெராக்ஸ் காப்பியை கூட நான்தான் ஓடி ஓடி எடுத்தேன். நீங்க ஹீரோ. இந்த வேலையையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்க. இருந்தாலும் ஆர்வத்தோடவும் வெறியோடவும் ஓடுனேன். பட்… கடைசியில என்னாச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

இப்பவும் நானே சொந்தமா தயாரிக்கிற இந்த பாண்டியநாடு படத்தின் ரிலீசுக்காக ஓடிகிட்டு இருக்கேன். இந்த முறை எனக்கு பழைய அனுபவம் கிடைச்சுட கூடாதுன்னு கேயார் சார்கிட்ட கேட்டுக்கிறேன்

ஒரு இயக்குநர் உடைய கஷ்டம் என்னவென்று எனக்கு தெரியும். அதனால் என் தயாரிப்பு நிறுவனத்தில் நிறைய புதுமுகங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு தர போகிறேன். நான் இவ்வளவுதூரம் வருவதற்கு எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினீங்க, அதேப்போல் பாண்டியநாடு படத்திற்கும் சப்போர்ட் பண்ணுங்க “ என்றார்.

’ஆரம்பம்' படத்தின் டிவி உரிமை ஆளும் கட்சியிடம் இருப்பதால், இப்படத்திற்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் கோலிவுட்டில். இருந்தாலும், திரையரங்க ஒப்பந்தப் பந்தயத்தில் முந்த கடும் போட்டி நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE