முதல் பார்வை: அண்ணனுக்கு ஜே

By உதிரன்

அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் 'அட்டகத்தி' இளைஞன் அதே அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் களமிறங்கினால் அதுவே ‘அண்ணனுக்கு ஜே’.

பனைமரத்தில் இருந்து கள் இறக்கும் வேலையை குடும்பத் தொழிலாக செய்து வருகிறார் முருகேசன் (மயில்சாமி). மகன் சேகரை (தினேஷ்) வேலைக்கு வைத்து அவருக்கான கூலியையும் அதிகம் வழங்குகிறார். டுடோரியல் காலேஜில் படித்து வரும் சுந்தரியை (மஹிமா) சேகர் லவ்வுகிறார். மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் உள்ளூர் அரசியல் பிரமுகரும், பார் உரிமையாளருமான செல்வா (தினா) குறுக்கிடுகிறார். கள் இறக்கும் தொழிலை விட்டுவிட வேண்டுமென்று முருகேசனை மிரட்டுவதோடு, போலீஸுக்கும் போட்டுக்கொடுக்க, முருகேசனை போலீஸார் நெம்பி எடுக்கிறார்கள்.

அரசியல் பலம் இல்லாததால் கண்முன்னேயே அப்பாவை அடித்துவிட்டார்கள் என்ற விரக்தியில் அவரை அரசியலில் ஆளாக்க நினைக்கிறார் சேகர். அதற்காக ராதாரவியின் ஆலோசனைப்படி லட்சக்கணக்கில் செலவு செய்கிறார். இந்த சூழலில் கள் இறக்கும் உபகரணங்கள், இடம் என எல்லாவற்றையும் தீயிட்டு எரித்து சின்னாபின்னமாக்குகிறார் செல்வா. அவனைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது என்று ஊரை விட்டே ஓடிப்போகச் சொல்கிறார் ராதாரவி. அதற்குப் பிறகு மட்டசேகராக இருக்கும் தினேஷ் என்ன செய்கிறார், அப்பாவுக்கு அரசியலில் பதவி வாங்கிக் கொடுத்தாரா, காதலியைக் கரம் பிடித்தாரா, கொலை முயற்சிப் பழியிலிருந்து தப்பித்தாரா, அரசியல் வாய்ப்பு அவருக்கு எப்படி வருகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

உள்ளூரில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் அப்படியே பிரதியெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார். அதை சீரியஸ் கோணத்தில் அணுகாமல் நகைச்சுவைத் தளத்தில் பதிவு செய்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

நாயகி மஹிமாவுடனான காதல் காட்சிகளில் தினேஷ் பின்னி எடுத்திருக்கிறார். ''உங்க அம்மா தொடப்பக்கட்டையால அடிச்சா நான் அடிங்க அடிங்கன்னு வாங்கிக்கிட்டே இருக்கணுமா?'' என ரவுசு காட்டுகிறார். காதல் வேண்டாம் என்று சொல்லிச் செல்லும் மஹிமாவிடம், ''உனக்கு சிக்கன்குனியா வந்தப்போ எனக்கும் வரணும்ன்னு சாமி கும்பிட்டேன். என் போனைக் கொடுத்துட்டுப் போ, டிஸ்பிளே உடைஞ்சிடுச்சு, காசு கொடுத்துட்டுப் போ'' என்கிறார். ''இந்த மூஞ்சியைப் பார்த்தா வெட்றவன் மாதிரியா தெரியுது'' என்று அப்பாவியாக தினேஷ் கேட்கும்போது நமக்கும் சிரிப்பு வெடித்துக் கிளம்புகிறது. பனை மரத்தில் ஏறி கள் இறக்குவது, பயந்த சுபாவத்தை அப்படியே கண்முன் நிறுத்துவது, சிறைவாசத்தில் சொன்ன சீனியரின் அறிவுரைப்படி சண்டையே போடாமல் சவுண்ட் விட்டே எதிரிகளை விரட்டுவது என தினேஷ் படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். இளைஞரணிச் செயலாளராக கெத்து காட்டும் இடங்களில் அரசியல் புள்ளிகளின் தோரணையை நகல் எடுக்கிறார்.

ஊடல் மிகுந்த காதல் காட்சிகளில் மஹிமா மனசுக்குள் மத்தாப்பாய் மின்னுகிறார். தினேஷை ரசிப்பதும், வெறுப்பது போல நடிப்பதும், பின் உருகி மருகுவதுமாக நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்த மயில்சாமி குணச்சித்ரக் கதாபாத்திரத்தில் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு தேர்ந்த நடிகனை தமிழ் சினிமா இவ்வளவு காலம் சரக்கடித்து சலம்பும் மனிதராகவே காட்டியிருப்பது சோகம்.

பார் ஓனராக வரும் தினாவின் பாத்திர வார்ப்பு சாலப் பொருத்தம். ராதாரவியின் கதாபாத்திரம் அவருக்கே உரித்தான டெம்ப்ளேட் என்றாலும் சாணக்கியத்தனமும், தந்திரமும் நிறைந்த அரசியல்வாதியின் குணநலன்களை அவர் மூலமாகக் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

கடைசி வரைக்கும் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் கட்சியே கதி என்று கிடக்கும் அடிமட்டத் தொண்டன், மனைவியிடம் மரியாதையும் இல்லாமல் சோறுக்காக அடி வாங்குவதை ஆர்.கே.விஜய் முருகன் கதாபாத்திரத்தின் மூலம் கட்டமைக்கப்படுகிறது.

உள்ளூர் அரசியலில் நடக்கும் போஸ்டர், பேனர் சண்டைகள், பிரியாணிக்காக கூடும் கூட்டம், தலைவர் வேறு வழியில் பயணம் மேற்கொள்ள லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு பரிதாபமாக நிற்கும் தொண்டனின் நிலை, 40 ரூபாய் துண்டைப் போட்டுவிட்டு 500 ரூபாய் வாங்கும் சாமர்த்தியம், குறிப்பிட்ட நேரத்துக்கு கூட்டத்துக்குப் போனா மதிக்க மாட்டாங்க, லேட்டா போனாத்தான் மதிப்பாங்க என்ற அரசியல் நிலவரம், பதவிக்காக கட்சி மாறுவது, எதிரிக்கட்சிகள் தேர்தல் வியூகம் என்ற பெயரில் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடுவது, பொதுக்கூட்டத்தில் தாங்களாகவே கரண்ட்டை நிறுத்திவிட்டு எதிர்க்கட்சியைத் திட்டி விமர்சிப்பது, நாம உட்கார்ந்தா கட்சி உட்கார்ந்திடும்னு என பன்ச் பேசுவது என அரசியலைப் பகடி செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

மஹிமாவின் வீட்டுக்குள் வந்து மாட்டிக்கொள்ளும் தினேஷின் ரொமான்ஸ் அம்சங்கள், பாரில் சரியாக வேக வைக்காத நண்டு தன்னைக் கடித்துவிட்டதாகப் புலம்பும் குடிகாரன் என சின்னச் சின்னத் தருணங்களிலும் இயக்குநர் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

ராஜேஷ் கண்ணன், மீரான் மைதீன், ராஜ்குமாரின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும் ஜி.வி.வெங்கடேஷின் படத்தொகுப்பும் படத்தைத் தொங்கல் இல்லாமல் கச்சிதமாகக் கொண்டு செல்ல உதவுகின்றன. அரோல் கொரேலியின் இசையில் நான் மட்ட சேகரு, தாறுமாறா மனசு பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார்.

படம் முழுக்க அரசியல் வாடைதான். அதில் எவ்வளவு தூக்கலாகவும் மாஸ் மசாலைவைச் சேர்த்திருக்கலாம்தான். அது கதையோட்டத்திற்கேற்ப சரியாக ரசிகர்களிடம் எடுபட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லைதான். ஆனால், அதை மிக அழகாகத் தவிர்த்திருக்கும் இயக்குநரின் ராஜ்குமாரின் ஆளுமை ரசனை. சுற்றிச் சுழன்றடித்து மாஸ் ஹீரோவுக்கான சப்ஜெக்ட் என்று நரம்பு புடைக்கும் சண்டைக்காட்சி அமைக்காமல், நகைச்சுவையைப் படம் முழுக்கப் பரவவிட்டு, கதைக்கான கனத்தைக் கூட்டி, திரைக்கதையை சோர்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.

சாதி அரசியலை முன்னெடுக்காதது, இன்னொரு ரவுடிதான் தினாவை வெட்டியது என கதை பண்ணாமல் அதிலும் சுவாரஸ்யம் சேர்த்த விதத்தில் அண்ணனுக்கு ஜே போடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்