வீணை வாசிப்பது எனக்கு கடவுள் தந்த பரிசு: பன்முக கலைஞர் மீரா கிருஷ்ணன் நேர்காணல்

By மகராசன் மோகன்

‘வளையோசை கலகலகலவென’, ’இளையநிலா பொழிகிறதே’, ‘மேரே சப்னோ கி’, ‘பூவே செம்பூவே’, ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என காலத்தால் அழிக்க முடியாத பல கானங்கள் இப்போது மீரா கிருஷ்ணனின் வீணை வழியே veena meerakrishna என்ற யூ-டியூப் சேனலில் புதுவடிவம் எடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், நாடக, திரைப்பட நடிகை என்கிற பன்முகத் திறனோடு ‘வீணை மீரா கிருஷ்ணன்’ என்ற அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

வாட்ஸ்அப் திறந்தால் ஏதாவது ஒரு குழுவில் உங்கள் வீணை வாசிப்பு பாடல் ஒன்று பதிவிறங்குகிறது. என்ன திடீரென வீணை மீது அப்படி ஒரு காதல்?

‘வாசி.. வாசி’ என அம்மா, அப்பா விடாமல் கற்றுக்கொடுத்தது இது. இடையே நடிப்பு, குடும்பம், பாடல்கள் பாடுவது என இறங்கியதால் கடந்த 20 வருஷங்களா வீணையைத் தொட முடியவில்லை. கடந்த ஒன்றரை வருஷமா முழு ஈடுபாட்டோட இறங்கிட்டேன். பிறந்த வீடு மட்டுமில்லாம, புகுந்த வீடும் இசைப் பின்னணி குடும்பம். ஐயப்ப பக்தி பாடகர் கே.வீரமணியின் மருமகள் வேறு. கல்யாண கச்சேரி, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மட்டும் வாசிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கிளாஸிகல் பக்கம் போகவில்லை.

அப்படியானால் இனி இசையமைப்பாளர் கள் உருவாக்கும் புதிய பாடல்களிலும் பங்களிப்பை செலுத்தலாமே?

இப்போது வரை எம்எஸ்வி, இளையராஜா வின் பிரபல பாடல்களை மட்டும்தான் எடுத்து கச்சேரி நடத்தி வருகிறேன். புதிய பாடல்கள் உருவாக்கும் இசையமைப்பாளர் களின் குழுவில் பயணிக்க பெரிதாக ஆர் வம் இல்லை. ஒரு காலத்தில் இசையமைப் பாளர்கள் தேவா, மரகதமணி உள்ளிட்டோரின் பாடல்களுக்கு வீணை வாசித்திருக்கிறேன். சினிமாவில் பிஸியானதால், இதற்கு நேரம் ஒதுக்காமல் அப்படியே விட்டுட்டேன். சமீபத் தில் ராஜேஷ் வைத்யாவின் கச்சேரிக்கு போனப்போதான் திரும்பவும் ஆர்வம் வந்தது. அவர் என் மானசீக குரு. வீட்டில் இருந்த வீணையை தூசிதட்டி எடுத்து வாசிக்க ஆரம்பிச்சேன். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போது பாராட்டு குவிகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீணை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். குறுகிய காலத்தில் எப்படி இந்த அளவுக்கு நுணுக்கமாக வாசிக்க முடிகிறது?

ஒவ்வொரு பாட்டும் என் காதில் ஸ்வரமாகத் தான் விழுகிறது. அதனால்தான், எந்தப் பாட்டை கேட்டாலும் உடனே வாசிக்க முடி கிறது. இது கடவுள் தந்த பரிசு. பாடகியாக இருப்பதால் பழைய பாடல் தொடங்கி புது பாடல் வரை எல்லாம் அத்துபடி. அதுவும் இந்த முயற்சிக்கு உதவியாக இருக்கிறது.

அப்படியென்றால் இனி நடிப்பு?

நடிப்பில் கவனம் செலுத்தியதால், வீணையை கவனிக்காமல் விட்டது தவறு என இப்போது புரிகிறது. அதே தவறை மீண்டும் செய்யக்கூடாதுதானே. அதனால், வீணை, சினிமா இரண்டுக்கும் முக்கியத் துவம் தருவேன். இப்போது ‘ஆருத்ரா’ படத்துக்கு பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீனியஸ்’ முடித்திருக்கிறேன். அடுத்து நயன்தாராவுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அடுத்தடுத்து 2 படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன்.

சினிமாவில் உங்களைப் போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கான இடம் எப்படி இருக்கிறது?

சமீபகாலமாக நல்ல கதைகள் நிறைய உருவாகின்றன. இங்கு யாருடைய இடத்தை யும் யாரும் பறிக்க முடியாது. அதேநேரம், துணை கதாபாத்திரங்களுக்கு எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நல்ல ஸ்கோப் கிடைக்கும் என கூற முடியாது.

சீரியல்களில் இப்போது உங்களைக் காண முடியவில்லையே.

செய்தி வாசிப்பு, தொகுப்பாளினி என பயணித்துவிட்டு, அடுத்து சீரியல் பக்கம்தான் சென்றேன். அதுவும் நல்ல ஏரியா. இப்போது சினிமா, வீணை கச்சேரிக்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் சீரியல் பக்கம் போக முடியவில்லை.

திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு புதிய முயற்சி, பயிற்சிகளில் இறங்குவதற்கு பல பெண்கள் தயங்குகிறார்கள் என்ற கருத்து உள்ளது. நீங்கள் வித்தியாசப்பட்டது எப்படி?

100 படங்களில் நடித்திருப்பேன். தினமும் வாக்கிங் போகும் பூங்காவில் பலரும் என்னை பார்க்கிறார்கள். சின்ன ஸ்மைல் அவ்வளவுதான். ரொம்ப தெரிஞ்ச சிலர் கிட்டே வந்து பேசுவாங்க. ஆனா இன்னைக்கு ‘வீணை மீரா கிருஷ்ணன்’ என அடையாளம் கிடைத்த பிறகு, முகம் தெரியாத பலரும் என்கிட்ட நேர்ல வந்து சில நிமிஷம் பேசிட்டு போறாங்க. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு.

இதற்கு என் கணவர் கிருஷ்ணன் தரும் ஊக்கம் முக்கிய காரணம். அவர் சென்னையில் ‘ஸ்ருதிலயா’ என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவை 25 ஆண்டுகளாக நடத்திவருகிறார். என் முதல் விமர்சகர் அவர்தான். அதேபோல என் மகள், மகனும் பெரிய பலம். ‘இந்த பாட்டு பாடுங்க, அந்த பாட்டு பாடுங்க’ என என்னை எப்போதும் இசை குறித்து யோசிக்க வைச்சிட்டே இருப்பாங்க. பிறந்த வீடு, புகுந்த வீடு ஆகிய இரண்டும் தரும் உற்சாகமும் முக்கிய காரணம்.

இதுபோன்ற சூழல் அமைந்தால் யாரும், எந்த காலகட்டத்திலும் சாதிக்கலாம். இப்போ கேரளா, ஆந்திரா, வெளிநாடுகள் என நிறைய கச்சேரி வர ஆரம்பிச்சாச்சு. முன்பு மேடைப் பாடகியாக உலகம் சுற்றினேன். இப்போ வீணை மீரா கிருஷ்ணனாக உலகம் சுற்றத் தயாராகிட்டேன்.

உங்களது வீணை வாசிப்பை பாடகி பி.சுசீலா பாராட்டினாங்களாமே?

‘‘மீரா! உன் மனசுக்குள்ளே பாட்டு ஓடுது. அதுதான் கை வழியாக வெளியே வருது’’ன்னு சொல்லி பாராட்டினாங்க. அந்த சரஸ்வதி தேவியே சொன்னமாதிரி இருந்தது. இன்னும் அந்த பாராட்டுல இருந்து என்னால் வெளியே வர முடியல. சமீபத்தில் வீணை காயத்ரி அக்காவும் பாராட்டினாங்க. சில டிப்ஸும் கொடுத்துட்டு வர்றாங்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்