விஷால் முன்னாள் டிரைவர் மரணம்: குடும்பத்தினரின் குமுறலும், விஷால் மேலாளர் விளக்கமும்

By சி.காவேரி மாணிக்கம்

விஷாலின் முன்னாள் கார் டிரைவர் பாண்டியராஜன் மரணமடைந்த நிலையில், விஷால் நினைத்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என விஷாலின் தந்தை கண்ணதாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய தாயார் தேவி பெயரில் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகள் செய்துவரும் விஷாலா இப்படி? எனப் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இது உண்மையா? என்று பாண்டியராஜனின் அண்ணன் முருகேசனிடம் பேசினேன். “மருத்துவச் செலவுகளை விஷால் பார்த்ததாகச் சொல்வதும் முழுக்க முழுக்க பொய். ஜூன் மாதத் தொடக்கத்தில் 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் அனுப்பினர். அதுவும் அவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளப் பாக்கி இருந்தது. நாங்கள் போன் பண்ணிக் கேட்டபோது, அக்கவுண்ட்ஸில் இருந்த ரம்யா என்பவர், ‘20 ஆயிரம் ரூபாய் தான் விஷால் சார் கொடுக்கச் சொன்னார். இதுக்கு மேல் தர முடியாது’ என்றார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவன் குடித்ததாகச் சொல்வதும் பொய். வேண்டுமானால் அவனுடைய எல்லா மருத்துவ அறிக்கைகளையும் தருகிறோம். குடும்பத்துடன் மருத்துவமனைக்கு வருவதற்கும் தயாராக இருக்கிறோம். மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துவிட்டு அவன் குடித்தானா, இல்லையா என்பதை மருத்துவர்கள் சொல்லட்டும். மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதைத் தவிர்த்து அவன் வீட்டைவிட்டு கூட வெளியில் வரவில்லை. நீங்களே கூட ஊரில்வந்து கேட்டுக் கொள்ளுங்கள். நடக்கக்கூட முடியாமல் இருந்தவன் எப்படி சார் குடிப்பான்?” என்றார் வேதனை பொங்க.

விஷால் அலுவலகத்தில் பாண்டியராஜன் எப்போது வேலைக்குச் சேர்ந்தார்? எனக் கேட்டபோது, “கடந்த 5 வருடங்களுக்கு முன்பு விஷாலிடம் ஆபீஸ் பையனாகச் சேர்ந்தான் பாண்டியராஜன். 3 வருடங்களுக்குப் பிறகு விஷாலின் பர்சனல் டிரைவராக மாற்றம் செய்யப்பட்டான். வேலையைவிட்டு நீக்கும்வரை 2 வருடங்களாக விஷாலுக்கு பர்சனல் டிரைவராகத்தான் இருந்தான். ‘பாண்டிய நாடு’ படத்தின் டைட்டில் கார்டில், கார் ஓட்டுநர் பாலமார்த்தாண்டபுரம் பாண்டியராஜன் என என் தம்பி பெயரும் வரும். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், ஒரு காட்சியில் என் தம்பியும் நடித்திருக்கிறான்.

விஷால் சாரைப் பற்றி என் தம்பி தவறாகப் பேசினான் என உடன் இருப்பவர்கள் பொய்ப்புகார் கூறியதால், அவனை வேலையைவிட்டு நீக்கிவிட்டனர். அவர்கள் வேலையைவிட்டு நீக்கி ஏழெட்டு மாதம் தான் இருக்கும். ஆனால், மருத்துவமனையில் என் தம்பி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, யார் விஷால் சாரிடம் பொய்ப்புகார் கூறினாரோ, அவரே மன்னிப்புக் கேட்டு என் தம்பிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார். அவரும் தற்போது விஷால் சாரிடம் வேலை பார்க்கவில்லை.

கடந்த 3-ம் தேதி இரவு என் தம்பி இறந்துவிட்டார். ஆனால், இதுவரை விஷால் சாரிடம் இருந்தோ, அவர் அலுவலகத்தில் இருந்தோ ஒரு போன் பண்ணிக்கூட ஆறுதல் சொல்லவில்லை. விஷால் தொடங்கியிருக்கும் மக்கள் நல இயக்கத்தின் மாநிலச் செயலாளரான ஹரிகிருஷ்ணன் தான் என் தம்பிக்குத் துரோகம் இழைத்துவிட்டார். அவருடன் பாபு என ஒருவர் இருக்கிறார். விஷால் சாரின் பர்சனல் நம்பர் செல்போனை அவர்தான் கையில் வைத்திருப்பார் என நினைக்கிறேன். என் தம்பி மருத்துவமனையில் இருந்தபோது அலுவலகத்தில் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை என்பதால், நேரடியாக விஷால் சாருக்கே போன் செய்தேன். அப்போது பாபு என்பவர் போனை எடுத்து, ‘நான் விஷாலிடம் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். இரண்டு, மூன்று முறை போன் பண்ணபோதும் இப்படித்தான் பதிலளித்தார். ஆனால், அவர் விஷாலிடம் சொன்னாரா என்பது தெரியவில்லை. இந்த விஷயம் விஷால் சாருக்குத் தெரியுமா, தெரியாதா என்பதுதான் விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது” என்று தேம்பினார்.

சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்ந்தவர், “இதுகூடப் பரவாயில்லை. விஷால் சாரிடம் பேச முடியாததால், அவர் அலுவலகத்துக்கு என் தந்தை நேரடியாகவே போயிருக்கிறார். ஒருநாள் முழுக்கக் காத்திருந்தும் விஷாலைப் பார்க்க முடியவில்லை. கடைசியில், அவர் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, ‘வழிசெலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இப்படி எந்த வழியிலும் விஷால் சாரைத் தொடர்பு கொள்ள முடியாததால், எங்கள் உறவினர் ஒருவர் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரால் கூட விஷாலைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற பதில்தான் கிடைத்தது” என்றார்.

முருகேசனால் குற்றம் சாட்டப்பட்ட விஷாலின் மேனேஜரான ஹரியிடம் பேசினேன். “அவர் வேலையைவிட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. யாராவது சம்பளப் பாக்கியை 10 மாதங்கள் கழித்து கொடுப்பார்களா? 6 மாதங்களுக்கு முன்னால் திடீரென போன்செய்து, ‘ரொம்ப சீரியஸாக இருக்கிறது. பிழைக்க மாட்டான்னு டாக்டர்கள் சொன்னதா சொன்னாங்க. நாங்கள்தான் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்த்துப் பிழைக்கவைத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். வேலையைவிட்டு நின்றபிறகும் கூட மனிதாபிமானத்துடன் தான் உதவி செய்திருக்கிறோம்.

சிகிச்சைக்குப் பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும், திடீரென அவர் இறப்பதற்கு என்ன காரணம்? ‘இதெல்லாம் 50, 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். குடித்ததில் உடல் உறுப்புகள் பாழாகிவிட்டன. யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று சொல்லித்தான் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். யாரென்று தெரியாதவர்களுக்குக் கூட எவ்வளவோ உதவிகள் செய்கிறோம். எங்களிடம் வேலை பார்த்தவர்களை விட்டுவிடுவோமா என்ன?” என்றவரிடம், ‘விஷால் மீது குற்றம் சுமத்துவதற்கு என்ன காரணமாக இருக்கும்?’ என்று கேட்டேன்.

“தெரியவில்லை. ‘நாங்கள் இவ்வளவு உதவி செய்திருக்கிறோம்’ எனச் சொல்லி இதைவைத்து அரசியல் செய்வதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது. அந்தப் பையன் இறந்து, அந்தக் குடும்பமே சோகத்தில் இருக்கிற நிலையில், நாங்களாக எதையும் நிரூபித்து, அதன்மூலம் நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை என்று முடித்துக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்