முதல் பார்வை: சீமராஜா

By உதிரன்

பொறுப்பில்லாமல் வெட்டியாய்த் திரியும் ராஜா தன் வரலாற்றுப் பின்புலம் அறிந்து விவேகமுடன் செயல்பட்டால் அவரே 'சீமராஜா'.

ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ராஜ வாரிசான சீமராஜாவை (சிவகார்த்திகேயன்) சிங்கம்பட்டி கிராமமே மரியாதையுடன் வணங்குகிறது. அந்த மிதப்பில் கணக்குப்பிள்ளையுடன் (சூரி) ஊர் முழுக்க சும்மாவே வலம் வருகிறார் சீமராஜா. நீதிமன்ற தடை உத்தரவால் பூட்டிக்கிடக்கும் சந்தை மடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகக் கைதாகிறார். மகனைப் பொறுப்போடு நடந்துகொள்ளுமாறு அரிய ராஜா (நெப்போலியன்) அடிக்கடி அறிவுரை கூறுகிறார். அப்பா சொல்லும் விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கண்டும்கொள்ளாமல் சுதந்திரச் செல்வி (சமந்தா) மீதான காதலில் மட்டும் தீவிரம் காட்டுகிறார். இந்த சூழலில் பல ஆண்டுகள் பகையை நினைத்து பழிதீர்க்க நினைக்கிறார் காத்தாடி கண்ணன் (லால்). அப்படி என்ன பகை, சீமராஜாவின் புன்புலம் என்ன, சுதந்திரச் செல்வி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா. தன் முந்தைய படங்களில் இருக்கும் வணிக அம்சங்களை அப்படியே இதிலும் நகல் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அது பல இடங்களில் எடுபடவில்லை என்பதுதான் சோகம்.

ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கான அத்தனை பில்டப்புகளும் சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா படத்தில் முழுமையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிவகார்த்திகேயனும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு நடிக்கிறார். விஜய், சிம்புவைப் போல நன்றாக நடனம் ஆடுகிறார். ஆனால், படத்தின் முக்கியக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் அழுத்தம் இல்லாமல் நடிக்கிறார். இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே இல்லாமல் விவரமான இளைஞராக சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போமாக!

30 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சமந்தா யுடர்ன் அடித்து முதல் படக் கதாநாயகியைப் போல கதாநாயகனைக் காதலிக்கும் பாத்திரத்தில் வந்து போகிறார். சிலம்புச் செல்வியாய் சுற்றிச் சுழலும்போது மட்டும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

சூரி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். அவரின் சிக்ஸ் பேக் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் சிரிப்புதான் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. சூரி இருந்தும் நகைச்சுவையில் பொன்ராம் வறட்சி காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை.

சிம்ரன், லால், நெப்போலியன் ஆகிய மூவரும் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். சிம்ரன் படம் முழுக்க காரணமே இல்லாமல் கத்திக்கொண்டே இருக்கிறார். காளீஸ்வரி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் கடைசி வரை அந்நியமாகவே இருக்கிறார். அவரிடம் வில்லத்தனம் முழுக்க மிஸ்ஸிங். லால் வெற்றுச் சவடால் விடும் நபராகவே இருக்கிறார். அவர் கதாபாத்திரத்திரம் பலமாகக் கட்டமைக்கப்படவில்லை. நெப்போலியனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மு.ராமசாமி, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ரிஷிகாந்த் ஆகியோர் உள்ளேன் ஐயா என்று மட்டும் அட்டனென்ஸ் போட்டிருக்கிறார்கள்.

பாலசுப்ரமணியெம் கிராமத்து அழகைக் கண்களுக்குள் கடத்துகிறார். இமானின் இசையில் பல பாடல்கள் கேட்ட ரகம். சீமராஜா, உன்னவிட்டா யாரும் எனக்கில்லை ஆகிய இரு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கதையோட்டத்துடன் கூடிய பின்னணி இசையில் இமான் கவனிக்க வைக்கிறார். வரும் ஆனா வராது பாடல் ஸ்பீட் பிரேக்கர்.

மாஸ் மசாலா சினிமாவில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் இருக்குமோ அவை அத்தனையையும் பட்டியல் போட்டு இயக்குநர் பொன்ராம் படத்தில் செருகி இருக்கிறாரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு நகைச்சுவை, பாடல், பிரச்சினை, சோகம் என அடுத்தடுத்த காட்சிகள் பின்தொடர்கின்றன. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்களே யூகிக்க முடிகிறது. அப்படி யூகிக்கும் அத்தனையும் திரையில் காட்சிகளாக விரிவதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் நகர்கிறது.

சமந்தாவைக் காதலிக்க வைப்பதற்காக சிவகார்த்திகேயன் போடும் ராமர் வேடம், புறாக்களைக் கண்டுபிடிப்பதற்காக போடும் வாட்ச் விற்பவர் வேடம், நாயைப் புலி என்று நம்பவைக்கும் காட்சிகள் என அத்தனையும் ரிப்பீட் என்பதால் சலிப்பை வரவழைக்கின்றன. வரலாறு பேசும் கடம்பவேல் ராஜா குறித்த காட்சிகள் படத்தில் செயற்கையாக உள்ளன. இதற்கெல்லாம் காரணம் திரைக்கதை என்ற அம்சத்தைப் பற்றி பொன்ராம் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதுதான். பார்த்த படங்களில் இருந்து பழக்கப்பட்ட காட்சிகளே மறுபடி மறுபடி வருவதால் மசாலா படத்தின் அத்தனை டெம்ப்ளேட்களும் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கதாபாத்திரப் படைப்பில் கனத்தைக் கூட்டி, திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் 'சீமராஜா' சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருப்பான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்