தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்..,
'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே...
அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவாக நான் எந்த வேலையையும் வைத்துக் கொள்வதில்லை.
சொல்லப்போனால் நானும் சூர்யாவும் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒன்றாக உட்கார்ந்து முக்கியமான நாட்களையும், குழந்தைகளின் விடுமுறைகளையும் குறித்துக் கொள்வோம். அந்த நாட்கள் எங்களுக்கானவை. அதில் எந்த மாற்றமும் செய்வதில்லை.
எந்தக் காரணத்துக்காக அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்?
முதல் காரணம், அது மணி சார் படம், அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அத்தனை அழகாக எழுதுவார். எல்லா நடிகர்களுக்கும் அதில் நடிக்கச் சமமான வாய்ப்பு இருக்கும்.
மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
படப்பிடிப்பில் நான் தொடர்ந்து அவரைக் கவனித்துக் கொண்டே இருப்பேன். அவருடன் சேர்ந்து வேலை பார்த்தேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை, அதுவும் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில்...
படப்பிடிப்புத் தளத்துக்கு உயிர்கொடுப்பதே அவர்தான். கேமரா இயங்குவதற்கு முன்னால் எங்கள் ஒவ்வொருவருடனும் உட்கார்ந்து பேசுவார். எது சரி, எது தவறு என்று நாங்கள் கூறவேண்டும் என எதிர்பார்ப்பார்.
படத்தில் அரவிந்த் சாமியின் மனைவியாக நடித்திருக்கிறீர்கள்...
ஆம், படத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். ஆனால், அதுகுறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கும்.
பாலா படத் தளத்தில் இருந்து, மணிரத்னத்தின் படத்துக்குள் வருவது எப்படி இருந்தது?
இரண்டு இயக்குநர்களுமே வெவ்வேறு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். மணி சார் சொல்லிக்கொண்டே இருப்பார். ''ஜோ, 'நாச்சியார்' படத்திலிருந்து வெளியே வாருங்கள்!'' என்று.
பாலா படத்தில் அவரே பொறுப்பு எடுத்துக்கொள்வார். அங்கு நடிக்கும்போது உங்களால் தவறு செய்யமுடியாது.தேவையான உணர்ச்சிகளை எடுத்துக் கொள்வதில் அவர் மேஜிக் நிகழ்த்துவார்.
மணி சார் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்க விடுவார். ஒரே நேரத்தில் இரண்டு சிறப்பான இயக்குநர்களிடம் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
'நாச்சியார்' பட விளம்பரத்தில் நீங்கள் பேசிய வார்த்தை, ஏராளமான விமர்சனத்துக்கு உள்ளானதே?
இதை நான் ஸ்டைலுக்காகச் செய்யவில்லை. அது ஒரு காரணத்துக்காகச் சொல்லப்பட்டது. ஒரு நடிகையாக சமூகப் பொறுப்புள்ள விஷயங்களைச் செய்யவே விரும்புகிறேன். பாலாவின் படமும் அதைத்தான் முன்னெடுப்பதாக நினைக்கிறேன்.
உங்களின் மகளை யாராவது தொட்டால், அவரை அடிப்பதோ, மோசமான வார்த்தையால் திட்டுவதோ, ஓர் அம்மாவுக்கு இயல்பானதுதான். 'நாச்சியார்' படத்துக்காக என்னுடைய பாதுகாப்பு வளையத்தில் இருந்து (comfort zone) நான் வெளியே வரவில்லை.
’தும்ஹரி சுலு’ என்னும் இந்திப் படத்தின் தமிழாக்கத்தில் நடிக்கிறீர்கள்.. அனுபவம் எப்படி இருக்கிறது?
தமிழ்ப் பெண் எப்படி இருப்பாளோ, யோசிப்பாளோ அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்திருக்கிறோம். மூலப்படத்தை எடுத்தவர் புத்திசாலியாக இருக்கும்போது, ரீமேக்கை சிறப்பாக எடுப்பது சிரமம்தான். முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறோம்.
பெரிய ஹீரோக்கள், பெரிய படங்கள்... உங்களுடைய முதல் இன்னிங்ஸைத் திரும்பிப் பார்த்தால் எப்படி இருக்கிறது?
அப்போது சிம்ரன், சினேகா, மீரா ஜாஸ்மின் என்னுடைய சமகாலத்திய நடிகைகளாக இருந்தார்கள். நாங்கள் பெரிய ஹீரோ படங்களில் நடித்தோம், அழுத்தமான கதாபாத்திரங்களும் கிடைத்தன.
'டும் டும் டும்', 'குஷி', 'பூவெல்லாம் உன் வாசம்' ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். சில படங்களில் பணத்துக்காக நடித்திருந்தாலும் பெரும்பாலான படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருப்பேன்.
கோலிவுட்டில் நயன்தாரா முன்னணியில் இருக்கிறார். இரண்டு முறை தொடர்ந்து ஹிட் அடித்திருக்கிறாரே...
எப்போதும் கூடுதல் முயற்சிகளை எடுக்கும் அவரைப் பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. அது அத்தனை எளிதல்ல. ஹீரோக்களை முதன்மைப்படுத்தாத படங்களில், ஒரே நாளில் 3, 4 சீன்களில் நடித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்துக் கொடுப்பது மிகவும் கடினமான காரியம்.
நடிப்பது பெரிய கலை. அத்துடன் பல தடைகளைத் தாண்டி நேரம், பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துத் தருவது அதைவிடப் பெரிய கலை. ஒரு பெண்ணாக வெற்றிகளைப் பெற்று, நயன்தாரா தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி இருப்பது பெரிய சாதனை.
முன்னணி நடிகைகள் இடையே போட்டி இருக்கிறதா?
நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். குறிப்பாக நயன்தாரா, சிம்ரன், நான். ஹீரோக்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு ஓர் இசையமைப்பாளர் கிடைக்கக் கூடப் போராட வேண்டும். பெண்களை மையப்படுத்தும் படங்கள், தொடங்கப்படுவதற்கு முன்பே பிரச்சினைகளைச் சந்திக்கின்றன.
முன்னணி நடிகைகளாக நாங்கள் பிரியாணி சீன்களில் நடிக்க முடியாது. ஒயின் ஷாப்புகளில் இருக்க முடியாது, குழந்தை பெற்றாலும் குண்டாக இருக்கக் கூடாது, இளையவர்களுடன் ரொமான்ஸ் செய்ய முடியாது. வணிக ரீதியாக நிறைய விஷயங்களுக்கு நாங்கள் நோ சொல்கிறோம். ஆனால் அதை நினைத்து எனக்கு சந்தோஷம்தான்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago