நடிகர் விஜய்யின் 44-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் அவரது புதிய படமான ‘பிகில்’ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவரைப் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
எல்லோரும் சொல்வதுபோல் தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப விஜய் அரசியல் குதிப்பாரா? என்கிற கேள்வி சமீபகாலமாக வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் அது விஜய் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசும்முன், அவர் கடந்து வந்த பாதையைச் சற்று பார்ப்போம்.
நடிகர் விஜய் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர். இன்னும் சொல்லப்போனால் உச்ச நடிகர். ரஜினியைப் போல் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்டவர் என்பதும் தெரிந்ததே. அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் லயோலா கல்லூரியில் விஸ்காம் மாணவர். சக மாணவர்கள் சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இயக்குநர் விஷ்ணுவர்தன் போன்றோர்.
இடையில் படிப்பை நிறுத்திய விஜய்யை கதாநாயகனாக வைத்து 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்கிற படத்தை எடுத்தார் எஸ்.ஏ.சி. அதன்பின்னர் 'செந்தூரப் பாண்டி' படத்தை எடுத்தார். அவர் படத்தில் நன்றிக்கடனாக அப்போதைய மெகா ஸ்டார் விஜயகாந்த் கவுரவ வேடம் ஏற்று நடித்துக்கொடுத்தார். அதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் விஜய் கொண்டு சேர்க்கப்பட்டார்.
ரஜினி, கமல், விஜயகாந்த் சற்று வயதான நடிகர்களாகப் பார்க்கப்பட்ட காலகட்டத்தில் இளம் கல்லூரி மாணவனாக பிரசாந்த், விஜய், அஜித், சூர்யா போன்றோர் உள்ளே நுழைந்தனர். இதில் ஆரம்பத்தில் கொத்துப்பரோட்டா, முட்டைப்பரோட்டா என்று பாடிக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்த விஜய்யை சகலரும் ரசிக்கும் விதத்தில் பாத்திரம் அமைத்தவர் பாசில். 'காதலுக்கு மரியாதை' அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அதன் பின்னர் அஜித், விஜய் அடுத்த காலகட்ட இளம் ரசிகர்களின் ஆதர்ச கதாநாயகன்கள் ஆனார்கள். 1999-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தனது ரசிகையான சங்கீதாவை மணந்தார். தற்போது விஜய்க்கு 19 வயதில் ஒரு மகனும், 14 வயதில் மகளும் உள்ளனர்.
விஜய்யின் காலடி ஒவ்வொன்றும் திட்டமிட்டு அளந்து எடுத்துவைக்கப்பட்டது. விஜய்யை முன்னணி நடிகராக்கியதில் தந்தை சந்திரசேகருக்குப் பெரும் பங்குண்டு. ஆனால், அரசியலில் அவரால் காலூன்ற முடியாமல் போனதில் சந்திரசேகருக்கு முக்கியப் பங்குண்டு என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
அரசியலுக்கு வருவார் எனக்கூறப்பட்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். காரணம் நடிகர்களிலேயே அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுள்ள நடிகர் என்றால் அது விஜய் என்பார்கள்.
விஜய் அவ்வப்போது அரசியல் சார்ந்த விஷயங்களை பட்டும்படாமல் தொடுவது உண்டு. இலங்கை பிரச்சினை, பின்னர் ஆரம்பத்தில் திமுக ஆதரவு, திமுக ஆட்சிக் காலத்தில் திமுகவால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆதரவு நிலைப்பாடு, இடையில் பிரதமரைச் சந்தித்தது.
நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்த அனிதா குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடிடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியது. படத்தில் இலவசத்தை எதிர்த்த கருத்து மூலம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் நிர்வாகிகளால் விமர்சிக்கப்பட்டது.
மற்றொரு படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேசிய வசனம் மூலம் பாஜகவினர் எதிர்ப்பைச் சம்பாதித்தது என விஜய் அரசியலைச் சுற்றியும், அரசியல் விஜய்யைச் சுற்றியும் வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறிய ரஜினி அரசியல் கட்சி தொடங்குவேன் என்றார்.
கமல் தொடங்கியேவிட்டார். விஜயகாந்த் உடல்நிலை காரணமாக ஒதுங்க, சீமான் எப்போதும்போல் களத்தில் நிற்க, உதயநிதி விரைவில் இளைஞரணி நிர்வாகியாகியாகும் சூழ்நிலை இருக்க, இப்போதும் விஜய்க்கான இடம் அரசியலில் உள்ளதாக அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வரும் நேரம் இதுதானா? அவர் அரசியலுக்கு வந்தால் ஜொலிப்பாரா? மக்களவைத் தேர்தலில் மாற்றுக் கருத்துள்ளோர், ஆளுங்கட்சியைப் புறக்கணிக்கும் எண்ணம் கொண்டோர் கமலையும், சீமானையும், டிடிவி தினகரனையும் ஆதரித்த சூழ்நிலையில் விஜய்க்கான பாதை ராஜபாட்டையாக இருக்குமா? போன்ற கேள்விகளை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சமீபத்தில் நடந்த மக்களவைத்தேர்தல் முடிவு தற்போதுள்ள அரசியல் சூழலில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எடுபடுவாரா?
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பலம் கொண்டவர். ஆனால் அவரது அரசியல் நிலைப்பாடு எஸ்.ஏ.சந்திரசேகரின் மிகப்பெரிய பேராசையால் நிலையற்ற தன்மை கொண்டதாக உள்ளது.
எப்படிச் சொல்கிறீர்கள்?
ஈழத்தமிழர் பிரச்சினை வந்தபோது காங்கிரஸை ஆதரித்தார். பின்னர் ராஜ்யசபா, இளைஞர் காங்கிரஸ் தலைவராக வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் மாறுபட்ட நிலை எடுத்தார். பின்னர் பாஜகவை ஆதரித்தார்.
ஒருகாலத்தில் திமுக ஆதரவாளராக இருந்தார். பின்னர் அதிமுக ஆதரவாளராக இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். பின்னர் இலவசங்களை எதிர்த்ததன் மூலம் அதிமுகவினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். ஆகவே மாறிமாறி நிலைப்பாடு எடுப்பவர் என்கிற கெட்ட பெயர் உள்ளது.
அப்படியானால் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு வழி என்ன?
விஜய்யைப் பொறுத்தவரை ஒரு ஐந்தாண்டுகாலம் இந்த இமேஜை மாற்றிவிட்டு மக்கள் மறந்துப்போன பின் அரசியலுக்கு வருவது நல்லது. அவர் மாற்றி மாற்றி நிலைப்பாடு எடுப்பவர் என்கிற பெயர் மாற வேண்டும். இப்போதைக்கு அவர் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது.
சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், ரஜினியின் நிலைப்பாடும் குழப்பத்தில் உள்ள நிலையில் அதைப் பயன்படுத்தி விஜய் அரசியலுக்கு வருவது தவறா?
எஸ்.ஏ.சந்திரசேகரின் நடவடிக்கையால் விஜய் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடு கொண்டவராக கருதப்படுகிறார். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு, திமுக ஆதரவு திமுக எதிர்ப்பு, பாஜக ஆதரவு பாஜக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு அதிமுக எதிர்ப்பு, இப்படி பலதரப்பட்ட நிலைப்பாடு அவரைப் பலவீனமாக்கியுள்ளது.
அதனால் அவர் அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் சொல்லாமல், அவர் சில ஆண்டுகள் தனது ரசிகர் மன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி பின்னர் அரசியலுக்கு வருவது நல்லது.
எஸ்.ஏ.சியின் நிலைப்பாட்டுக்கு விஜய்யைப் பொறுப்பாக்குவது எப்படி சரியாக இருக்கும்?
அப்படித்தான் இருக்க முடியும். மற்றவர்கள் அப்படித்தான் ஒன்றாகப் பார்ப்பார்கள். அவர்கள் மாற்றிக் கருத வேண்டிய அவசியம் இல்லையே.
எம்ஜிஆரோடு அரசியல் செய்த சிவாஜியின் நிலையைப் பாருங்கள். எம்ஜிஆர் அரசியலில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தார், வென்றார். ஆனால் சிவாஜி ஆரம்பத்தில் பெரியாருடன் இருந்தார், திமுகவுக்கு வந்தார், பின்னர் காங்கிரஸ் போனார்.
காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது பலம் வாய்ந்த இந்திராவுடன் போகாமல் காமராஜருடன் சென்றார். பின்னர் இந்திராவுடன் சேர்ந்தார். அதன்பின் தமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியை ஆதரித்தார்.
சிவாஜி கணேசன், மிகப்பெரிய கலைஞர். சினிமாவில் உச்சம் தொட்டவர். ஆனால் அரசியலில் மாறுபட்ட நிலைப்பாட்டால் அவர் அரசியலில் ஒன்றுமில்லாமல் போனார். இதுதான் நம்முன் உள்ள உதாரணம்.
அரசியலில் ஒரே நிலைப்பாடுதான் எப்போதும் வெல்லும். எம்ஜிஆர் அளவுக்கு ரசிகர் பலத்தைக் கொண்டுள்ள விஜய் சில ஆண்டுகள் கருத்துகூறாமல் ரசிகர் மன்றத்தைப் பலப்படுத்தி பின்னர் அரசியலில் குதிப்பதே சிறந்தது.
இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago