ஒரே நாளில் ஒபாமா ஆகிட்டேன்!- ‘நேசமணி’ வடிவேலு நெகிழ்ச்சி நேர்காணல்

By மகராசன் மோகன்

‘‘எம் மாமியா நாகம்மா மேல சத்தியம்!’னு ஒரு காமெடி டிராக்ல வசனம் பேசியிருப்பேன். உண்மையாவே எம் மாமியார் பெயரும் அதுதான்ணே. ஒரு வாரம் முன்னாடி அவங்க காலமாயிட்டாங்க. அந்த காரியத்துக்காக இப்போ மதுரை வந்திருக்கேன். இந்த நேரத்துல என்னைய ஒரேநாள்ல ஒபாமா ஆக்கிட்டாங்க நம்ம மீம்ஸ் புள்ளைங்க..’’ என்று பேசத் தொடங்குகிறார் வடிவேலு.

கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களை ஆட்கொண்ட பெயர் ‘நேசமணி’. சித்திக் இயக்கத்தில் 2001-ல் வந்த ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்டோருடன் இணைந்து ‘நேசமணி’ என்ற பெயின்டிங் கான்ட்ராக்டராக வடிவேலு நடித்திருப்பார். ஒரு காட்சியில் தலையில் சுத்தியல் விழுந்து அவர் மயங்கி கீழே விழும் காட்சியை மையமாக வைத்து ‘பிரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஷ்டேக், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த சூழலில், கண்களில் நகைச்சுவை தெறிக்க, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக வடிவேலு கொடுத்த சிறப்பு நேர்காணல் இனி..

‘வைகைப்புயல்’ வடிவேலுவை ‘நேசமணி’ வடிவேலுவாக சர்வதேச அளவில் தமிழர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்களே?

ஆமாம்ணே.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 500 படங்களுக்கு மேல  நடிச்சாச்சு. ‘இந்த ஜென்மத்துல மக்களை நீ சிரிக்க வைக்கணும்பா வடிவேலு’ன்னு ஆண்டவன் பாக்கியத்தை கொடுத்திருக்கான். அதைசரியா செய்துட்டு வர்றேன்.  நகைச்சுவை என் ரத்தத்துலயே சேர்ந்திருக்குன்னு நம்புறேன். அதைத்தான் படங்கள்லயும் கொடுக்குறேன். பல இயக்குநர்களும் இதை நல்லா புரிஞ்சுக்கிட்டு, என்னை பயன்படுத்திக்கிட்டாங்க.

அந்த வரிசையில இன்னைக்கு உலக அளவுல கொண்டுபோய் சேர்த்திருக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ கதாபாத்திரத்தை உருவாக்கிய ‘ஃப்ரெண்ட்ஸ்’ பட இயக்குநர் சித்திக்கும் நல்ல திறமைசாலி. இப்படி ஒரு கதாபாத்திரம்னு சொல்லிட்டு, ‘ஒரிஜினல் மலையாளப் படத்தை பார்த்துடுங்க வடிவேலு’ன்னு சொன்னார். ‘அது வேண்டாம்ணே.. கதையை மட்டும் சொல்லுங்க. படத்தை பார்த்தா அதோட பாதிப்புவந்துடும்’’ என்று சொல்லி தவிர்த்துட்டேன். அப்படி உருவானதுதான் நேசமணி பாத்திரம்.

‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று ஒரு படத்துக்கு தலைப்பு வைத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துவிட்டதாக தகவல் வருகிறதே?

ஆஹா.. அது எனக்கு தெரியலையே. சில பேர் படம் எடுக்கணும்னு வர்றாங்க. சில பேர் நான் படங்கள்ல பேசின வசனங்களை எல்லாம் பதிவு செய்து விக்கலாம், பணம் பண்ணலாம்னு வந்திருக்காங்க. இங்கே எல்லாம் நடக்குது. என்னத்த செய்ய?

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ திரைப்படம் தொடர்பான பிரச்சினைதான் என்ன?

வெளியில இருக்குறவங்க வாயில வர்றதை எல்லாம் பேசிட்டிருக்காங்கண்ணே.. என்னத்த சொல்றது. முதல்ல வெளிவந்த 23-ம் புலிகேசி நல்ல படம். அதோட 2-ம் பாகமா வர்ற படமும் அதே மாதிரி ரசிகர்களிடம் போய்ச் சேரணும்னு ஆசைப்படுறது ஒருகுத்தமாய்யா. அதை தடுக்கணும்னு சினிமாவுல சில பேர் திரியுறாய்ங்க. முதல் பாகத்துல வேலை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அவங்க யாரும் வேண்டாம்னு படக்குழு முடிவு செய்றாங்க. 24-ம் புலிகேசியில 3 வடிவேலுவா வர்றேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமா இருக்கணுமே.

அது மட்டுமில்லாம, நகைச்சுவையில எனக்குன்னு ஒரு பாணி இருக்கு. அது எல்லோருக்குமே தெரியும். சீரியஸான காட்சின்னா நீங்க சொல்ற மாதிரி நடிச்சுட்டு போயிடுவேன். அதுவே காமெடின்னா, அதுவும் தப்பு தப்பா இருந்தா என்னால ஏத்துக்க முடியாது.  இந்த மாதிரி விஷயங்களுக்கு அந்தப் பட தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் இடையூறாக இருப்பதா சொல்றாங்க. அவர்வெளியில மேடையில பேசும்போது, ‘வடிவேலு நடிக்க வரணும்’கிறார். உள்ளுக்குள்ள வேறு மாதிரி செய்றார். கண்ணுக்கு தெரியாம எனக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க.

தயாரிப்பாளர் சங்கத்துல பேசி எல்லாம் சரிபண்ணிட்டோம். ஆனாலும் திரும்பவும் ஏதோ, யாரோ கட்டைய போட்டுக்கிட்டே இருக்காங்க. இதனால இந்த வடிவேலுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.இதோ பாருங்க. மீம்ஸ் வழியாஇன்னைக்கு சர்வதேச அளவுல என்னை கொண்டாடித் தீர்க்குறாங்க. இந்தமாதிரி மக்களை நான்இன்னமும் சந்தோஷப்படுத்தணும்னு ஆசைப்படுறேன். தயவு செஞ்சு அதுக்கு வழி விடுங்க.

இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உங்களுக்கு உறுதுணையாக இல்லையா?

நடிகர் சங்கம் எடுக்குற நல்ல விஷயங்களில் நான் எப்பவும் கூடவே இருக்கேன். இன்னமும் இருப்பேன்.  நிறைய செய்திருக்கேன். அவங்க யாரும் இதுல தலையிடலையேன்னு வருத்தமாதான் இருக்கு. ஆனா யாரும் எனக்கு துரோகம் செய்யலண்ணே. ஒரு சில பேர்தான் வடிவேலு கால்ஷீட் கொடுக்கல.. அது இதுன்னு எம் மேல வெறுப்பா இருக்காங்க. ஒரு கல்யாண சாப்பாடு போடுறோம்னா உலகத்துக்கேவா போட முடியும்? இந்த விஷயத்துல தயாரிப்பாளர்கள் சங்கம்தான் சரியான முடிவு எடுக்கணும்

கதாநாயகனுக்கு இணையான காட்சிகளை பறித்துவிடுகிறீர்கள் என முன்னணி ஹீரோக்களே உங்கள் நடிப்புக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

ஒரு சிலர் இருக்கலாம். ஆனா, பெரும்பாலும் அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க.  ஒரு படத்துல நகைச்சுவை பகுதியில என் ஐடியா நிச்சயம் இருக்கும். அதுவும் கதை ஓட்டத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும். ‘ஆதவன்’, ‘மருதமலை’ போன்ற படங்களை எடுத்துக்கோங்க. படம் முழுக்க நான் பரவி வருவேன். அந்தமாதிரி செய்யும்போது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். இயக்குநரை தனியே அழைச்சிட்டுப்போய், ‘என்னங்க இது’ன்னு கேட்டு,ஒரு காட்டு காட்டியும் விடலாம். அந்தமாதிரி இடங்களில் எனக்கு கெட்ட பேர் வந்துடுது. கெட்ட பேர விடுங்கண்ணே.. எனக்கு மக்கள் ரசிக்கணும். அதுமட்டும்தான்!

இவ்வளவு நகைச்சுவை காட்சி களை கொடுத்த உங்களுக்கு இயக்குநர் ஆசை வரவில்லையே, ஏன்?

ஒரு கதாபாத்திரம் என் கைக்கு வரும்போது, வேலையை நான் நல்லா செய்யணும்னு அந்த கேரக்டரோட இயக்குநரா மாறிடுவேன். அதுதான் எனக்கும் பிடிக்கும். ஆனா தனியா இயக்கணும்கிற ஆசை எனக்கு எப்பவுமே இருந்ததில்லை.

இப்போ கதைகள் கேட்கிறீர்களா?

10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதைகள் கேட்டு வைத்திருக்கேன். இடையில சில பேர் நின்னுக்கிட்டு அதை நடக்கவிடாம செய்றாங்க. தயாரிப்பாளர்கள் சங்கம் என்னதான் முடிவுக்கு வர்றாங்கன்னு பார்ப்போம்.

உங்களைப் போலவே, கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர் மட்டும் என்ன சாதாரண ஆளா? நகைச்சுவை எங்கே இருந்தாலும் அதை கொண்டாடணும். யாரையும் தப்பா பேசக்கூடாதுண்ணே. காமெடி பண்ணினா மக்களுக்கு ப்ரஸர் குறையணும். அது கூடக்கூடாது அம்புட்டுதேன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

மேலும்