ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது நடிகர் சங்கத் தேர்தலா அல்லது 'ஈகோ' யுத்தமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. குழாயடிச் சண்டை போல, இப்போது சண்டையிடத் தொடங்கியிருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாண்டவர் அணி ஜெயித்தவுடன் பலரும் சந்தோஷமானார்கள். நாசர் தலைமையிலான இந்த இளம் அணி கண்டிப்பாக ஏதாவது நல்லது பண்ணுவார்கள் என்று முன்னணி நடிகர்கள் தொடங்கி நாடக நடிகர்கள் வரை நம்பினார்கள். அதைப் போலவே நடிகர் சங்க நிலத்தை மீட்டது தொடங்கி, அதில் கட்டிடம் கட்டும் பணிகளைத் துரிதமாகத் தொடங்கினார்கள். ஆனால், யாருக்கு முக்கியத்துவம் என்ற ஈகோவில் தான் பாண்டவர் அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
மலேசிய கலை நிகழ்ச்சியில் தொடங்கிய யுத்தம்
நந்தா - ரமணா இருவரும் தொடங்கிய நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்துக்கு விஷால் அளித்த முக்கியத்துவம் பலரும் பிடிக்கவில்லை. எப்படி நமக்கு முக்கியத்துவம் இல்லாமல், அவர்களுக்கு மட்டும் என்ற ஈகோ தொடங்கியது. மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக நந்தா - ரமணா இருவரும் தனியாகப் பொறுப்புகள் கொடுத்தார்கள். அவர்களும் அதைச் செவ்வனே செய்தார்கள். இங்கிருந்து நடிகர்கள் விமான டிக்கெட்டுகள் போடப்பட்டதில் தான் நேரடிப் பிரச்சினை எழுந்தது. சிலருக்கு பிசினஸ் க்ளாஸ் அல்லாமல், சாதாரண டிக்கெட்டுகள் போடப்பட்டன. எப்படி எங்களுக்கு மட்டும் இதில் டிக்கெட்டுகள் போடலாம் என்று பலரும் நேரடியாகவே சண்டையிட்டார்கள். இதனைச் சமாளித்து மலேசிய கலை நிகழ்ச்சியை நல்லபடியாக முடித்துத் திரும்பினார்கள். சென்னை திரும்பியவுடன் சண்டையிட்டவர்கள் யாருமே நடிகர் சங்கப் பணிகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை.
விஷால் மீது தொடங்கிய அதிருப்தி
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், ஆர்.கே.நகர் தேர்தல் என விஷாலும் தன் ஆசை எல்லைகளை விரித்தார். அது அவருடைய நண்பர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும், உடனிருந்த சக பொறுப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர்களும் நேரடியாகவே இது தவறு என்றார்கள். ஆனால், விஷாலோ 'ஆர்.கே.நகர் தேர்தல் என்பது என் தனிப்பட்ட விவகாரம்' என்றார். அப்போது விஷால் பேசிய பேச்சுகள் அனைத்துமே பாண்டவர் அணியினர் மத்தியிலே சலசலப்பை உண்டாக்கியது.
நடிகர் சங்கத்தில் நடைபெற்ற செயற்குழு பலவற்றில் நாசர், விஷால், கருணாஸ், நாசர் என கலந்து கொள்ளவில்லை. அனைத்தையுமே பொன்வண்ணன், நந்தா, ரமணா என பணிபுரியத் தொடங்கினார்கள். கட்டிடம் கட்டும் பணி தொடங்கியவுடன் தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் நம்மிடம் நல்லபடியாகப் பேசியவர்கள், இப்போது ஏன் நமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற 'ஈகோ'வில் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டார்கள்.
புதிய அணிக்கு காரணமான சங்கீதா, குட்டி பத்மினி
D8nk4uxUEAARBC8-2f8jpg100
பாண்டவர் அணியில் தீவிரமாகப் பணிபுரிந்த சங்கீதா மற்றும் குட்டி பத்மினி இருவருமே நமக்கு முக்கியத்துவமில்லை என்று முன்பே விலகினார்கள். அடுத்த தேர்தலில் புதிய அணியில் இணையலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால், புதிய அணி உருவாகக் காரணமாக நாமே இருப்போம் என்று அவர்களே எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் ட்ராப் ஆனதிலிருந்தே கடும் அதிருப்தியில் இருந்தார் ஐசரி கணேஷ். அந்தப் படம் நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக விஷால் - கார்த்தி இருவரும் நடிக்கத் தொடங்கப்பட்டது. அதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பிரபுதேவா இயக்கம், அரங்குகள் என சுமார் 5 கோடி வரை செலவு செய்தார் ஐசரி கணேஷ். ஆனால், படமோ ட்ராப்பானது. தேர்தல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியவுடனே ஐசரி கணேஷ் மேற்பார்வையில் ஒரு அணி உருவாக்கினால் என்ன என்று பேச்சுவார்த்தையில் இறங்கி வெற்றியும் கண்டார்கள் சங்கீதா மற்றும் குட்டி பத்மினி.
விஷாலுக்கு எதிராக ஒன்றிணைந்த அதிருப்தியாளர்கள்
தனது 'உத்தரவு மகாராஜா' படத்துக்காக, தயாரிப்பளார் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது ஒத்துழைப்பு தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார் உதயா. இதே போன்று 'பில்லா பாண்டி' படசமயத்தில் தனக்கு நட்பு ரீதியில் உதவவில்லை என்ற கோபத்தில் இருந்தார் ஆர்.கே.சுரேஷ். இவ்வாறு அதிருப்தியில் இருந்த அனைவரையும் சந்தித்து ஒரே அணியாக உருவாக்கியதில் சங்கீதாவுக்கு முக்கிய பங்குண்டு என்கிறார்கள். இதன் சாராம்சம் என்னவென்றால், யாருக்கெல்லாம் ஈகோ யுத்தத்தில் விஷால் மீது கோபத்தில் இருந்தார்களோ அவர்கள் அனைவருமே இணைந்து உருவாக்கியது தான் ' சுவாமி சங்கரதாஸ் அணி'. தலைவராக யாரை நிற்கவைப்பது என்று பார்க்கும் போது, பாக்யராஜைத் தேர்வு செய்தார்கள்.
முதலில் பெரிய அணியாக உருவாகாது என்ற நினைத்த பாண்டவர் அணி, ஒவ்வொருவராக இணைந்து அணி பெரிதாக நினைத்தவுடன் சவாலாக இருக்குமே என்று அச்சத்தில் தான் இருக்கிறார்கள். அதிலும், தயாரிப்பாளர் சங்கச் செயல்பாடுகளில் விஷால் மீது கடும் அதிருப்தியில் இருந்த பாரதிராஜா, சேரன் என அனைவருமே விஷாலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தங்களுடைய நட்பு வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.
நடிகர் சங்கக் கட்டிடமா, ஈகோவா
இரண்டு அணிகளுமே வாக்குகளைக் கைப்பற்ற நடிகர் சங்கக் கட்டிடத்தை, பொறுப்பேற்ற 6 மாதத்தில் முடிப்போம் என்று பேசி வருகிறார்கள். ஆனால், கட்டிடம் கட்ட இன்னும் 15 கோடி வரை தேவை என்கிறார் பொருளாராக இருந்த கார்த்தி. அடுத்த 6 மாதத்தில் முடிந்துவிடுகிறோம் என்பவர்கள், இதுவரை ஏன் செய்யாமல் இருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்தப் பேச்சுகளில் நடிகர் சங்கக் கட்டிடம் நமது அணியால் முடித்து திறக்கப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய ஈகோ இரண்டு அணியிலும் தலைதூக்கியுள்ளதையும் உணர முடிகிறது.
இப்போது வாக்குகள் சேகரிக்க பலரும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று நாடக நடிகர்களின் வாக்குகளை சேகரிக்கத் தொடங்கினார்கள். அப்போது பலரும் பேசிய வார்த்தைகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதில் இருக்கும் முனைப்பைக் காட்டிலும், பேச்சில் தங்களுக்குள் இருக்கும் ஈகோவே எட்டிப் பார்த்ததைக் காண முடிந்தது. நடிகர் சங்கக் கட்டிடத்தை 6 மாதத்தில் முடிப்போம் என்று இரண்டு அணிகளுமே சொல்கிறார்கள்.
அரசியல் ஈகோவும், பணமும்
கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பணமும், அரசியலும் கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் 3,100 ஓட்டில், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்ற ரீதியில் விளையாடுவதாகக் கூறுகிறார்கள். அதில் இந்த அணி இவ்வளவு அணி தருகிறேன் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்று மற்றொரு அணி போன் போட்டுக் கேட்ட காமெடியும் இந்தத் தேர்தலில் அரங்கேறியுள்ளது.
அரசியல் களத்தில் விஷால் களமிறங்கிய போது, அவரது பேச்சுகள் இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. விஷால் வரக்கூடாது என்று தமிழக அரசு நினைக்கிறது என பாண்டவர் அணியில் துணைத் தலைவராக இருக்கும் பூச்சி முருகன் சொல்கிறார். ஆனால் அவருடன் மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு நிற்கும் கருணாஸ் எம்.எல்.ஏ. விஷால் அணியில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சுவாமி சங்கரதாஸ் அணி முழுக்க அதிமுக பின்னணியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். அதனாலேயே அதிமுக விசுவாசியான பாக்யராஜை தலைவராகப் போட்டியிட வைக்கிறார்கள்.
என்ன தீர்வு?
இந்தத் தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் கலந்துதான் பதவிக்கு வரக்கூடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்த ஈகோ யுத்தம் கண்டிப்பாக அப்போதும் எழும். நடிகர் சங்கக் கட்டிடம் என்பதைத் தாண்டி இப்போது நடைபெறும் இந்த ஈகோ யுத்தம் அப்போது எழமால் இருப்பதே சிறந்தது. அப்படி இருக்குமா என்பது மிகப்பெரிய ஆச்சர்யக்குறி தான்!
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago