தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு, சென்னை திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணக் கொள்ளை இன்னும் தொடர்கிறது.
‘தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். ஆனால், சென்னையில் உள்ள திரையரங்குகள் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர். இதனால், நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “எங்களுடைய கோரிக்கைகளில் எவையெவை ஏற்புடையதோ, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர், எனவே, நாளை (இன்று) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் செயல்படும்” என்று தெரிவித்தார்.
தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக அரசின் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டு அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று எழுந்த புகாரையடுத்து, தமிழக அரசே பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன்படி, மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு 15 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 7 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 1 ஆம் தேதி இந்தக் கட்டணம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இந்தக் கட்டணத்தைப் பல திரையரங்குகள் பின்பற்றவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். குறிப்பாக, சென்னையில் உள்ள பல திரையரங்குகள் இந்த உத்தரவை மதிக்கவேயில்லை.
சத்யம், தேவி, ஏஜிஎஸ் போன்ற ஒருசில திரையரங்குகளே அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கின்றன.
ஆனால், உதயம், கமலா போன்ற பல திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. உதாரணமாக, இந்த திரையரங்குகளில் இரு சக்கர வாகனத்திற்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மால்களில் உள்ள திரையரங்குகளிலும் இதே நிலை தான். உதாரணத்திற்கு, எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாயும், மூன்று மணி நேரத்திற்கு 60 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் படம் பார்க்கச் சென்றாலும் இந்தத் தொகையைத்தான் செலுத்த வேண்டும், ஷாப்பிங் சென்றாலும் இதைத்தான் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அரசு அறிவித்த பின்னரும் திரையரங்குகள் பார்க்கிங் கட்டணத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, பிறமொழிகளில் வெளியாகும் முக்கியமான படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் மால்களில் உள்ள திரையரங்குகளுக்கே செல்வேன். ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது குறைந்தது 80 ரூபாய் பார்க்கிங் கட்டணமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரியால் டிக்கெட் கட்டணம் வேறு உயர்ந்துள்ளது. எனவே, தற்போது படம் பார்ப்பதையே குறைத்துவிட்டேன்” என்கிறார் சினிமா ரசிகரான அஷ்வந்த்.
“எங்கள் குடும்பத்தில் 4 பேர் இருக்கிறோம். 4 பேரும் ஒரு படம் பார்க்க வந்தாலே பார்க்கிங், ஸ்நாக்ஸ் என்று குறைந்தது 1500 ரூபாயாவது செலவாகி விடுகிறது. எனவே, மாதத்துக்கு ஒரு படம் மட்டுமே திரையரங்கில் பார்க்கிறோம். மற்ற படங்களை திருட்டு டிவிடி அல்லது ஆன்லைனில் டவுன்லோடு செய்து பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்கிறார் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர்.
இதுகுறித்து கேட்பதற்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். இருவரிடம் இருந்தும் பதில் வராத நிலையில், கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொண்டோம்.
“தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. ஆனால், சென்னையில் உள்ள ஒருசில திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை நடைமுறைப்படுத்தாததால், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் தான் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது உண்மை கிடையாது” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.
அரசாணை பிறப்பித்த தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா? “நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்க்கிங் கட்டணம் குறித்து மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறோம். உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்” என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.
பார்க்கிங் கட்டணத்தைப் போலவே ஸ்நாக்ஸ் உள்ளிட்ட மற்ற விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை. பொழுதுபோக்கிற்காக திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு, திரையரங்குகள் உண்மையிலேயே சந்தோஷத்தைத்தான் தரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை!
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago