#Pray_for_Neasamani, #PrayforNesamani ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்ட்டானதன் பின்னணி என்ன என்று தெரியவந்துள்ளது. மேலும், நேற்றிரவு முதலே கலகலப்பாய் மாறிப்போனது சமூக வலைத்தளம்.
சமூக வலைத்தளத்தில் எந்த ஹேஷ்டேக்குகள் எப்போது ட்ரெண்ட்டாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. யாராவது ஒரு கருத்தைச் சொல்ல போய் அது இந்தியளவில் ஹேஷ்டேக்குகளாக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகும். அந்த வரிசையில் #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கு இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்க, என்னவென்று பலரும் பார்த்து உலகளவில் ட்ரெண்ட்டாக வைத்தனர்
பின்னணி என்ன?
'Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?' எனப் பதிவிட்டது. மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானவுடன் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். அதில் விக்னேஷ் பிரபாகர் என்பவர் "இதற்குப் பெயர் சுத்தியல். எதன் மீது இதைக் கொண்டு அடித்தாலும் டங் டங் என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலை மீது அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்" என்று கருத்திட்டார். உடனே, "அவர் எப்படியிருக்கிறார்" என மற்றொருவர் கேட்க, "அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவிக் கொடுத்துவிட்டனர்" என்று பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்காக பிராத்திப்போம் என்று ஃபேஸ்புக் பக்கத்தின் கருத்துப் பக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்.
இந்தப் பதிவுகளை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து, ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டார். உடனடியே ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் பற்றிக் கொண்டது. பலரும் இந்த ஹேஷ்டேக்கில் பதிவிடத் தொடங்கினார்கள்.
நேசமணி யார்?
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ஸ்ரீமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. 2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் மிகவும் வரவேற்பைப் பெற்றவை. இதில் வடிவேலுவின் பெயர் நேசமணி. அவர் ஜமீன் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றி, அங்கு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட தன் அணியினரை அழைத்துச் செல்வார். அப்போது வடிவேலுவுக்கும், ரமேஷ் கண்ணாவுக்கு ஆணி புடுங்குவது தொடர்பாக ஒரு காமெடிக் காட்சி வரும். அப்போது ஆணி புடுங்கும் சமயத்தில் ரமேஷ் கண்ணாவின் கைகளிலிருந்து சுத்தியல் நழுவி, கீழே நின்றுக் கொண்டிருந்த வடிவேலுவின் தலையில் விழும். அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் என காமெடியாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் சித்திக்.
இந்த ஹேஷ்டேக் உருவாக்கத்தில் நேசமணி யார் என்று பலரும் குழப்பிப் போனார்கள். பின்பு அதன் பின்புலத்தை தெரிந்து கொண்டு வடிவேலுவின் புகைப்படத்தைப் போட்டு நேசமணி நலம் பெற பிராத்திக்கிறேன் என்று தெரிவித்தார்கள்.
ஒன்றுகூடிய நெட்டிசன்கள்
#Pray_for_Neasamani ஹேஷ்டேக்கில் பதிவுகள் கொட்டத் தொடங்கிய சில மணித்துளிகளில் இந்தியளவில் ட்ரெண்ட்டாகத் தொடங்கியது. அடுத்த சில விநாடிகளில் இந்தியளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டானது. இதில் பல காமெடிகளும் நடந்தது. தமிழகத்தைத் தாண்டி மற்றவர்கள் ஏன் இந்த ஹேஷ்டேக் என்று பலரும் வந்து பார்த்துவிட்டு, 'ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை. ஏன் இப்படி கிண்டல் செய்கிறீர்கள். உண்மையாக பிராத்தியுங்கள்' என்று பதிவிட்டார்கள். இதனால் இரவு முழுவதும் பயங்கர காமெடியாகவே சமூக வலைத்தளம் நகர்ந்தது.
நேசமணிக்காக குரல் கொடுக்காத அரசியல் தலைவர்களை புறக்கணிப்போம் என்று பலரும் தெரிவிக்க, உடனடியாக சில எம்.எல்.ஏக்கள் 'அண்ணனுக்காக காலைல 10 மணிக்கு மொட்டை, 12 மணிக்கு மண் சோறு, மாலையில் தீ மிதி' என்று கிண்டலாக தெரிவித்தார்கள். திரையுலகினர் பலரும் நேசமணிக்காக பிராத்திக்கிறோம் என ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். சில குறும்புக்காரர்களோ 'சுத்தியலை தடை செய்ய வேண்டும், நேசமணி இந்நிலையில் இருக்க அதுவே காரணம்' என்று தெரிவித்தார்கள். மேலும், இதனை பேப்பரில் எழுதி அதை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து ஹேஷ்டேக்கில் பதிவிட்டார்கள்.
சாதமாக்கிக் கொண்ட வியாபார உலகம்
#Pray_for_Neasamani ஹேஷ்டேக் வைரலாகி வருவதைக் கண்ட தொலைக்காட்சியினர், அதனை வைத்து விளம்பரம் செய்யத் தொடங்கினார்கள். நேற்றிரவு (மே 29) கே டி.வி.யில் 'பஞ்சதந்திரம்' படம் ஒளிபரப்பானது. அதில் ரமேஷ் கண்ணா நடித்திருப்பார். உடனடியாக 'நேசமணியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் சர்தார்ஜி மாறுவேஷத்தில் இருக்கிறார். இப்போது 'பஞ்சதந்திரம்' உங்கள் கே டி.வியில்' என ட்வீட் செய்தார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியோ "Contractor நேசமணி விரைவில் குணமடைய ப்ரீத்தி தீ மிதித்து பரிகாரத்தை முடித்துவிட்டார். நீங்களும் வேண்டிக்கோங்க." என்று தங்களது நாடகத்தை விளம்பரப்படுத்தியது. மேலும், சில வியாபார நிறுவனங்கள் நேசமணி ஹேஷ்டேக்கை மையப்படுத்தி தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டன.
இந்த ஹேஷ்டேக் தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், “என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani” என்று தன் பங்குக்கு தெரிவித்தார். மேலும், CSK அணி தங்களுடைய ட்விட்டர் பதிவில், ஒருவரால் மட்டுமே நேசமணியை காப்பாற்ற முடியும் என தோனி புகைப்படத்தை வெளியிட்டது.
புரிய வைத்தது என்ன?
வடிவேலு இப்போது படங்களில் நடிப்பதை சில பிரச்சினைகளால் நிறுத்தி வைத்திருந்தாலும், அவர் மீதான மக்களின் பாசம் என்பது இன்னும் குறையவே இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஹேஷ்டேக் மூலம் தன் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது வடிவேலுவுக்கு தெரிந்திருக்கும். அதை புரிந்துக் கொண்டு அவரும் மீண்டு திரையுலகிற்கு திரும்பி மக்களை மகிழ்விக்க வேண்டும்!
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago