படத் தலைப்பில் திடீர் மாற்றம்: ஐ அப்டேட்ஸ்

ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஐ' படத் தலைப்பு, ஆங்கிலத்தில் 'Ai' என்ற இருந்தது. அது, தற்போது 'நான்' என்ற பொருள்தரும் 'I' என்ற ஒற்றை வார்த்தையாக மாற்றி இருக்கிறார்கள்.

விக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'ஐ' படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்பது உறுதியானது.

இது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, "'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகள் இருப்பதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, 'ஆகாடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் கலந்து கொண்டதால் நானும் அவரும் இணைந்து படம் பண்ணப் போகிறோம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நான், ஷங்கருடன் இணைந்து படம் பண்ணவில்லை" என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமன்றி, 'ஐ' தலைப்பை ஆங்கிலத்தில் அனைவரும் 'AI' என்று உபயோகித்து வந்தார்கள். 'ஐ' படத்தின் இசையினை வெளியிடும் சோனி மியூசிக் நிறுவனம் செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு படத்தின் ஆங்கில போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டது. அதில் 'I' என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே இருந்தது.

இயக்குநர் ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உபயோகித்து வந்த 'Ai' என்று ஆங்கிலத் தலைப்பை 'I' என்ற ஒற்றை எழுத்தாக மாற்றியிருப்பது உறுதியாகி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE