‘லாபம்’. இதுதான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் அடுத்தத் திரைப்படத் தின் தலைப்பு. விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜகபதிபாபு உள்ளிட்ட நடிப்புப் பட்டாளத்தோடு நாளை அம்பாசமுத் திரத்தில் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்.
‘‘மக்களை முழுமையாக மகிழ்விப்பது தான் ஒரு நல்ல திரைப்படம். பொழுது போக்கு என்ற வார்த்தைக்கு அர்த்தமே மக்களை ஆக்கிரமிப்பு செய்வது என்பது தான். ஒரு திரைப்பட இயக்குநராக அந்த வேலையைத்தான் நான் செய்வதாக நம்புகிறேன். அப்படி நகரும் என்னுடைய பயணத்தில் இந்தப் படமும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்!’’ என்கிற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
முதன்முறையாக கிராமம், விவசாயப் பின்னணியில் படமெடுக்கப் போகிறீர்கள் என காற்றில் வந்த செய்தி, உண்மைதானே?
கிராமத்துத் திரைப்படம் என்றால் அதில் பங்காளி பிரச்சினை, அரிவாள், காதல் மறுப்பு, சாதி இதெல்லாம்தான் உள்ளடங்கியிருக்கும் என்ற ஒரு பார்வை இருக்கிறது. கிராமம், அது சார்ந்த விவசாயத்துக்குள் ஒரு நுண் அரசியல், பொருளாதாரப் பார்வை உள்ளது.
அதைத்தான் என்னுடைய படத்தில் மையப்படுத்தப் போகிறேன். சில திரைப்படங்களில் வரும் பாடல் காட்சி அல்லது உரையாடல் பகுதியின் பின்னணியில் (Backdrop) ஒரு வயல்வெளி இருக்கும், அருவி சலசலக்கும். உழைக்கும் மக்கள் பின்னால் இருப்பார்கள். இப்படியான பின்னணியில் இருக்கும் விஷயங்களை முன்னிலைப்படுத்துவதைத் தான் என் பாணியில் சொல்லப்போகிறேன்.
விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் கூட்டணி?
‘புறம்போக்கு’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்து விஜய்சேதுபதிக்கு இறுதிகட்ட செட்டில்மென்ட் முடிக்கும்போது, ‘சார்... உடனே அடுத்தப் படம் ஆரம்பிப்போம். ஒரு வெற்றுப் பேப்பரைக் காட்டுங்க. கையெழுத்துப் போட்டுட்டுப் போறேன்’ன்னு சொன்னார். என் மீது விஜய்சேதுபதிக்கு அப்படி ஒரு பிரியம். படத்தில் அவர் ஒரு விவசாயியாக வருகிறார். பொய்த்துப் போகிற விவசாயத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்ககும் திட்டத்தோடு, போராட்ட குணம் நிறைந்த மனிதராக இருப்பார்.
நாம்தான் எல்லாவற்றையும் எளிதில் மறந்துவிடுபவர்களாக இருக்கிறோமே! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தாலும் மறந்துவிடுகிறோம். ஈழத்தில் லட்சக்கணக்கானப் பேர் கொன்று குவிக்கப்பட்டாலும் மறந்துவிடுகிறோம், நெடுவாசல் பிரச்னையையும் வழக்கம்போல மறந்துவிடுகிறோம். இந்த மாதிரி விஷயங் களை மறக்காத ஒரு மனிதராக படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரம் இருக்கும். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் பல ஊர்களுக்குச் சென்று பாட்டுப் பாடி, நடனமாடி மக்களை மகிழ்விக்கும் பெண்ணாக வர்றாங்க.
வழக்கமான அரசியல் பின்னணியிலான களம் மாதிரிதான் இப்படமும் தெரிகிறதே?
இங்கே அரசியல் கலக்காமல் எந்தத் திரைப்படமும் இல்லை. அடிப்படையில் எனக்குத் தெரிந்த, நான் புரிந்து வைத்திருக்கும் அரசியலை என் படங்கள் வழியே கையாள்கிறேன். தொடர்ந்து இதையே செய்வேன். அப்படி நாம் செய்கிற ஒரு விஷயம், பெரும்பான்மையான மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். காவிரி ஆற்றங்கரையும், தாமிரபரணி ஆற்றங்கரையும்தான் இந்தக் கதைக்கான களம்.
எளிய கதாபாத்திரம், வாழ்வியல் சூழல் என்றாலும்கூட அதிகப் பொருட்செலவில் இப்படத்தை எடுக்க வேண்டும் என நினைக் கிறீர்களே, ஏன்?
இந்தப் படம் பெரிய பட்ஜெட் படம்தான். ஒரு சிறிய குடும்பத்தின் கதை, ஒரு விவசாயியின் வலி என காட்டும்போது அதுக்கு பட்ஜெட் பெரிதாக தேவையில்லைதான். இதில் நான் ஒட்டுமொத்த தேசத்தின் விவசாயிகளைப் பற்றியும் சொல்லப் போகிறேன். அதுக்கு நிறைய செலவாகும்தான். சிறிய பட்ஜெட் படங்கள்தான் சிறந்த படங்கள் என்ற ஒரு பார்வை இங்கே இருக்கிறது. எனக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை.
அது என்ன ‘லாபம்’?
உலகம் முழுக்க உள்ள ஒரே கேள்வி. ‘லாபம் என்றால் என்ன?’ (வாட் ஈஸ் ப்ராஃபிட்) அது எங்கிருந்து வருகிறது? இந்தக் கதையும் அந்தக் கேள்வியை எழுப்பும். அதனால்தான் இந்தத் தலைப்பை தேர்வு செய்தேன்.
படப்பிடிப்பை முன்பே திட்டமிட்டிருந்தீர் களா? இல்லை, மக்களவைத் தேர்தலுக்காக தள்ளி வைத்தீர்களா?
படப்பிடிப்புக்காக பயணிக்கும்போது, நிறைய பணம் தேவைப்படும். படப்பிடிப்புக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கும் போது தேர்தல் நேரத்தில் நிறைய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவும் கிராமத்துப் பின்னணியில் படம் எடுக்கிறேன். தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம்னு பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தை தவிர்க்க நினைத்தேன். அதனால் தான் தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்குகிறேன்.
அரசியல் பார்வை, பொதுவுடைமைக் கருத்து, சமூக சிந்தனை கொண்ட உங்களைப் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்துவிடுகிறீர்களே?
ஓட்டு அரசியல்முறை என்பது உலகம் முழுக்க ஒவ்வொரு வகையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஓட்டு அரசியல் முறை ஒரு வகையாக ஜனநாயக வெளிப்பாடு. ஆனால், அதுவே சரியான ஜனநாயக வெளிப்பாடாக இல்லை. ஏனெனில், தேசிய இனங்களுக்கு அரசியல் அதிகாரத்தை தருவதாக இல்லை என்பது என் கருத்து. ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேரை அழித்த போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தமிழ் தேசிய இனம் கையறு நிலையில் இருந்தது.
தனிப்பெரும்பான்மை என்று கூக்குரலிடும் பா.ஜ.க அரசு மந்திரி சபையைக் கூட்டாமலேயே பண மதிப்பிழப்பு விஷயத்தை அமல்படுத்துகிறது. இப்படி சர்வதிகாரத்தைக் குவிக்கிற அரசுகளை ஒரு தேச பக்தனாக எதிர்க்கவே விரும்புகிறேன். கூட்டாட்சி தத்துவம் வேறு. கூட்டணி ஆட்சி வேறு. தேசிய இனங்களின் அரசியல் அதிகாரம் எப்போது கூட்டாட்சியாக அமைகிறதோ, அப்போதுதான் ஒன்றுபட்ட இந்தியாவாக நம் நாடு இருக்கும்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், 60 ஆண்டுகளாக செய்துவந்த பழைய முறையிலேயே தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று நிற்கிறார்கள். அதனால்தான் இந்தமுறை அரசியலில் இறங்கி வேலை செய்ய பிடிக்கவில்லை. விருப்பமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘மத்தியில் ஆட்சி யார் அமைப்பது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!’ என குரல் எழுப்பும் கமல், சீமான், டிடிவி.தினகரன் ஆகியோர் எடுத்திருக்கும் அரசியல் நகர்வும், பார்வையும் திருப்தியாக தெரிகிறது. இப்போதைய கொள்கையில் இருந்து அவர்கள் மாறாமல் இருந் தால் நல்லது!
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago